நல்ல தொடக்கம் தந்த ஷெபாலி - மந்தனா! ஹர்மன்ப்ரீத் கெளர் மிரட்டல் அடி..டி20 உலகக் கோப்பை தொடரில் புதியதொரு சாதனை
நல்ல தொடக்கம் தந்த ஷெபாலி - மந்தனா, ஹர்மன்ப்ரீத் கெளர் மிரட்டல் அடி மூலம் இந்தியா மகளிர் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ஸ்கோரை குவித்துள்ளது. அத்துடன் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் புதியதொரு சாதனை புரிந்துள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்திய மகளிர் - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டியில் இந்தியா மகளிர் ஒரேயொரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இந்த போட்டியில் மிக பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும். இந்த சூழ்நிலையில் இந்திய மகளிர் அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியுள்ளது.
இந்திய மகளிர் பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்துள்ளது. இந்திய மகளிர் அணியிலஸ் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார்.
இவருக்கு அடுத்தபடியாக ஸ்மிருதி மந்தனா 50, ஷெபாலி வர்மா 43 ரன்கள் எடுத்தனர். இலங்கை மகளிர் அணியில் 7 பவுலர்கள் பந்து வீசினர்.
ஷெபாலி வர்மா - மந்தனா பார்ட்னர்ஷிப்
இந்திய மகளிர் அணியின் ஓபனர்களான ஷெபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா நல்ல தொடக்கத்தை தந்தனர். இருவரும் பேட்டிங்கில் ஃபார்ம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் சிறப்பாக பேட் செய்தனர்.
அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி ரன்குவிப்பில் ஈடுபட்ட நிலையில் முதல் விக்கெட்டுக்கு 12.4 ஓவரில் 98 ரன்கள் சேர்த்தனர். விரைவாக ரன்கள் சேர்த்த மந்தனா அரைசதமடித்தார். 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ரன்அவுட் மூலம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவர் அவுட்டான அடுத்த பந்தில் ஷெபாலி வர்மா 40 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
ஹர்மன்ப்ரீத் அதிரடி
இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இலங்கை மகளிர் பவுலர்களின் பந்து வீச்சை அடித்து தள்ளி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். ஹர்மன்ப்ரீத் அதிரடியால் இந்திய மகளிர் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 27 பந்துகளில் அரைசதம் விளாசிய இவர் கடைசி வரை அவுட்டாகாமல் 52 ரன்கள் எடுத்திருந்தார். தனது இன்னிங்ஸில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்திருந்தார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ஸ்கோர்
இந்தியா மகளிர் அடித்திருக்கும் 173 ரன்கள், இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அணியின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்துள்ளது. கடைசி 4 ஓவரில் மட்டும் இந்தியா மகளிர் 46 ரன்கள் எடுத்துள்ளது. இது இந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளில் கடைசி 4 ஓவரில் ஒரு அணியால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையாக அமைந்துள்ளது.
இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி இரம்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருக்கும் இலங்கை அணி, தனது முதல் வெற்றியை பெற 174 ரன்கிற மிக பெரிய இலக்கை பெற வேண்டும்.
டாபிக்ஸ்