Kamal Hassan: மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் ம.நீ.ம.! - கமல் முக்கிய ஆலோசனை
சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து விவாதித்து உள்ளோம் என்றும், ஆனால் இப்போது விவரிக்க முடியாது என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், யார் யாருடன் கூட்டணியில் தொடருவார்கள், 3-வது அணி அமையுமா போன்ற பேச்சுக்கள் இப்போதே அடிபடத் தொடங்கி விட்டன.
தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அமைவது உறுதி என்றும், அந்த கூட்டணியில் அமமுக இணையத் தயார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். எனினும் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் அமமுகவுக்கு ஒரு சதவீதம் கூட இடம் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
ஆளும் கட்சியான திமுகவும் மக்களவைத் தேர்தலில் முழு வெற்றியை பெற்று விட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது. இப்படி பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வரும் சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவிட்டது. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மாநில நிர்வாகிகளோடு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (நவ.16) ஆலோசனை நடத்தி உள்ளார்.
இதில், 85 மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என 120-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை கமல்ஹாசன் வழங்கி உள்ளார்.
ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், 2024- ல் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் பேசினோம். கூட்டணி குறித்து விவாதித்து கொண்டு உள்ளோம். இப்போது விவரிக்க முடியாது. பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியுள்ள கமல், மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கான வேலைகளை நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கடந்த முறை செய்த தவறுகளை வரும் மக்களவைத் தேர்தலில் செய்யக் கூடாது எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதன் மூலம் மக்கள் நீதி மய்யம் எந்த கூட்டணியில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டாபிக்ஸ்