South Chennai: ‘மனைவி வங்கி கணக்கில் வெறும் 8 ரூபாய்!’ தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்த்தனின் சொத்து மதிப்பு இதோ!
“வங்கி தனது மனைவியின் வங்கி கணக்கில் வெறும் 8 ரூபாய் மட்டுமே உள்ளதாக கூறி உள்ளார். மேலும் தன் மீது 3 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தனது வேட்புமனுவில் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்”
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
தென் சென்னை வேட்பாளர்கள்
தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் பேராசிரியர் தமிழ்ச்செல்வி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனுத்தாக்கல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
வேட்புமனுத்தாக்கலில் என்ன இருக்கும்?
வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளர் மற்றும் அவரை சேர்ந்த குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வங்கி வைப்புத் தொகை, நிறுவனங்களில் வைத்திருக்கும் பரஸ்பர நிதி மற்றும் நிறுவன பங்குகள், காப்பீடு குறித்த விவரங்கள், கடன் பத்திரங்கள், தனிநபருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ அளித்துள்ள கடன் விவரங்கள், கடன் வாங்கிய விவரங்கள், மோட்டார் வாகனங்கள் குறித்த விவரங்கள், வேட்பாளர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். வேட்புமனுத்தாக்கல் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளது.
சொத்து மதிப்பு:-
தனது பெயரிலும் தனது மனைவி மகள் பெயரிலும் சுமார் 86 லட்சம் மதிப்புடைய அசையும் சொத்துக்கள் உள்ளதாக ஜெ.ஜெயவர்தன் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 12.95 கோடி ரூபாய் அளவுக்கு அசையா சொத்துக்களும், 3 கோடியே 99 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் அளவுக்கு கடனும் உள்ளதாக ஜெயவர்தன் தனது வேட்புமனுவில் கூறி உள்ளார். வேட்புமனுத்தாக்கல் செய்யும் மேலும் வங்கி தனது மனைவியின் வங்கி கணக்கில் வெறும் 8 ரூபாய் மட்டுமே உள்ளதாக கூறி உள்ளார். மேலும் தன் மீது 3 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தனது வேட்புமனுவில் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஜெயவர்தன்?
அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஆன டி.ஜெயவர்தன், சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது 26ஆவது வயதில் வெற்றி பெற்று இந்தியாவிலேயே இளம் வயது எம்பி என்ற பெருமையை பெற்றார்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். அந்த தேர்தலில் 3,02,649 வாக்குகளை ஜெயவர்தன் பெற்று இருந்தார்.
இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக தென் சென்னை தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக டாக்டர் ஜெ.ஜெயவர்தன் களமிறங்குகிறார்.