தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Utthamar Kovil : குழந்தை பேறு வரம் அளிக்கும்! ஒரே இடத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா அருள்புரியும் உத்தமர் கோயில்!

Utthamar Kovil : குழந்தை பேறு வரம் அளிக்கும்! ஒரே இடத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா அருள்புரியும் உத்தமர் கோயில்!

Priyadarshini R HT Tamil
Jul 26, 2023 11:17 AM IST

இங்கு மும்மூர்த்திகளும், தம்பதி சமேதரராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இக்கோயிலில் இறைவனை கரம்பனூர் உத்தமன் என மங்களாசாசனம் செய்துள்ளார். தம்பதிகள் இத்தலத்துக்கு வந்து குடும்ப ஒற்றுமைக்காக வேண்டிக்கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை.

குழந்தை பேறு வரம் அளிக்கும். ஒரே இடத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா அருள்புரியும் திருச்சி உத்தமர் கோயில்
குழந்தை பேறு வரம் அளிக்கும். ஒரே இடத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா அருள்புரியும் திருச்சி உத்தமர் கோயில்

சிவபெருமானின் 63 மூர்த்தங்களில் ஒன்றாகிய 29வது திருவிளையாடலான பிச்சாண்டார் திருக்கோலம் பூண்டது இங்குதான். சிவபெருமான் பிக்ஷாடனராக வந்து தோஷம் நீங்கப்பெற்றது இத்திருக்கோயிலில்தான்.

இங்கு மும்மூர்த்திகளும், தம்பதி சமேதரராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இக்கோயிலில் இறைவனை கரம்பனூர் உத்தமன் என மங்களாசாசனம் செய்துள்ளார். தம்பதிகள் இத்தலத்துக்கு வந்து குடும்ப ஒற்றுமைக்காக வேண்டிக்கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை.

மும்மூர்த்திகளுக்கும் இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது இந்தியாவில் எந்த கோயிலுக்கும் இல்லாத சிறப்பாகும். பூரணவல்லி தாயார் சமேத புருஷோத்தம பெருமாள், சவுந்திரநாயகி சமேத பிச்சாண்டேசுவரர், சரஸ்வதி சமேத பிரம்மாவும் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள்.

சக்கீர்த்தி வர்த்தனன் என்ற அரசன் மகப்பேறு இல்லாத குறையை நீக்கத் தவம் புரிந்து குழந்தையைப் பெற்றதும் இக்கோயிலில்தான். 7 குருபகவான்கள் சப்த குருக்களாக எழுந்தருளி பக்தர்களுக்கு இத்தலத்தில் காட்சி தருகிறார்கள்.

சிவபெருமானைப்போலவே 5 தலைகளுடன் இருந்த பிரம்மாவை பார்வதிதேவி, அவரை தனது கணவர் என்றெண்ணி பணிவிடை செய்தார். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க, பிரம்மாவின் ஒரு தலையை மட்டுத் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதுடன், பிரம்மாவின் அந்த கபாலமும் அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது.

சிவனால் கபாலத்தை எடுக்க முடியவில்லை. சிவனுக்கு படைக்கப்பட்ட அனைத்தையும் அந்த கபாலமே எடுத்துக்கொண்டது. பசியால் வாடிய சிவன், அதனை பிச்சை பாத்திரமாக எடுத்துக்கொண்டு பிச்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல கோயில்களுக்குச் சென்றார். இங்கு பெருமாள் கட்டளையின்படி தாயார் அன்னமிடவே பாத்திரம் நிரம்பி சிவனின் பசி நீங்கியதால் இங்குள்ள அம்மன் பூரணவல்லித்தாயார் என்று அழைக்கப்படுகிறார்.

பிரம்மாவுக்கு எங்கும் கோயில் இல்லை என்று வருத்தத்தில் இருந்த பிரம்மன் பூமியில் பிறந்து இந்தக்கோயிலில் தவம் செய்தார். அதில் மெச்சிய பெருமாள் அவருக்கு இந்த கோயிலில் வழிபாடு நடத்த அருள்புரிந்தார்.

பிரம்மாவுக்க தயிர்சாதம், அத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் சாற்றியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. குருப்பெயர்ச்சியின்போது இங்கு பிரம்மாவுக்கு விஷேச பூஜைகள் நடைபெறும். விஷ்ணு பள்ளி கொண்ட பெருமாளாகவும், பூரணவல்லி தாயார் தனி சன்னதியிலும் காட்சியளிக்கிறார்கள்.

மகப்பேறு வேண்டுவோர் இங்கு ரமாபிரானின் தந்தை தசரத மகாராஜா பூஜித்த தசரத லிங்கத்தை 48 வாரங்கள் வழிபட்டு அர்ச்சனை செய்தால், மகப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். மேலும் இக்கோயில் சிறந்த பிரார்த்தனை மற்றும் பரிகார தோஷ நிவர்த்தி தலமாகவும் உள்ளது.

சிவனுக்கு மாசி மாதத்திலும், பெருமாளுக்கு சித்திரை மாதத்திலும் பிரமோற்சவம் நடைபெறும். ஏகாதசி, முத்தங்கி சேவை, பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட பல திருவிழாக்களும் நடைபெறுகிறது.

திருச்சியில் நம்பர் 1 டோல்கேட்டில் இறங்கி நகர பேருந்தில் செல்லம். எங்கிருந்து வந்தாலும், நம்பர் 1 டோல்கேட்டை கடந்துதான் செல்ல வேண்டும்.

WhatsApp channel