Modi vs MK Stalin: ’நிதி தராத ஒன்றிய அரசு மீது வழக்குத் தொடர்வேன்!’ முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
”பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் - ஒருதாய் மக்களாக ஒற்றுமையாக வாழும் இந்தியாவை, வெறுப்பு விதைகளைத் தூவி நாசம் செய்துவிடுவார்கள்! அதை மனதில் வைத்து, அமைதியான – வளர்ச்சியை நோக்கிய இந்தியாவுக்காக நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கத்தான் நான் வந்திருக்கிறேன்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி – ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி – விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் – தாரகை கத்பெர்ட் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், வீரத்தின் விளைநிலமாக இருக்கும் திருநெல்வேலி சீமைக்கு வந்திருக்கிறேன்! வான்புகழ் கொண்ட வள்ளுவருக்கு 133 அடியில் வானுயர சிலையைத் தலைவர் கலைஞர் அமைத்த தென்குமரி முனைக்கு வந்திருக்கிறேன்!
குமரி முதல் இமயம் வரை என்று சொல்வோம்! அப்படிப்பட்ட பரந்து விரிந்த இந்த இந்திய நாட்டில் ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில் வெற்றி பெற உங்கள் ஆதரவைக் கேட்டு நான் வந்திருக்கிறேன்.