Dindigul Dragons Champion: ‘சொன்னதை செய்து காட்டியதில் மகிழ்ச்சி’-முதல்முறையாக DD சாம்பியனான பிறகு அஸ்வின் பேட்டி
TNPL 2024 Final: 2024 தமிழ்நாடு பிரீமியர் லீக் பட்டத்தை முதன்முறையாக திண்டுக்கல் டிராகன்ஸ் வென்றது. அஷ்வினின் சிறப்பான ஆட்டத்தால் 2 முறை சாம்பியனான கோவை அணியை திண்டுக்கல் வீழ்த்தியது.

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீஸனில் சென்னை எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் 2 முறை சாம்பியனான லைகா கோவை கிங்ஸை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாக டி.என்.பி.எல் பட்டத்தை திண்டுக்கல் டிராகன்ஸ் கைப்பற்றியது.
முன்னதாக, 2024 டி.என்.பி.எல் இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் பட்டத்தை எதிர்நோக்கி லைகா கோவை கிங்ஸ் அணியும், முதல் பட்டத்தை குறிவைத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய கோவை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் ராம் அர்விந்த் 27 ரன்களும் அத்திக் உர் ரஹ்மான் 25 ரன்களும் எடுத்தனர். இவ்விரு பேட்டர்களைத் தவிர மற்ற எந்த பேட்டர்களும் பெரிதாக சோபிக்கவில்லை.
சிறப்பான ஃபீல்டிங்
சிறப்பான ஃபீல்டிங்கை வெளிப்படுத்திய திண்டுக்கல் அணியில் சரத் குமார் மட்டும் 4 கேட்ச்சுகளை எடுத்து டி.என்.பி.எல் வரலாற்றில் ஒரு போட்டியில் ஃபீல்டராக அதிக கேட்ச்சுகளை எடுத்த 3வது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். பெளலிங்கைப் பொறுத்தவரை விக்னேஷ், வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.