தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Karthi Chidambaram: ’ஆயிரம் ரூபாயை வச்சு பம்பாய்க்கா போறீங்க?’ உரிமை தொகை குறித்த கார்த்தி சிதம்பரம் பேச்சு வைரல்!

Karthi Chidambaram: ’ஆயிரம் ரூபாயை வச்சு பம்பாய்க்கா போறீங்க?’ உரிமை தொகை குறித்த கார்த்தி சிதம்பரம் பேச்சு வைரல்!

Kathiravan V HT Tamil
Apr 01, 2024 04:52 PM IST

”இந்த ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு பம்பாய் சென்று பங்குகளையா வாங்குகீர்கள், அல்லது டெல்லி செல்கிறீர்களா? லண்டன் செல்கிறீர்களா”

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி!

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அத்தொகுதியின் சிட்டிங் எம்பியாக உள்ள கார்த்தி சிதம்பரமே மீண்டும் வேட்பாளராக அக்கட்சியால் களம் இறக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு எதிராக அதிமுக சார்பில் சேவியர் தாஸும், பாஜக சார்பில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தேவநாதன் யாதவும், நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசியும் போட்டியிடுகின்றனர். 

அம்மாவட்ட அமைச்சர் கே.ஆர்.பெரியக்கருப்பன் உடன் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். 

அப்போது பேசிய அவர், ”என்னை பொறுத்துவரை மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம்; நல்ல பொருளாதார யுக்தி. இதனை மேல்தட்டில் இருப்பவர்கள் கொச்சப்படுத்தலாம். தண்ணீர் வீண் ஆகாமல் இருப்பதற்காக நாம் எப்படி நாம் சொட்டு நீர் பாசனம் செய்கிறோமோ அது போல்தான் இந்த திட்டமும் சொட்டு நீர் பாசனம் போன்றது.

இந்த ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் கடைகளில்தான் செலவு செய்கிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு ஸ்வீட் வாங்கி தருகிறீர்கள், இல்லை என்றால் ஒரு கடையில் கசாப் வாங்குகிறீர்கள், ஒரு டெய்லரிடம் துணி தைக்க பணம் தருகிறீர்கள். இந்த ஆயிரம் ரூபாயை உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் கடைகளில்தான் செலவு செய்கிறீர்கள்.

ஒரு பகுதியில் 20 வீடு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதில் மாதம் 20 ஆயிரம் ரூபாயை உங்கள் வீட்டை சுற்றி செலவு செய்வதால் உங்களை சுற்றி உள்ள உள்ளூர் பொருளாதாரம் வளருகிறது.

இந்த ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு பம்பாய் சென்று பங்குகளையா வாங்குகீர்கள், அல்லது டெல்லி செல்கிறீர்களா? லண்டன் செல்கிறீர்களா?

ஆயிரம் ரூபாயை உங்கள் வீட்டை சுற்றி செலவு செய்வதால் சுற்று வட்டார பொருளாதாரம் வளர இதைவிட சிறந்த பொருளாதர யுக்தியே கிடையாது. இதை கொச்சைப்படுத்துபவர்களுக்கு பொருளாதராமும் தெரியாது, அடித்தட்டு மக்கள் கஷ்டமும் தெரியாது. இந்த ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தொடர நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் கைச்சின்னம் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக சிவகங்கை தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பேசும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

WhatsApp channel