SRH vs RCB: 102 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவிய டிராவிஸ் ஹெட்; 25 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய சன்ரைசர்ஸ்
SRH vs RCB: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபாரவெற்றி பெற்றது.
SRH vs RCB: ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 30ஆவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தது.
அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக இருவரும் விளையாடினர். அதில் அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து, பெங்களூரு அணியின் டாப்லி பந்தில் ஃபெர்குசன்னிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அதன்பின், நிதானமாக ஆடிய டிராவிஸ் ஹெட் 41 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளும் அடக்கம். இதன்மூலம் அதிவேகமாக சதம் அடித்தவரின் பட்டியலில் டிராவிஸ் ஹெட் இணைந்தார். இறுதியாக 102ஆவது ரன்கள் எடுத்துவிட்டு, பேட்டிங் செய்கையில் ஃபெர்குசன்னின் பந்தில் டூ பிளெஸ்ஸிஸ்-டம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் மூன்றாவதாக களமிறங்கினார் ஹெயின்ரிச் க்ளெசென். இவரும் விடாமல் அடி அடியென அடித்தார். இறுதியாக 31 பந்துகளுக்கு 7 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 67 ரன்களைக் குவித்து, ஃபெர்குசன்னின் பந்தில் வெளியேறினார்.
அதன்பின், நான்காவதாக களமிறங்கிய ஏடன் மர்க்ரம்மும் ஐந்தாவதாக களமிறங்கிய அப்துல் சமதுவும் பார்ட்னர்ஷிப் போட்டு அணியின் ஸ்கோரை நிதானமாக மேலே கொண்டு வந்தனர். ஏடன் மர்க்ரம் 32 ரன்களுடனும், சமது 37 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர். உதிரியாக 15 ரன்கள், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கிடைத்தது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்களைக் குவித்தது.
288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தொடக்க வீரர்களாக விராட் கோலியையும், பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸையும் களமிறக்கியது.
கோலி, இருபது பந்துகள் பிடித்து 42 ரன்கள் அடித்தார். அதில் 2 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் அடக்கம். ஆனால், அவரது வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் மார்க்கண்டியின் பந்தில் கிளீன் போல்டனார், கோலி. அதன்பின் நிதானமாக ஆடிய, பிளெஸ்ஸிஸ் 28 ரன்களுக்கு 62 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளும் அடக்கம். இருந்தாலும், கம்மின்ஸ் பந்தில் கிளெசனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார், பிளெஸ்ஸிஸ்.
அதன்பின் பெங்களூரு அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். வில் ஜாக்ஸ் 7 ரன்களுடனும், ரஜத் படிடர் 9 ரன்களுடனும், சவுரவ் சவுகான் ரன் எதுவும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினார். இதனால், பெங்களூரு அணி இடையில் தடுமாறியது.
அதன்பின் ஆறாவது வீரராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக், பிரித்து மேய்ந்தார். அவர் 35 பந்துகளுக்கு 83 ரன்கள் எடுத்தார். இதில் 7 சிக்ஸர்கள்,ஐந்து பவுண்டரிகளும் அடக்கம். ஆனால், அவர் ஆட்டத்தை ஒடுக்க நடராஜன் போட்ட பந்து, தினேஷ் கார்த்திக்கின் மட்டையில் பட்டு, கிளெசனின் கைவசம் புகுந்தது.
இதில் எதிரெதிர் முனையில் ஆடிய தினேஷ் கார்த்திக்கும், நடராஜனும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தவிர, மஹிபல் லும்ரூர் 19 பந்துகள் எடுத்து, கம்மின்ஸ் பந்தில் வெளியேறினார். அனுஜ் ராவத், விஜயகுமார் வைஷாக் ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்களை எடுத்து, 25 ரன்கள் பின் தங்கிய நிலையில் தோல்வி அடைந்தது. இதில் 14 ரன்கள் உதிரியாக கிடைத்தது.
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றிபெற்றது.
இதன்மூலம் ஆடிய ஐந்து லீக் ஆட்டங்களில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 4 வெற்றி மற்றும் ஒரு தோல்வியை மட்டுமே பெற்று, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
டாபிக்ஸ்