EPS On Alliance: 'நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுடன் கூட்டணி' இப்தார் நோன்பு நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
”அன்பிற்கு பாத்திரமான சிறுபான்மையின மக்கள் - நீங்களும் எங்களோடு இருக்கிறீர்கள் பலமான கூட்டணி என்று சிலர் மார்தட்டிக் கொள்கிறார்கள். நாங்களும் பலமான கூட்டணி அமைத்திருக்கிறோம்' தமிழக மக்களோடு கூட்டணி வைத்திருக்கிறோம். இந்தக் கூட்டணியைவிட, வேறு எது பலமான கூட்டணி?”
அதிமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்சியில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
பின்னர் உரையாற்றிய அவர், இந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பு கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். சமுதாய நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெருமை சேர்க்கவும், வருகை தந்திருக்கின்ற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் இறுதியில் இஃப்தார் நிகழ்ச்சியை நடத்துவோம்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, இந்த ஆண்டு ரமலான் மாதத்தின் தொடக்கத்திலேயே 'இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை' நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இஸ்லாமிய பெருமக்களை இதயத்தில் வைத்து நேசித்தவர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அவர் நடத்திக் கொண்டிருந்த இஃப்தார் நிகழ்ச்சியை, அவருடைய விசுவாசத் தொண்டர்களாகிய நாம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றோம். தொடர்ந்து பல ஆண்டுகளாக இஸ்லாமியப் பெருமக்களுக்கு இஃப்தார் விருந்து அளித்து வந்த ஒரே தலைவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, அவர்களைத் தொடர்ந்து நமது கழகம் மட்டும்தான்.
உதட்டிலே மட்டும் அம்மா அவர்களின் பெயரை உச்சரிக்காமல், அவரை உள்ளத்திலே வைத்து பூஜித்துக் கொண்டிருப்பவர்கள் நாம். அந்தப் புனிதத் தலைவியின் வழியிலே புனிதமான ரமலான் மாதத்தையும் சிறப்பித்துக் கொண்டிருக்கிறோம் நாம். புண்ணியங்கள் பூத்துக் குலுங்கும் மாதம் ரமலான் மாதம்; தர்மங்கள் செழித்து நிறையும் மாதம் ரமலான் மாதம்; ஏழை, எளியோர் மீது இரக்கம் காட்ட வேண்டிய மாதம் ரமலான் மாதம்.
- விசுவாசப் பிரகடனம் என்னும் கலிமா...
- தர்ம சிந்தனையோடு ஏழைகளுக்கு வழங்கப்படும் ஜகாத்...
- புனித மெக்கா நகருக்கு செல்லும் ஹஜ் பயணம்.
- ரமலான் மாதத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய நோன்பு...
- இதுதான் இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்.
அந்த வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடமைகளில் ஒன்று இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு பல்வேறு வகைகளில் பாதுகாப்பு அரணாக விளங்கி வருவது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. அந்த வகையில் எங்களது அவைத்தலைவர் ஒரு இசுலாமியர் - அண்ணள் தமிழ்மகன் உசேன் அவர்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது, சட்டம் ஒழுங்கு பேணிகாக்கப்பட்டு பொதுமக்கள், குறிப்பாக சிறுபான்மையின மக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய விடியா திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் உள்ளிட்ட அனைவரும் அச்சத்துடன், பல இன்னல்களுக்கு ஆளாகி, துன்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற, மன அமைதியுடன் வாழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்றி கழகம் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறசெய்வோம், தீய சக்திகளை அகற்றுவோம்.
இந்த உலகில் மனித நேயம் அரிதாகிவிட்டது. அதை மீட்டெடுக்கவும், தீய சிந்தனைகளால் மாறிப்போன மனித உள்ளங்களை தூய்மைப்படுத்த ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அகந்தையை, ஆணவத்தை ஒடுக்கி சிறந்த மனிதராக உயர வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக இஸ்லாமியர்கள் கடைபிடிப்பதுதான் ரமலான் நோன்பு...
இந்தப் புனித மாதத்தில்தான் உலக மக்களுக்கு நல்வழி காட்டுவதற்காகவும், சத்தியத்தை அடையாளம் காட்டுவதற்காகவும் பூமிக்கு அருளப்பட்ட திருமறையாம் திருக்குர் ஆன்' ஆகும். இதனை இஸ்லாமியர்கள் தங்கள் உயிராக நேசிக்கின்றனர்.
மனிதனுக்கு பொறுமையை கற்றுக்கொடுப்பது 'திருக்குர் ஆன்'. இந்த ரமலான் மாதத்தை பொறுமையின் மாதம் என்றுதான் குறிப்பிடுவார்கள். ஒருவன் பொறுமையுடன் நடந்துகொண்டால், அவனுக்கு சொர்க்கமே பரிசாகக் கிடைக்கும் என்று இறைதூதர் 'நபிகள் நாயகம்' அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
நபிகளின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை, இங்கே நான் சொல்ல விரும்புகிறேன். நபிகள் நாயகம் தனது சகாக்களுடன் தினமும் ஒரு தெரு வழியாக நடந்து செல்வார்.
நபிகள் நாயகத்திற்கு கிடைத்த புகழை... சகித்துக் கொள்ள முடியாத ஒரு பெண்மணி, அவர் அந்தத் தெருவில் போகும் பொழுது, தன் வீட்டு மாடி மேலே இருந்து அவர் மீது குப்பைகளைக் கொட்டுவார்.
நபிகள் நாயகம் அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்த்துவிட்டு, கோபப்படாமல், ஆத்திரப்படாமல், அமைதியாக நடந்து போவார்.
நபிகளோடு இருப்பவர்களுக்கோ மிகுந்த கோபம்...
'அந்தப் பெண் உங்கள் மீது குப்பையைக் கொட்டுகிறார். நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே',
என்று ஆவேசப்பட்டார்கள்.
நபிகளிடமிருந்து புன்னகைதான் பதிலாக வந்தது.
தினமும் இதைப் போலவே நபிகள் நாயகம் அந்தத் தெருவில் நடந்து போகும்போது, மாடியில் இருந்து அந்தப் பெண் அவர் மீது குப்பையைக் கொட்டுவார். நபிகள் கோபப்படாமல் போவார். அவருடன் இருப்பவர்களின் ஆத்திரமோ அதிகமாகிக்கொண்டே இருந்தது. ஒரு நாள் நபிகள் நாயகம் அந்தத் தெரு வழியாகப் போகும்பொழுது, அந்தப் பெண் அவர் மீது குப்பையைக் கொட்டவில்லை. நபிகள் நாயகத்திற்கு ஆச்சரியம். நிமிர்ந்து மேலே பார்த்தார். மாடியிலே வழக்கமாக நிற்கும் இடத்திலே அந்தப் பெண் இல்லை.
அந்தப் பெண்மணிக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை... வாருங்கள் மேலே போய் பார்ப்போம் என்று மாடியில் இருக்கும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு நபிகள் சென்றார். சகாக்களும் உடன் சென்றார்கள்.
குப்பை கொட்டிய அந்தப் பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கட்டிலில் படுத்திருந்தார். ' தினமும் என்மீது குப்பை கொட்டும் நீங்கள், இன்று கொட்டவில்லை.
அதனால்தான் உங்களுக்கு என்ன ஆயிற்று என்று பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்'.
மருந்து சாப்பிட்டீர்களா... மருத்துவர்களைப் பார்த்தீர்களா..
நான் வேண்டுமானால் மருத்துவரை அழைத்து வரவா...
என்று பரிவுடன் கேட்க... அந்தப் பெண் உடனே எழுந்து கண் கலங்கியவாறு " ஐயா... நான் தினமும் உங்கள் மீது குப்பை கொட்டி அவமானப்படுத்தினேன்..
ஆனால், நீங்களோ அன்பான வார்த்தைகளால் என் மனதில் இருந்த தீய எண்ணங்களையெல்லாம்
மாற்றி, என்னை நல்லவளாக்கிவிட்டீர்கள்...
உங்கள் பெருமை தெரியாமல் கீழ்த்தரமாக நடந்துகொண்டுவிட்டேன்.
என்னை மன்னித்துவிடுங்கள்”
என்று நபிகள் நாயகத்திடம் மன்னிப்பு கேட்டு அழுதார் அந்தப் பெண்.
இந்தச் சம்பவம் உணர்த்துவது என்னவென்றால், அராஜக வழியில் செல்வபவர்களைவிட, அமைதியான வழியிலே செல்பவர்களுக்குத்தான் இறுதியான உறுதியான வெற்றி கிடைக்கும்.
புழுதிவாரி தூற்றுபவர்களை, பொறுமையுடன், அறவழியில் கடந்து செல்பவர்களுக்குத்தான், உண்மையான வெற்றி கிடைக்கும். நான், நபிகள் நாயகத்தின் வாழ்க்கையைப் பற்றித்தான் சொன்னேன்.
தமிழ் நாட்டு அரசியலைப் பற்றி நான் பேசுவதாக யாராவது நினைத்தால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்.
இதய தெய்வம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், வாய்மையை, நேர்மையை, பொறுமையை, கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டுமென்று நமக்குக் கற்றுக்
கொடுத்தார்கள். நம்மைச் சுற்றி எது நடந்தாலும், நமது இலக்கு வெற்றியை நோக்கி மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
ஒருசிலர் நினைக்கிறார்கள். அவர்களுக்குத்தான் பலம் அதிகமாக இருக்கிறது; அவர்களிடம்தான் அதிகாரம் இருக்கிறது; அதனால், வெற்றி அவர்களுக்குத்தான் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், நம்மிடம் நேர்மை இருக்கிறது; நியாயம் இருக்கிறது; சத்தியம் இருக்கிறது; தர்மம் இருக்கிறது;
தர்மத்தின் வழி நடக்கின்ற இரண்டு கோடிக்கும் மேற்பட்ட விசுவாசத் தொண்டர்கள் இருக்கிறார்கள்.
நம்மோடுதான் தமிழக மக்களும் இருக்கிறார்கள்.
அன்பிற்கு பாத்திரமான சிறுபான்மையின மக்கள் - நீங்களும் எங்களோடு இருக்கிறீர்கள் பலமான கூட்டணி என்று சிலர் மார்தட்டிக் கொள்கிறார்கள். நாங்களும் பலமான கூட்டணி அமைத்திருக்கிறோம்' தமிழக மக்களோடு கூட்டணி வைத்திருக்கிறோம். இந்தக் கூட்டணியைவிட, வேறு எது பலமான கூட்டணி? நாடாளுமன்றத் தேர்தலில் அது தெரியத்தான் போகிறது. விடியா திமுக ஆட்சி முடியத்தான் போகிறது. இஸ்லாமியப் பெருமக்களுக்கு பல நலத் திட்டங்களை செயல்படுத்தியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். உலமாக்களுக்கு ஊதிய உயர்வு. உலமாக்களுக்கு விலையில்லா மிதிவண்டி ஹஜ் கமிட்டிக்கு நிதி உதவி ஹஜ் பயணத்துக்கு மானியம் உயர்த்தப்பட்டது ஹஜ் பயணிகள் சென்னையில் தங்கிச்செல்ல ஹஜ் இல்லம் கட்ட நிதி. பள்ளிவாசல் - தர்கா புணரமைப்பு மேற்கொள்ள நிதி ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சிக்காக அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் விலையில்லா அரிசி. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுக்கு மணிமண்டபம் தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சமுதாயத்தை பெருமைப்படுத்தும் விதமாக 'பாரத் ரத்னா' ஏ.பி.ஜெ அப்துல் கலாம்' அவர்களை ஜனாதிபதி ஆக்குவதற்கு முதன் முதலாக குரல் கொடுத்தவர் 'மாண்புமிகு அம்மா'. 'அத்தனையும் செய்தது' - நமது கழகம், நமது புரட்சித்தலைவி அம்மா.
தீய சக்தி தி.மு.க.-'செய்ததாக சொன்னதெல்லாம் சும்மா'. இதய தெய்வம் புரட்சித் தலைவர்,
மாண்புமிகு அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களுக்கு
அரணாக இருப்பது நாம்தான்.
இருக்கப்போவதும் நாம்தான்.
பாதுகாப்பாக இருக்கப்போவது நாம்தான்; பக்கபலமாக
மாண்புமிகு அம்மா அவர்கள் வகுத்துத் தந்த பாதையிலே... அம்மா அவர்கள் கடைப்பிடித்த மத
நல்லிணக்கத்தை, சிறுபான்மையினர் மீது அம்மா அவர்கள் காட்டிய அக்கறையை... இஸ்லாமிய
சமுதாயத்தின் மீது அம்மா அவர்கள் காட்டிய அன்பை, பாசத்தை கொஞ்சம்கூட குறையாமல்
நாங்களும் காட்டுவோம் என்ற கூறி, 30 நாட்கள் நோன்பு முடிந்து, வர இருக்கின்ற ஈகைத்
திருநாளாம் ரம்ஜான் பண்டிகை, உங்கள் அனைவருக்கும் சீரும் சிறப்புமாக, ஏற்றமும், இன்பமும்,
மன அமைதியும் வழங்க, எல்லாம் வல்ல 'அல்லாவிடம் துவா' செய்கிறேன் என ஈபிஎஸ் பேசினார் .
டாபிக்ஸ்