தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கோலாகலமாக நடந்தேறிய திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்!

கோலாகலமாக நடந்தேறிய திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 09, 2023 11:37 AM IST

Thiruparankundram: சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அமர்ந்த வைர தேர் கிரிவல பாதையில் ஆடி அசைந்து சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

திருப்பரங்குன்றம் தேரோட்டம்
திருப்பரங்குன்றம் தேரோட்டம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பங்குனிதிருவிழாவில் உச்ச நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். அங்கு பக்தர்களின் அரோகரா கோஷம் கோஷங்களுக்கிடையே வைரத் தேர் ஆடி அசைந்து சென்றது கண் கொள்ளா கட்சியாக இருந்தது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடு திருப்பரங்குன்றம் ஆகும். இது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான பட்டாபிஷேகம் கடந்த வெள்ளிக்கிழமையும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் வைபவம் சனிக்கிழமையும் வெகு விமர்ச்சையாக நடந்து முடிந்தது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து உச்ச நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. பின் வைர தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு முருகப்பெருமான் அருள் பாலித்தனர் . தொடர்ந்து சன்னதி வாசலில் இருந்து திருத்தேரோட்டம் கொடியைசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. தேரோட்டம் தொடங்குவதற்கான கொடியை அசைத்தவுடன் பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை முட்டியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடகயிறை பிடித்து இழுக்க சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அமர்ந்த வைர தேர் கிரிவல பாதையில் ஆடி அசைந்து சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதை தொடர்ந்து வைரத் தேரானது கிரிவலப் பாதையை சுற்றி வந்தது. உச்ச நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்வை காண திருப்பரங்குன்றம் மதுரை திருமங்கலம் சோழவந்தான் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு காலை 6 மணி முதல் தேர் கோவில் நிலையை வந்து அடையும் வரை கோயில் நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக திருப்பரங்குன்றத்திற்கு பல்வேறு பகுதியில் இருந்தும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்