#PBKSvsSRH:கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி திரில் வெற்றி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  #Pbksvssrh:கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி திரில் வெற்றி

#PBKSvsSRH:கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி திரில் வெற்றி

Marimuthu M HT Tamil
Apr 10, 2024 07:04 AM IST

#PBKSvsSRH: பஞ்சாப் அணியின் ஷஷாங்க் (25 பந்துகளில் 46 நாட் அவுட்), அசுதோஷ் (15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 33) கடைசி வரை கடுமையாக போராடினர். ஆனாலும் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

போட்டி முடிந்ததும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களுடன் அசுதோஷ் சர்மா மற்றும் ஷஷாங்க் சிங் கைகுலுக்கினர்.
போட்டி முடிந்ததும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களுடன் அசுதோஷ் சர்மா மற்றும் ஷஷாங்க் சிங் கைகுலுக்கினர். (PTI)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்றைய ஐபிஎல் போட்டியில் மோதிக்கொண்டன. சண்டிகரின் முல்லன்பூரில் நடந்த இப்போட்டியில் டாஸ்வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. எனவே, முதலில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா முறையே 21 மற்றும் 16 ரன்கள் எடுத்து வெளியேறினர். மூன்றாவதாக களமிறங்கிய ஏடன் மக்ரம் ரன் எதுவும் எடுக்காமல், அர்ஷ்தீப் சிங்கின் பந்தில் அவுட்டானார்.

அணியின் நிலையினைப் புரிந்துகொண்டு நான்காவதாக களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி நிதானமாக ஆடினார். அவர் 5 சிக்ஸ், 4 பவுண்டரிகளை விளாசினார். 37 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். நிதிஷ் குமார் ரெட்டியும் அர்ஷ்தீப் சிங்கின் பந்தில் ரபடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன்பின், ராகுல் திரிபாதி 11 ரன்களும், கிளசென் 9 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். அப்துல் சமது 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தபோது, அர்ஷ்தீப் சிங் பந்தில், படேலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அடுத்து வந்த அணியின் கேப்டன் பட் கம்மின்ஸ் 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். புவனேஸ் குமார் 6 ரன்கள் எடுத்தார். ஷபஸ் அகமது 14 ரன்களுடனும், ஜெய்தேவ் உனட்கட் 6 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் உதிரிகளுடன் சேர்த்து, 182 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் சார்பில் அர்ஷ்தீப் சிங் நான்கு விக்கெட்டுகளை அதிகபட்சமாக கைப்பற்றினார்.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியை, ஆரம்பம் முதலே பவுலிங்கில் ஒடுக்க நினைத்தது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

தொடக்கவீரர்களாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகார் தவானும், ஜானி பெயர்ஸ்டவ்வும் களமிறங்கினர். இதில் ஷிகார் தவான் 14 ரன்கள் மட்டுமே எடுத்து புவனேஸ்வர் குமாரின் பந்தில் அவுட்டானார். அதன்பின் வந்த ஜானி பெயர்ஸ்டவ், கம்மின்ஸின் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார். அதன்பின் வந்த பிரப்சிம்ரன் சிங், புவனேஸ்வர் குமாரின் பந்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். அதன்பின் வந்த சாம் கரண் 29 ரன்கள் எடுத்திருந்தபோது, நடராஜனின் பந்தில் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் வந்த சிக்கந்தர் ரைஸா, 28 ரன்கள் அடித்திருருக்கும்போது, உனட்கட்டிடம் அவுட்டானார். இதனால் சரியான ஃபார்மில் இல்லாமல் பஞ்சாப் அணி திணறியது. அதன்பின் இறங்கிய ஷஷாங்க் சிங் நிதானித்து ஆடினார். அவர் 25 பந்துகளில் ஒரு சிக்ஸ், 5 பவுண்டரிகளை விளாசி மொத்தமாக 46 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால், இவருக்கு பார்ட்னர்ஷிப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜிதேஷ் ஷர்மா, நிதிஷ் குமார் ரெட்டியின் பந்தில் 19 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இருந்தாலும் அடுத்து களம்புகுந்த அசுதோஷ் ஷர்மா நன்கு விளையாடினார். அவரும் இறுதி வரை ஆட்டமிழாக்காமல் இருந்து 15 பந்துகளில் 33 ரன்களைக் குவித்தார். உவரியாக பஞ்சாப் அணிக்கு கூடுதலாக 7 ரன்கள் கிடைத்தது. இருந்தாலும் 182 ரன்கள் இலக்கு என்ற நிலையை எட்டமுடியாமல் 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்களும், பட் கம்மின்ஸ், நடராஜன், நிதிஷ் குமார் ரெட்டி, உனட்கட் ஆகியோர் தலா ஒருவிக்கெட்டும் எடுத்தனர்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.