தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Lok Sabha Election 2024: ஓய்ந்தது மக்களவை தேர்தல் பிரசாரம்..நாளை மறுநாள் தமிழகத்தில் வாக்குப்பதிவு!

Lok Sabha Election 2024: ஓய்ந்தது மக்களவை தேர்தல் பிரசாரம்..நாளை மறுநாள் தமிழகத்தில் வாக்குப்பதிவு!

Karthikeyan S HT Tamil
Apr 17, 2024 06:49 PM IST

Election Polls: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

ஸ்டாலின், இபிஎஸ், அண்ணாமலை, சீமான்
ஸ்டாலின், இபிஎஸ், அண்ணாமலை, சீமான்

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களவைத் தேர்தல் 2024:

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் நாளை மறுதினம் (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

950 பேர் போட்டி:

தமிழகம் முழுவதும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் களம் காண்கிறார்கள். தென் சென்னை தொகுதியில் அதிகபட்சமாக 5 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 6 தொகுதிகளில் பெண்கள் யாரும் போட்டியிடவில்லை. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விளவங்கோடு தொகுதியில் 10 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

தீவிர வாக்கு சேகரிப்பு:

தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். திமுக மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர் பாபு, ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் செய்து மேற்கொண்டு வந்தனர்.

அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்த கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் சூறாவளி பிரச்சாரம் செய்துவந்தனர். அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் அனல் பறக்கும் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்ற தலைவர்கள் அவரவர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.

தமிழகத்தில் ஓய்ந்தது பிரச்சாரம்:

தமிழ்நாட்டில் கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் அனல்பறந்த பிரசாரம் தற்போது ஓய்ந்திருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகளின் படி அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு, தொகுதிக்கு தொடர்பு இல்லாத அனைவரும் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு முடியும் வரை மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி விதிமுறைகள் அமலில் இருக்கும்.

முதல்கட்ட வாக்குப்பதிவு:

முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் பிரச்சாரம் இன்று நிறைவு பெற்றது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel