Parliamentary Elections 2024: ’நான் ஜெயிக்குறது 101 சதவீதம் உறுதி!’ நாக்பூர் வேட்பாளர் நிதின் கட்கரி பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Parliamentary Elections 2024: ’நான் ஜெயிக்குறது 101 சதவீதம் உறுதி!’ நாக்பூர் வேட்பாளர் நிதின் கட்கரி பேட்டி!

Parliamentary Elections 2024: ’நான் ஜெயிக்குறது 101 சதவீதம் உறுதி!’ நாக்பூர் வேட்பாளர் நிதின் கட்கரி பேட்டி!

Kathiravan V HT Tamil
Apr 19, 2024 11:02 AM IST

”நாட்டின் மிகப்பெரிய திருவிழாவை நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம். நாக்பூரில், வெப்பநிலை அதிகமாக இருப்பதால், சீக்கிரம் வந்து வாக்களிக்க வேண்டும்”

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி (PTI)

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் மக்களவைத் தொகுதியின் முடிவு குறித்து நம்பிக்கையுடன், பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி தனது தொகுதியில் தேர்தலில் வெற்றி பெறுவது 101 சதவீதம் உறுதி என கூறி உள்ளார். 

நாக்பூர் மக்களவையில் நிதின் கட்கரிக்கும், தற்போது நாக்பூர் மேற்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ள காங்கிரஸ் கட்சியின் விகாஸ் தாக்ரேவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

வாக்களித்த பின் பேசிய நிதின் கட்கரி கூறுகையில். "நாம் இன்று ஜனநாயகத் திருநாளைக் கொண்டாடுகிறோம். அனைவரும் வாக்களிக்க வேண்டும். இது நமது அடிப்படை உரிமையும், கடமையும் ஆகும். நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் ஆனால் உங்கள் வாக்கு முக்கியம். 101% நான் நல்ல வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்." என்று ANI செய்தி நிறுவனத்திடம் நிதின் கட்கரி  கூறினார். 

மேலும், நகரில் அதிக வெப்பம் நிலவுவதால் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்குச் சாவடிகளுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

"நாட்டின் மிகப்பெரிய திருவிழாவை நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம். நாக்பூரில், வெப்பநிலை அதிகமாக இருப்பதால், சீக்கிரம் வந்து வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் நான் குறிப்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். கடந்த முறை 54 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 75 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்,'' என்று வாக்களித்த பின் கூறினார்.

2019 மக்களவைத் தேர்தலில் நிதின் கட்கரி 55.7 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தற்போதைய மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படேலை 2,16,009 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் விலாஸ் முத்தேம் வாரையும் 2,84,828 வாக்குகள் வித்தியாசத்தில் கட்காரி தோற்கடித்தார்.

மகாராஷ்டிராவில் 48 லோக்சபா இடங்கள் உள்ளன. இது உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய எண்ணிக்கை ஆகும். 2019 மக்களவைத் தேர்தலில், பிளவுபடாத சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட 25 இடங்களில் 23 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13 மற்றும் மே 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் முதல் கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடத்தப்படும் இந்த மக்களவைத் தேர்தல், செப்டம்பர் 1951 முதல் பிப்ரவரி 1952 வரை ஐந்து மாதங்களுக்குள் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, நாட்டின் தேர்தல் வரலாற்றில் இரண்டாவது மிக நீண்ட வாக்குப்பதிவாக உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.