இந்திய அணியின் வேகப்புயல்..விதர்பா எக்ஸ்பிரஸ்! உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர்
HBD Umesh Yadav: 2015 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர் என்ற சாதனை புரிந்தவர் உமேஷ் யாதவ். ஆஸ்திரேலியா மண்ணில் தனது கிரிக்கெட் கேரியரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவராக இருந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட்டில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ். கடந்த 2013இல் தோனி தலைமையில் இந்தியா வென்ற சாம்பியன்ஸ் கோப்பை அணியில் அங்கம் வகித்த இவர், 2015 ஒரு நாள் உலகக் கோப்பை அணியிலும் விளையாடியுள்ளார். 2010இல் இந்திய அணிக்காக முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் களமிறங்கினார் யாதவ். தற்போது 37 வயதாகும் இவர் இளம் வீரர்களின் வரவால் ஓரம் கட்டப்பட்டுள்ளார்.
உமேஷ் யாதவ் கிரிக்கெட் பயணம்
மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் பிறந்த உமேஷ் யாதவ் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் வல்லவராக திகழ்ந்தார். தனது கல்லூரி கிரிக்கெட் அணியில் சேர விரும்பினார். ஆனால் கிளப் கிரிக்கெட் எதுவும் ஆடாத அவர் நிராகரிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து விதர்பா ஜிம்கானா கிளப்பில் இணைந்து முதல் முறையாக கிரிக்கெட் பந்தில் பவுலிங் செய்தார். தொடர்ந்து கிளப் கிரிக்கெட்டில் விளையாடி வந்த இவர் 2008இல் முதல் தர கிரிக்கெட்டில் விதர்பா அணியில் அறிமுகமானார். அதே ஆண்டில் ராஞ்சி சீசனில் விளையாடிய இவர் தனது அசுர வேகத்தால் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்யும் பவுலராக திகழ்ந்தார்.
மாற்று வீரராக வாய்ப்பை பெற்ற உமேஷ்
ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது வேகத்தால் கவனத்தை ஈர்த்த உமேஷ் யாதவ் 2010 டி20 உலகக் கோப்பை தொடரில் காயமடைந்த பிரவீண் குமாருக்கு மாற்று வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் விளையாடவில்லை.
இதன் பின்னர் இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதிய முத்தரப்பு தொடரில் சேர்க்கப்பட்ட உமேஷ் தனது திறமையை வெளிக்காட்ட தவறினார். இருப்பினும் பயிற்சி பவுலராக இந்திய அணியுடன் தொடர்ந்து பயணித்தார்.
2011இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் யாதவுக்கு திருப்பத்தை தந்தது. விதர்பாவில் இருந்து முதல் முறையாக இந்திய அணிக்கு களமிறங்கிய வீரர் என்ற பெருமை பெற்றதோடு முதல் டெஸ்ட் தொடரிலேயே 2 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதே ஆண்டில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2015 உலகக் கோப்பை தொடரில் 8 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராகவும், ஒட்டு மொத்தமாக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது பவுலர் என்ற பெருமையும் பெற்றார்.
ஆஸ்திரேலியா மண்ணில் தனது கிரிக்கெட் கேரியரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவராக உமேஷ் யாதவ் இருந்துள்ளார்.
இந்தியாவின் அதி வேக பந்து வீச்சாளர்
இந்திய அணியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்களில் அதிவேகமாக பந்து வீசிய பவுலர்களில் ஒருவராக உமேஷ் யாதவ் உள்ளார். இவரது அதிகபட்ச வேகமானது மணிக்கு 152.5 கிமீ ஆகும்.
விதர்பா எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் இவர், லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாக அதிரடியாக பேட் செய்து விரைவாக ரன்களை குவிப்பவராக இருந்துள்ளார். தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக 10 பந்துகளில் 31 ரன்கள் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்டிருக்கும் இந்திய பேட்ஸ்மேனாக உள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்
ஐபிஎல் 2010 சீசனில் முதன் முதலில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார் உமேஷ். 2012 சீசனில் 17 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களில் நான்காவது இடத்தை பிடித்தார்.
2014 முதல் 2017 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2018 முதல் 2020 வரை ஆர்சிபி, 2021இல் டெல்லி கேபிடல்ஸ், 2022 மற்றும் 2023இல் கொல்கத்தா நைடர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த ஆண்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
சிறப்பாக செயல்படும் நேரத்தில் கொண்டாடப்படும் வேகப்பந்து வீச்சாளர்கள், கொஞ்சம் சொதப்பலை வெளிப்படுத்தினாலே ஓரங்கட்டப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அடுத்தடுத்து இளம் வீரர்களின் வருகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கான கால அளவை சுருக்கி விடுகிறது.
அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்கள் நிலையான வாய்ப்பை இழப்பதற்கு அவர்களுக்கு ஏற்படும் காயங்களும் முக்கிய விஷயமாக உள்ளது. அந்த வகையில் காயம், பார்ம் அவுட் போன்ற காரணங்களால் தற்போது ஓரங்கட்டப்பட்டிருக்கும் உமேஷ் யாதவ், இந்தியாவுக்காக சில மேட்ச் வின்னிங் ஆட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். வேகத்தால் உலக பேட்ஸ்மேன்களை கதிகலங்க செய்த இந்திய பவுலராக இருந்து வரும் உமேஷ் யாதவுக்கு இன்று பிறந்தநாள்
டாபிக்ஸ்