Anbumani Ramadoss: ’அமெரிக்காவில் கிடைக்கும் போதை பொருட்கள் தமிழ்நாட்டில் கிடைக்கிறது!’ அன்புமணி வேதனை!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Anbumani Ramadoss: ’அமெரிக்காவில் கிடைக்கும் போதை பொருட்கள் தமிழ்நாட்டில் கிடைக்கிறது!’ அன்புமணி வேதனை!

Anbumani Ramadoss: ’அமெரிக்காவில் கிடைக்கும் போதை பொருட்கள் தமிழ்நாட்டில் கிடைக்கிறது!’ அன்புமணி வேதனை!

Kathiravan V HT Tamil
Apr 01, 2024 09:14 PM IST

“அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்காதீர்கள், அவர்களுக்கு பிரதமர் வேட்பாளர் இல்லை. அவர்கள் கூட்டணியில் தேசிய கட்சிகளும் இல்லை”

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருக்கழுக்குன்றத்தில் பரப்புரையில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருக்கழுக்குன்றத்தில் பரப்புரையில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

அப்போது பேசிய அவர், 57 ஆண்டுகளாக திமுக அதிமுக மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டு நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் முழுவதும் நான் சுற்றி வந்ததில், இவர்கள் இருவரும் போதும் என்ற மனநிலை மக்களுக்கு வந்துவிட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த கூட்டணியை நாம் உருவாக்கி இருக்கிறோம்.

இவர்கள் இருவரும் மாறி மாறி ஆட்சி செய்ததால் உங்களுக்கு என்ன கிடைத்தது? இளைஞர்களுக்கு வேலை கிடைத்ததா? விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? ஒரு தாய்மார்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? எங்கு பார்த்தாலும் சாராயம் சாராயம், மறுபக்கம் பார்த்தால் போதை பொருள், அமெரிக்காவில் கிடைக்கும் அத்தனை போதை பொருட்கள் தமிழ்நாட்டில் கிடைக்கிறது.

அண்ணா இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர், தமிழுக்காக, தமிழ் மக்களுக்காக, தமிழர்கள் முன்னேற்றத்திற்காக, சமூக நீதிக்காக, திராவிட கட்சி தொடங்கினார். அண்ணாவின் பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்கள், அண்ணாவின் கொள்கைகளை மறந்து விட்டார்கள். அண்ணாவின் கொள்கை ஒரு சொட்டு சாராயம் இல்லாத தமிழ்நாடு, தற்போது எங்கும் சாராயம் எதிலும் சாராயம், தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி குடிகார நாடு என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டது.

திராவிட மடல் என்றால் என்ன? மது இல்லாமல் என்னுடைய தம்பிகள் இருக்க முடியாது என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியது தான் திராவிட மாடல்.  

பால் போன்ற பாலாற்றில் தற்போது மணல் கூட இல்லை, மண்ணை கொள்ளையடித்து விட்டார்கள். இவர்கள் தொடர்ந்தால் ஆறே காணாமல் போய்விடும். தமிழ்நாடு அரசு நிர்வாகம் செய்ய மணலை வணிகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேடையில் சமூக நீதி சமூக நீதி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள், சமூக நீதி என்றால் என்னவென்று இவர்களுக்கு தெரியுமா? இந்தியாவிலே சமூகநீதியின் ஒரே தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் மட்டும்தான்.  

கடந்த வாரம் சேலத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம், பாரத பிரதமர் மோடி அவர்கள், மருத்துவர் ஐயா அவர்களை கட்டி பிடித்துக் கொண்டார். ஐயா மீது பாசம் மட்டுமல்ல மிகுந்த மரியாதையும் வைத்திருப்பவர் பாரத பிரதமர் மோடி அவர்கள். இதற்கு முன்பு பிரதமராக இருந்த வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களுடன் நெருங்கிய நட்பு இருந்தது. 

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு மருத்துவர் அய்யாவின் அனுபவமும், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் திறமையும் தேவை என பிரதமர் பேசி இருப்பது நமக்கு பெருமை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்தியாவிலேயே மிக மூத்த தலைவர் மருத்துவர் அய்யா. இந்த நட்பை பயன்படுத்தி தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பிரச்சனைகளையும் மருத்துவர் அய்யா அவர்கள் தீர்த்து வைப்பார்.

திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, நாங்கள் கேட்டோம் அவர்கள் கொடுக்கவில்லை என்கிறார்கள். சண்டை போடுவது நிர்வாகத்திற்கு நல்லதல்ல, அரசியல் ரீதியாக பேசலாம் ஆனால் எதிரி போன்று சண்டை போடுவது நல்லதல்ல. 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பினீர்களே, அவர்களால் உங்களுக்கு என்ன புண்ணியம்? அவர்களை மீண்டும் அனுப்ப போகிறீர்களா?

இந்த தொகுதியைச் சேர்ந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் தெரியுமா? ஏதாவது செய்திருந்தால் தெரிந்திருக்கும். பத்தாண்டு காலம் இந்த தொகுதியில் பாமக முன்னாள் எம்.பி ஏ.கே.மூர்த்தி இருந்தார். நிறைய செய்திருக்கிறார். அதன்பின் பலர் வந்தார்கள் சென்றார்கள் யாரும் எனக்கு தெரியவில்லை.

இந்த தொகுதி ஏரிகள் மாவட்டம், ஆனால் ஏரியே இல்லை. நமது கொள்கை ஏரி குளங்களை பாதுகாப்பது, நீர்நிலைகளை பாதுகாப்பது, பாலாற்றில் தடுப்பணைகளை கட்டுவது என்று நாம் வலியுறுத்தி வருகிறோம். பல ஆண்டுகளுக்கு பிறகு நமது வலியுறுத்தலுக்கு பிறகு தற்போது இரண்டு மூன்று அணைகளை கட்டி இருக்கிறார்கள். நாம் கடந்த 25 வருடங்களாக இதனை வலியுறுத்தி வருகிறோம்.

ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள், சாராய ஆறு தான் ஓடுகிறது. எங்கே பார்த்தாலும் லஞ்சம், உங்களிடம் வாக்குறுதி கொடுத்தார்களே, செய்தார்களா? நகைக்கடன் தள்ளுபடி செய்வோம் என்றார்கள், தள்ளுபடி செய்தார்களா? கல்விக்கடன் தள்ளுபடி செய்வோம் என்றார்கள், தள்ளுபடி செய்தார்களா? விவசாய கடனை தள்ளுபடி செய்வோம் என்றார்கள், தள்ளுபடி செய்தார்களா?

ஆட்சிக்கு வந்தால் ஒரே வாரத்தில் நீட்டை ஒழிப்போம் என்றார்கள், ஒழித்தார்களா? மாதம் மாதம் மின் கணக்கை எடுப்போம் என்றார்கள் எடுத்தார்களா? எடுத்தார்களா? மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள். இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை.

அரசு ஊழியர்களே ஆசிரியர்களே உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? கடந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக நீங்கள் திமுகவிற்கு ஓட்டு போட்டீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வு ஊதியத்தை கொண்டு வருவோம் என்றார்கள். அவர்களை நம்பி ஓட்டு போட்டீர்களே செய்தார்களா? உங்களுக்கு என்ன கிடைத்தது? இந்தியாவில் ஏழு மாநிலங்களில் பழைய ஓய்வு ஊதியம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நமது தமிழ்நாட்டில் இல்லை.

இது சட்டமன்றத் தேர்தல் இல்லைதான், நாடாளுமன்றத் தேர்தல் தான், இருந்தாலும் நமது கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கானது, 2026 திமுக அல்லது அதிமுக இல்லாத ஒரு ஆட்சி உருவாக அஸ்திவாரத்தை அமைக்க வேண்டும்.

அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்காதீர்கள், அவர்களுக்கு பிரதமர் வேட்பாளர் இல்லை. அவர்கள் கூட்டணியில் தேசிய கட்சிகளும் இல்லை. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கும் பிரதமர் வேட்பாளர் இல்லை, இவர்கள் வெற்றி பெற்று என்ன செய்யப் போகிறார்கள்?; யாரிடம் சென்று கேட்பார்கள்? தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அனுப்புங்கள்!

எடப்பாடி பழனிசாமி எங்களை பார்த்து துரோகம் செய்துவிட்டார் என்கிறார். நாங்கள் என்ன எழுதிக்கொடுத்தா கூட்டணிக்கு வந்தோம்?, 2019இல் நாங்கள் கூட்டணிக்கு வந்ததால் தான் இரண்டு ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்திங்க, இரண்டு ஆண்டுக்காலம் என்ன செய்தீர்கள்? 10 அம்ச கோரிக்கைகளை வைத்தோமே செய்தீர்களா, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினீர்களா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினர். 

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.