Craig McMillan: பவுலர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய பேட்ஸ்மேன்..அதிரடி ஆட்டக்காரர்! நியூசிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர்
HBD Craig McMillan: நியூசிலாந்து மீது மற்ற அணி பவுலர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய பேட்ஸ்மேன்களின் முக்கியமானவர் கிரேக் மெக்மில்லன். அதிரடி ஆட்டக்காரர் என பெயர் பெற்ற இவர் அணியின் முக்கிய பேட்டிங் ஆல்ரவுண்டராக ஜொலித்தார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட், டி20, ஒரு நாள் என மூன்று வகை கிரிக்கெட்டையும் விளையாடிய ஆல்ரவுண்டர் தான் கிரேக் மெக்மில்லன். வலது கை பேட்ஸ்மேன், மித வேகப்பந்து வீச்சாளரான இவர் நியூசிலாந்து அணி முதல் முறையாக வென்ற ஐசிசி நாக்அவுட் கோப்பை தொடரில் இடம்பிடித்த வீரராக உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்
1997 முதல் 2007 வரை 10 ஆண்டுகள் நியூசிலாந்து அணியில் விளையாடியுள்ளார் கிரேக் மெக்மில்லன். 1997இல் இந்தியாவில் நடைபெற்ற பெப்சி இண்டிபெண்டன்ஸ் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார் மெக்மில்லன்.
அதேபோல் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தனது முதல் ஆட்டத்தை இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியுள்ளார்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை தற்போது ஏராளமான அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள். அவர்களில் குறிப்பிட தகுந்த வீரர்களாக பிரெண்டன் மெக்கல்லம், ராஸ் டெய்லர் என சிலர் உள்ளார்கள்.
இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர் என்றால் அது மெக்மில்லன் தான். 2000ஆவது ஆண்டின் சீசனில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 75 பந்துகளில் 104 ரன்கள் அடித்தார். அப்போதைய காலகட்டத்தில் அதிக வேக சதமடித்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் என்ற பெருமை பெற்றார்.
2002 காலகட்டத்தில் மோசமான பார்ம் காரணமாக நீக்கப்படுவதும், பின்னர் அணிக்கு திரும்புவதும் என மாறி மாறி இருந்து வந்தார் கிரேக் மெக்மில்லன்.
நியூசிலாந்தின் சுரேஷ் ரெய்னா
கொஞ்சம் கொழு கொழுவென குண்டான தோற்றத்தில் இருக்கும் மெக்மில்லன், அதிரடியான பேட்டிங்குக்கு பெயர் போனவராக திகழ்ந்தார். அடித்து ஆடுகிறேன் பேர்வழி என விரைவாக அவுட்டாவது அல்லது களத்தில் கொஞ்ச நேரம் நின்றுவிட்டால் எதிரணி பவுலர்களை துவம்சம் செய்வது என இவரது ஆட்டத்தின் பாணி அமைந்திருக்கும்.
பேட்டிங்கை போல் மிகவும் பயனுள்ள மித வேகப்பந்து வீச்சாளராக இருந்துள்ளார். தனது அணிக்காக பேட்டிங், பவுலிங் என ஏதாவதொரு வகையில் பல போட்டிகளில் பங்களிப்பை தந்து வெற்றியையும் பெற்று தந்துள்ளார். சொல்லப்போனால் இவர் நியூசிலாந்தின் சுரேஷ் ரெய்னா போல் அணியில் செயல்பட்டார்.
மெக்மில்லன் சாதனைகள்
நியூசிலாந்து அணியில் அனைத்து வகை கிரிக்கெட்டையும் சேர்த்து 261 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 8,010 ரன்கள் அடித்துள்ளார். அதேபோல் பவுலிங்கில் 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த நியூசிலாந்து வீரர், அதிக போட்டிகளில் டக் அவுட் ஆகாமல் இருந்த வீரர், நியூசிலாந்துக்காக அதிவேக டி20 அரைசதம் என பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார்.
2007 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை பெற்றார். இதன் பின்னர் ஐபிஎல் தொடங்குவதற்கு முன் இந்தியாவில் நடைபெற்ற ஐசிஎல் டி20 லீக் தொடரில் கொல்கத்தா டைகர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பாட்டார்.
தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வரும் மெக்மில்லன் நியூசிலாந்து கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக இருந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்