Lok Sabha elections: ’4ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் 62.8% வாக்குக்கள் பதிவு!’ மேற்கு வங்கத்தில் வன்முறை!
“2024 மக்களவைத் தேர்தலின் முதல் மூன்று கட்டங்களில், வாக்குப்பதிவு 66.14, 66.71, 65.68 சதவீத வாக்குகளை பெற்று உள்ளது”
10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளில் நான்காம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இரவு 8 மணி நிலவரப்படி 62.8 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. நான்காம் கட்ட தேர்தலில் எட்டு தொகுதிகளில் மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 75.94 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஆந்திர பிரதேசத்தில் 68.12 சதவீதமும், மத்தியப் பிரதேசத்தில் 68.63 சதவீதமும், பீகாரில் 55.90 சதவீதமும், ஜார்க்கண்டில் 63.37 சதவீதமும், மகாராஷ்டிராவில் 52.75 சதவீதமும். உத்தரப்பிரதேசத்தில் 57.88 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது.
4ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:-
1. 2024 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலின் முதல் மூன்று கட்டங்களில் வாக்குப்பதிவு வீழ்ச்சியைக் கண்ட பின்னர், அடுத்தடுத்த கட்டங்களில் வாக்குப்பதிவு மேம்படும் என இந்திய தேர்தல் ஆணையம் (ECI) எதிர்பார்க்கிறது.
2. நாடு முழுவதும் பெரும்பாலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது, ஆனால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் பதிவாகி உள்ளன. மேற்கு வங்கத்தில் பிர்பும், பர்தமான்-துர்காபூர் தொகுதிகளின் பல்வேறு பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் மோதிக் கொண்டனர்.
3. ஆந்திராவில், பல்நாடு, கடப்பா மற்றும் அன்னமய்யா மாவட்டங்களில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சியை சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
4. ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கே.மாதவி லதா புர்கா அணிந்த பெண்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த முகத்தை வெளிப்படுத்துமாறு கேட்கும் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலானது. இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
5. தெலங்கானாவில் 90 சதவீத வாக்குச்சாவடிகளில் சமரசம் நடைபெற்று உள்ளதாகவும். புர்கா அணிந்து வருபவர்களை அடையாள அட்டை காட்டி முகத்தை காட்டுமாறு பெண் கான்ஸ்டபிள்களுக்கு போலீசார் அறிவுறுத்தவிரும்பவில்லை. இது குறித்து போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, அது அவரது பொறுப்பு அல்ல என்று கூறியதாக பாஜக வேட்பாளர் மாதவி லதா தனது விளக்கத்தில் கூறி உள்ளார்.
6. ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 36.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஜம்மு-காஷ்மீரின் பட்காம், கந்தர்பால், புல்வாமா மற்றும் சோபியான் மாவட்டங்கள் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும், இந்த தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 14.43 சதவீத வாக்குகளைப் பதிவு ஆகி இருந்தது.
7. 4ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் 1,717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
8. 175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டமன்றத்திற்கும், மக்களவைத் தேர்தலின் 4 ஆம் கட்டத்துடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுடன் கூட்டணியில் தேர்தலில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
9. ஒடிசாவின் 28 சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. பிஜு ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பது நவீன் பட்நாயக் தலைமையிலான அரசுக்கு மும்முனைப் போட்டியை ஏற்படுத்தி உள்ளது.
2024 மக்களவைத் தேர்தலின் முதல் மூன்று கட்டங்களில், வாக்குப்பதிவு 66.14, 66.71, 65.68 சதவீத வாக்குகளை பெற்று உள்ளது.