TNPL Points table: டிஎன்பிஎல்-இல் 1000 ரன்களை கடந்த திண்டுக்கல் வீரர்-டிஎன்பிஎல் புள்ளிப்பட்டியல் இதோ
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Tnpl Points Table: டிஎன்பிஎல்-இல் 1000 ரன்களை கடந்த திண்டுக்கல் வீரர்-டிஎன்பிஎல் புள்ளிப்பட்டியல் இதோ

TNPL Points table: டிஎன்பிஎல்-இல் 1000 ரன்களை கடந்த திண்டுக்கல் வீரர்-டிஎன்பிஎல் புள்ளிப்பட்டியல் இதோ

Manigandan K T HT Tamil
Jul 18, 2024 11:31 AM IST

திண்டுக்கல் டிராகன்ஸ் 36 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த பின் அந்த அணியின் அனுபவ வீரர் பாபா இந்திரஜித் மற்றும் இளம் வீரர் பூபதி வைஷ்ண குமார் இணைந்து அதிரடியாக ரன் சேகரிக்கத் தொடங்கினர். மேலும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் பாபா இந்திரஜித் 1000 ரன்களை இந்தப் போட்டியில் கடந்தார்.

TNPL Points table: டிஎன்பிஎல்-இல் 1000 ரன்களை கடந்த திண்டுக்கல் வீரர்-டிஎன்பிஎல் புள்ளிப்பட்டியல் இதோ
TNPL Points table: டிஎன்பிஎல்-இல் 1000 ரன்களை கடந்த திண்டுக்கல் வீரர்-டிஎன்பிஎல் புள்ளிப்பட்டியல் இதோ

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீஸனில் கோயம்புத்தூரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி இந்த சீஸனில் தங்களது 2வது வெற்றியைப் பதிவு செய்தது.

முன்னதாக, மழையின் காரணமாக 13 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்று திண்டுக்கல் டிராகன்ஸ் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் 13 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 108 ரன்கள் அடித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக எஸ். ராதாகிருஷ்ணன் 36 ரன்களும் அவருக்கு அடுத்தபடியாக துஷார் ரஹேஜா 32 ரன்களும் எடுத்தனர். திண்டுக்கல் சார்பில் சுபோத் பாட்டீ சிறப்பாக பந்துவீசி அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

திண்டுக்கல் வெற்றி

இந்த சீஸனில் தொடர்ச்சியாக 2 தோல்விகளை சந்தித்த அஷ்வினின் திண்டுக்கல் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப 109 என்ற இலக்கை நோக்கி தங்களது இன்னிங்ஸைத் தொடங்கியது. திருப்பூர் அணி பவர்ப்ளேவில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விமல் குமார் (17) மற்றும் ஷிவம் சிங்கை (4) திக்குமுக்காடச் செய்தது.

திண்டுக்கல் டிராகன்ஸ் 36 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த பின் அந்த அணியின் அனுபவ வீரர் பாபா இந்திரஜித் மற்றும் இளம் வீரர் பூபதி வைஷ்ண குமார் இணைந்து அதிரடியாக ரன் சேகரிக்கத் தொடங்கினர். மேலும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் பாபா இந்திரஜித் 1000 ரன்களை இந்தப் போட்டியில் கடந்தார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய பூபதி வைஷ்ண குமார் தனது முதல் அரைசதத்தை வெறும் 25 பந்துகளில் அடித்து திண்டுக்கல் டிராகன்ஸிற்கு அபாரமான வெற்றியைப் பெற்றுத் தந்தார். 7 பந்துகள் மீதமிருக்கையில் திண்டுக்கல் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.

சாய் கிஷோர் பேட்டி

தோல்விக்குப்பின் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸின் கேப்டன் சாய் கிஷோர் பேசுகையில், “பேட்டர்கள் நல்ல ஸ்கோரை எங்களுக்குத் தந்தனர். ஆனால் அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை. அதுவே எங்களின் தோல்விக்கு வழிவகுத்தது”, என்று சாய் கிஷோர் தெரிவித்தார்.

ஆட்டநாயகன் விருது வென்ற திண்டுக்கல் டிராகன்ஸின் சுபோத் பாட்டீ பேசுகையில், “நான் எந்த திட்டமும் வைத்து பந்துவீசவில்லை. ஒவ்வொரு பந்துக்கும் ஏற்ற மாதிரி மட்டுமே பந்துவீசினேன். எங்கள் அணியில் அஷ்வின், வருண் போன்ற அனுபவமிக்க பந்துவீச்சாளர்களுடன் பந்துவீசுவதால் எனக்கு எந்த நெருக்கடியும் ஏற்படுவதில்லை”, என்று கூறினார்.

வெற்றிக்குப்பின் பேசிய திண்டுக்கல் டிராகன்ஸ் கேப்டன் அஷ்வின் பேசுகையில், “டி20 கிரிக்கெட்டில் ஓவர்கள் குறைய குறைய போட்டியின் வீரியமும் குறைந்துவிடும். அதோடு எதாவது ஒரு பேட்டர் நிலைத்து நின்று விளையாடினால் மட்டுமே இந்தப் பிட்ச்சில் பெரிய ஸ்கோரை எட்ட முடியும். அதை இளம் வீரர் பூபதி

வைஷ்ண குமார் தனது திறமையால் நிரூபித்தார்”, என்று அஷ்வின் தெரிவித்தார்.

வெற்றிக்குப்பின் திண்டுக்கல் அணியின் ஷிவம் சிங் பேசுகையில், “இந்த சீஸனில் ஏற்ற இறக்கங்களை நாங்கள் இதுவரை சந்தித்துள்ளோம். இந்த வெற்றியுடன் அடுத்து திருநெல்வேலிக்கு செல்கிறோம். அங்கு நிச்சயம் வெற்றித் தருணத்தை தொடர முயற்சிப்போம்”, என்று கூறினார்.

தோல்விக்குப்பின் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸின் ரோஹித் பேசுகையில், “டாஸ் இந்தப் போட்டியில் முக்கியப் பங்கு வகித்தது. பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் வெற்றி பெற்றிருப்போம்”, என்று தெரிவித்தார்.

புள்ளிகள் பட்டியல்

 

அணிகள் போட்டிகள் வெற்றிகள் தோல்விகள் N/R புள்ளிகள் நெட் ரன் ரேட்

லைகா கோவை கிங்ஸ் 4 4 0 0 8 0.784

நெல்லை ராயல் கிங்ஸ் 4 2 1 1 5 -0.023

திருச்சி கிராண்ட் சோழாஸ் 4 2 2 0 4 0.701

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 2 2 0 4 0.253

திண்டுக்கல் டிராகன்ஸ் 4 2 2 0 4 -0.113

சீகம் மதுரை பேந்தர்ஸ் 4 1 2 1 3 -1.237

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் 4 1 3 0 2 -0.195

SKM சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 4 1 3 0 2 -0.519

2024 தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் ப்ளேஆஃப்ஸ் போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை

ஸ்ரீராம் கேபிட்டல் 2024 தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் ப்ளேஆஃப்ஸ் போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று மாலை 6 மணிக்கு (ஜூலை 18) தொடங்குகிறது.

திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் ஜூலை 30 மற்றும் 31ஆம் தேதி நடைபெறும் குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகளுக்கும் சென்னை எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 2 மற்றும் 4ஆம் தேதி நடைபெறும் குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப்போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

ப்ளேஆஃப்ஸ் போட்டிகள்: ஜூலை 30 மற்றும் 31 - திண்டுக்கல் (குவாலிஃபையர் 1 & எலிமினேட்டர்) & ஆகஸ்ட் 02 மற்றும் 04 - சென்னை (குவாலிஃபையர் 2 & இறுதிப்போட்டி)

ஆன்லைன் தளம்: PAYTM INSIDER

ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கும் நாள்: இன்று (ஜூலை 18) மாலை 6 PM IST

போட்டியின் முன்னோட்டம்:

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீஸனில் கோயம்புத்தூரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று ( ஜூலை 18) நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டியில் SKM சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதுகிறது.

2024 புள்ளிகள் பட்டியலில் 3 தோல்விகள் மற்றும் 1 வெற்றியுடன் கடைசி இடத்திலுள்ள சேலம் அணி தொடர்ச்சியாக 2 தோல்விகளை கடைசி 2 போட்டிகளில் சந்தித்துள்ளது. 4 முறை சாம்பியனாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இந்த சீஸனில் முதலிரண்டு போட்டிகளில் தோற்றாலும் கடைசி 2 போட்டிகளை வென்று தற்போது புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தைப் பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. கோவை மண்ணில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக முயற்சிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்றையப் போட்டி

SKM சேலம் ஸ்பார்ட்டன்ஸ் vs சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

நேரம்: இரவு 7.15 மணிக்கு

இடம்: கோயம்புத்தூரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானம்

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.