Narendra Modi: ‘போதை விஷம் தமிழ்நாட்டில் பரவிட்டது! இனி சும்மா இருக்க முடியாது!’ நரேந்திர மோடி ஆவேசம்!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Narendra Modi: ‘போதை விஷம் தமிழ்நாட்டில் பரவிட்டது! இனி சும்மா இருக்க முடியாது!’ நரேந்திர மோடி ஆவேசம்!

Narendra Modi: ‘போதை விஷம் தமிழ்நாட்டில் பரவிட்டது! இனி சும்மா இருக்க முடியாது!’ நரேந்திர மோடி ஆவேசம்!

Kathiravan V HT Tamil
Apr 15, 2024 09:34 PM IST

”தமிழ் மொழியை நேசிப்பவர்கள் எல்லோரும் பாஜகவை நேசிக்க தொடங்கி உள்ளீர்கள். பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தமிழுக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தர வாக்கு உறுதி அளித்து உள்ளோம். தமிழ்நாட்டின் பாரம்பரிய சின்னம் உலக சுற்றுலா வரைபடத்தில் கொண்டு வரப்பட உள்ளது”

திருநெல்வேலியில் பிரதமர் நரேந்திர மோடி
திருநெல்வேலியில் பிரதமர் நரேந்திர மோடி

வரலாற்று பெருமைமிக்க நெல்லையில் மாற்றத்தின் குரல் எதிரொலிக்கிறது. உங்களின் உற்சாகம் திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு தூக்கமே தொலைந்து போய்விட்டது. 

தமிழ்புத்தாண்டு வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். அந்த தமிழ்ப்புத்தாண்டிதான் பாஜகவும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஏழைகளுக்கு வீடுகள், முத்ரா கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துளோம். மோடியின் கேரண்டி என பலரும் அதனை பாராட்டுகின்றனர். 

மீனவர்களுக்கு கடல்பாசிகள் மற்றும் முத்து வளர்ப்பதற்கான திட்டங்களையும் தேர்தல் அறிக்கையில் அறிவித்து உள்ளோம். சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் உங்களுக்காக ஓடிக்கொண்டு இருக்கிறது. மிக விரைவில் தெற்கு பகுதியிலும் புல்லட் ரயில் சேவையை தொடங்க திட்டமிட்டு வருகிறோம். புதிய அரசு வந்த உடன் அதற்கான பணிகள் தொடங்கும். 

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள தாய்மார்களும், சகோதரிகளும் மோடியை ஆதரிகிறார்கள் என்று எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். இதற்கு காரணம் என்ன என பலரும் ஆய்வுகளை நடத்துகின்றனர். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தந்துள்ளோம். ஆவாஸ் யோஜானா திட்டத்தில் 12லட்சம் வீடு கட்டி கொடுத்துள்ளோம். 40 லட்சம் பேருக்கு கேஸ் இணைப்பு, 57 லட்சம் கழிப்பறைகள், 3 லட்சம் கோடிக்கு முத்ரா கடன்களை நாங்கள் கொடுத்து உள்ளோம். இப்படி தொண்டு செய்வதால் மகளிர் ஆதரவு கிடைப்பது. 

தமிழ் மொழியை நேசிப்பவர்கள் எல்லோரும் பாஜகவை நேசிக்க தொடங்கி உள்ளீர்கள். பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தமிழுக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தர வாக்கு உறுதி அளித்து உள்ளோம். தமிழ்நாட்டின் பாரம்பரிய சின்னம் உலக சுற்றுலா வரைபடத்தில் கொண்டு வரப்பட உள்ளது. உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என்ற கலாச்சார மையம் ஏற்படுத்தபப்டும். 

இந்தியா கூட்டணியில் உள்ள திமுக-காங்கிரஸ் கட்சிகளின் சித்தாந்தம் வெறுப்பினாலும், எதிர்ப்பினாலும் உருவாக்கப்பட்டது. இவர்கள் திராவிடத்தின் பெயரால் தமிழ் பண்பாட்டை அழிக்க நினைக்கிறார்கள். செங்கோலையும், ஜல்லிக்கட்டையும் அவர்கள் எப்படி எதிர்த்தார்கள் என்பதை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். 

தென் தமிழ்நாட்டில் எனக்கு நினைவுக்கு வருவது வீரமும், தேசப்பற்றும்தான். மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் ஆகியோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் அந்நிய ஆட்சியை எதிர்த்து போராடியவர்கள். நம்முடிய முத்துராமலிங்கத் தேவர் தாக்கத்தால்தான் இந்த பகுதியில் இருந்து ஏராளமான வீரம் மிக்க தமிழர்கள் நேதாஜிக்காக சென்றார்கள். 

இவர்களுக்கு தனிப்பட்ட ஆசைகள் இல்லை, இந்தியா வலுவான நாடாக வர வேண்டுமென அவர்கள் விரும்பினார்கள். இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு அவர்கள் பாணியிலேயே பதில் அடி கொடுக்கிறோம். இந்தியாவின் மீது பற்று வைத்திருக்கும் ஓவ்வொருவருக்கும் பாஜகதான் விருப்பமான கட்சியாக இருக்கும். 

பாஜக எப்போதுமே தமிழையும், தமிழ் நாட்டையும், தமிழ் மக்களையும் மிகவும் நேசிக்கும் கட்சியாகும். அதனால்தான் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் பாஜகவுக்கு மாபெரும் உத்வேகம் கிடைக்கிறது. 

வ.உ.சி அவர்களை நினைத்து பார்க்கிறேன். கப்பலோட்டி அவர் காட்டிய வழியில்தான் பாதுகாப்புத்துறையில் இந்தியா தன்னிறைவு பெற்று வருகிறது. காமராஜர் என்ற மாபெரும் தலைவர் தேசபக்தியும், நேர்மையும் கொண்ட தலைவர். அவரை பின்பற்றிதான் நேர்மையான அரசியலை பாஜக பின்பற்றி வருகிறது. ஆனால் காங்கிரஸ், திமுக கட்சிகள் அவரை அவமதித்து வருகிறது. 

எம்ஜிஆர் என்ற மாபெரும் தலைவரின் கணவுகளை பாஜக முன்னெடுத்து செல்கிறது. எம்ஜிஆரின் பாரம்பரியத்தை திமுக அவமதிப்பு செய்கிறது. செல்வி ஜெயலலிதா அவர்களை சட்டசபையில் திமுக நடத்திய விதத்தை நம்மால் மறக்க முடியாது. 

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்டகால கோரிக்கையை என்.டி.ஏ அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த நரேந்திரன் உங்களை போன்ற தேவேந்திரர்களிடம் இருந்து வேறுபட மனிதன் அல்ல. 

தமிழ்நாட்டின் உயர்நாடியான கச்சத்தீவை திமுக -காங்கிரஸ் கூட்டணி வேறு நாட்டுக்கு கொடுத்தது. திரை மறைவில் செய்த இந்த வரலாற்று பிழையை மன்னிக்க முடியாத குற்றமாக நான் கருதுகிறேன். இது அவர்கள் செய்த தேச துரோகம். 

தமிழ்நாடு போதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. குடும்ப அரசியலில் இருப்பவர்கள் போதை மருந்தை ஊக்குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தை நினைத்து பெற்றோர்கள் கவலைபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். போதை பொருள் என்ற விஷம் தமிழகம் முழுவதும் பரவிவிட்டது. 

ஆனால் இதை இந்த நரேந்திர மோடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். போதை இல்லாத இடத்திற்கு பாஜக உங்களை அழைத்து செல்லும்.  

இத்தனை முறை நான் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். நீங்கள் அத்தனை பேரும் பாஜகவுக்கு மிகப்பெரிய வரவேற்பை தந்து கொண்டு இருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் பாஜக எங்கு உள்ளது என்று கேட்டவர்கள் முகத்தில் கரியை பூசுவது போல் மிகப்பெரிய ஆதரவை தரப்போகிறீர்கள். 

ஒரே ஒரு முறை பாஜகவுக்கு வாக்களியுங்கள்! உங்கள் கனவுகள்தான் எனது லட்சியம். ஒவ்வொரு நிமிடமும் அதை பற்றிதான் நான் சிந்திக்க போகிறேன். 24 மணி நேரமும் 2047ஆம் ஆண்டை பற்றிதான் நான் சிந்தித்து வருகிறேன்.

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.