LokShaba2024:ராமநாதபுரத்தில் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக நிற்கும் ஓபிஎஸ் - முக்குலத்தோர் ஓட்டுகள் தான் டார்கெட்டாம்!
LokShaba2024: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
LokShaba2024: 18ஆவது மக்களவைத் தேர்தலில், பாஜக அனைத்து தொகுதிகளுக்கும் கூட்டணிக்கு ஒதுக்கிவிட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வம் இந்தத் தேர்தலில் போட்டியிடுவாரா எனக் குழப்பம் நிலவி வந்தது. அதற்கேற்றார்போல், இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமைகோரி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும் பாஜக 20 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரஸ் மூன்று இடங்களிலும்; அமமுக இரண்டு இடத்திலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. தவிர, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய நான்கு கட்சிகளும் போட்டியிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் பாஜக கூட்டணி தொகுதிகளைப் பிரித்து விட்ட நிலையில் ஒரு தொகுதியைப் பற்றி தெளிவான விளக்கம் தராமல் இருந்தது.
மேலும் பாஜகவிடம் ஐந்து தொகுதிகளை ஓ.பன்னீர்செல்வம் கேட்டபோது, ஐந்து தொகுதிகளிலும் தாமரைச் சின்னத்தில் தான் நிற்கவேண்டும் எனக் கேட்டதால், அந்தப் பேச்சுவார்த்தையில் இருந்துபின்வாங்கிய ஓ.பன்னீர்செல்வம் ஒரு தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக நிற்க முடிவுசெய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக மார்ச் 21ஆம் தேதி, இரவு 9 மணிவாக்கில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘’சுயேச்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் நானே போட்டியிடுகிறேன். என்னுடைய பலத்தை நிரூபிக்கவும், அதிமுகவின் உண்மைத் தொண்டர்களின் பலத்தை நிரூபிக்கவும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறோம். இதற்காக நான்கைந்து சின்னங்கள் ஆலோசித்து வைத்துள்ளோம். தேர்தல் ஆணையம் தருவதைப் பொறுத்து வெளியில் அறிவிப்போம். 15க்கும் அதிகமான தொகுதிகளை பாஜகவிடம் கேட்டோம். அவர்கள் தரவில்லை. எனவே, தொண்டர்கள் ஆதரவை நிரூபிக்க, சுயேச்சையாக, பாஜக ஆதரவோடு நிற்கிறேன். இரட்டை இலைச் சின்னத்தினைப் பெறுவதற்காகத் தான் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம். பாஜகவிடம் இருந்து தங்களுக்கு பாசமும் அங்கீகாரமும் உள்ளது. மேலும், நான் தேர்தலில் நிற்கும் முடிவை மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித் ஷாஜியிடம் தெரிவித்தபோது வாழ்த்தினார்’’ என்றார்.
சாதி ஓட்டுகளை டார்கெட் செய்த ஓ.பன்னீர்செல்வம்: ஓ.பன்னீர்செல்வம் பிறப்பால் மறவர் என்னும் முக்குலத்தோர் பிரிவைச் சார்ந்தவர். இத்தனை நாட்களாக, சாதி அரசியல் செய்பவர்களை பக்கத்தில் சேர்த்துக்கொள்ளாத, ஓ.பன்னீர்செல்வம், இறுதியாக அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கூட, எட்டுப்பட்டறை எனப்படும் எட்டு சாதிகளைச் சேர்ந்த மக்களின் சமூகத் தலைவர்களை கூட்டம் நடத்தி வாக்குசேகரித்து வென்ற ஓ.பன்னீர்செல்வம், இந்தமுறை முழுக்க முழுக்க முக்குலத்தோர் வாக்குகள் அதிகம் இருக்கும் ராமநாதபுரத் தொகுதியை, திட்டமிட்டு இருப்பது பலருக்கும் ஆச்சரியம் தான்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இருந்து முக்குலத்தோரைச் சார்ந்த சசிகலாவையும்,டிடிவி தினகரனையும், ஓ.பன்னீர் செல்வத்தையும் நீக்கியது தென்மாவட்ட மக்கள் இடையே வெறுப்பு அரசியலாக மாறி, அதிமுகவின் ஓட்டுகள் பாதி அமமுகவிற்கு சென்றது. கடந்தமுறை ராம்நாட் மற்றும் சிவகங்கை தொகுதியில் மட்டும் அமமுக கணிசமான வாக்குகளை அள்ளியது. அதன்பலனை இந்தமுறை ஓ.பன்னீர்செல்வம் அறுவடை செய்யப்பார்க்கின்றார் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின்போது வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடாக 10.5 விழுக்காடு தரப்பட்டது, தென் மாவட்டத்தைச் சார்ந்த முக்குலத்தோர் மற்றும் பிற சமூக மக்களுக்கு எரிச்சலை மூட்டியது. இவையெல்லாம், ஓ.பன்னீர்செல்வம் வெல்வதற்கு வலுவான காரணங்களாக இருப்பதால், அதைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு எடுத்துள்ளார்.
டாபிக்ஸ்