தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ketu Conjunction: ’நீசம் பெற்ற கிரங்களுடன் கேது பகவான் இணைவு!’ நன்மைகளும் தீமைகளும்!

Ketu Conjunction: ’நீசம் பெற்ற கிரங்களுடன் கேது பகவான் இணைவு!’ நன்மைகளும் தீமைகளும்!

Kathiravan V HT Tamil
May 13, 2024 06:40 AM IST

”அளவுக்கு மீறிய வீரியத்துடன் ஒருவரை செயல்பட தூண்டிவிடக்கூடிய கிரகமாக ராகு பகவான் உள்ளார். ஆனால் நல்ல வீரியமாக இருந்தாலும் அதை செயல்பட விடாமல் தடுக்கும் கிரகமாக கேது உள்ளார்”

’நீசம் பெற்ற கிரங்களுடன் கேது பகவான் இணைவு!’ நன்மைகளும் தீமைகளும்!
’நீசம் பெற்ற கிரங்களுடன் கேது பகவான் இணைவு!’ நன்மைகளும் தீமைகளும்!

ஆனால் அளவுக்கு மீறிய வீரியத்துடன் ஒருவரை செயல்பட தூண்டிவிடக்கூடிய கிரகமாக ராகு பகவான்  உள்ளார். ஆனால் நல்ல வீரியமாக இருந்தாலும் அதை செயல்பட விடாமல் தடுக்கும் கிரகமாக கேது உள்ளார். 

ஞானகாரகன் ஆன  கேது பகவான், காசு, பணம், பதவி, பட்டம், பொருள் அந்தஸ்து தரும் கிரகம் அல்ல; இவை அனைத்தும் பொய் என்று உணர வைக்க கூடிய கிரகம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

கிரகங்கள் சாதாரணமாக ஆட்சி, உச்சம், நட்பு பெற்றாலே அவர்களை செயல்பட விடாமல் அவர்களை நீர்த்து போக செய்யும் தன்மை கொண்ட கேது பகவான் நீச்சம் பெற்ற கிரகத்துடன் சேரும்போது அந்த கிரகம் தரக்கூடிய காரகத்துவ ஆதிபத்தியங்களை தரவிடாமல் செய்துவிடுவார். 

ஒருவரது ஜாதகத்தில் 4ஆம் இடமான சுகஸ்தானத்திற்கு உரிய அதிபதி நீச்சம் பெற்று கேது உடன் சேர்ந்து இருந்தால் அவரது வாழ்கை முழுவதும் சுகத்தை அனுபவிக்க முடியாது. வீடு, வாகனம், சொத்து, உறவுகள், கல்வி மூலம் ஏற்படும் சுகத்தை அவர்களால் பெற முடியாது.

நீசம் பெற்ற சூரியன் உடன் கேது சேர்க்கை

சூரியன் நீசம் பெற்று கேது உடன் 5 டிகிரிக்கு மேல் இணைந்து இருந்தால்  தகப்பன், தகப்பனால் கிடைக்கும் நன்மைகள் தடுக்கப்படும். தவிர உங்கள் ஜாதகத்தில் சூரியன் எந்த வீட்டின் அதிபதியோ அந்த வீட்டின் பலன்கள் கிடைக்காமல் போகும். 

நீசம் பெற்ற சந்திரன் உடன் கேது சேர்க்கை

சந்திரன் கேது உடன் இணைந்து நீசம் பெற்று இருந்தால் ஜாதகர் மனநிலை பாதிப்புக்கு ஆளாக வேண்டி இருக்கும். தாயாதி வர்க்கத்தால் கிடக்க கூடிய நன்மைகள் மறுக்கப்படும். நீர்நிலைகளில் பெரும் கண்டங்களும், ஆபத்துகளுக்கும் எப்போதும் காத்துக் கொண்டு இருக்கும். பயணங்களில் விபத்துகளை சந்திக்க நேரிடும். 

நீசம் பெற்ற செவ்வாய் உடன் கேது சேர்க்கை

நீசம் பெற்ற செவ்வாய் உடன் கேது இணைந்து இருந்தால், பூமியினால் ஆதாயம் கிடைக்காது. சகோதரர்களால் கடும் பிரச்னைகள் மன வருத்தங்கள் உண்டாகும். 

நீசம் பெற்ற புதன் உடன் கேது சேர்க்கை

நீசம் பெற்ற புதன்  உடன் கேது இணைந்து இருந்தால் பெரும் பாதிப்புகள் இருக்காது. ராகு, கேதுக்கள் புதனை பாதிப்பது இல்லை. அதித அறிவாளிகளாக மாறுவீர்கள், ஆனால் யாருக்கும் பிரயோஜனம் இல்லாத அறிவாக இது இருக்கும். பலன்களை நீர்த்து போக செய்வதுதான் கேதுவின் செயல்பாடாக இருக்கும். 

நீசம் பெற்ற சுக்கிரன் உடன் கேது சேர்க்கை

நீசம் பெற்ற சுக்கிரன் உடன் கேது இணைந்தால் சுக்கிலம் நீர்த்து போகும்.  ஆண்களுக்கு ஆண்மை சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். பெண்களுக்கு கரு முட்டை சார்ந்த பிரச்னைகள் உண்டாகும். தாம்பத்ய வாழ்கையில் ஆர்வம் இருக்காது. சொகுசு விஷயங்களை அனுபவிக்க முடியாது. 

நீசம் பெற்ற குரு உடன் கேது சேர்க்கை

நீசம் பெற்ற குரு உடன் கேது இருந்தால் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் இருக்காது. தீராத கடன் தொல்லையால் ஜாதகர் பாதிக்கப்படுவார். குழந்தைகள் மேல் பற்று இருக்காது. பணத்தை சேர்த்து வைக்க தெரியாது. கல்வியால் பலன் ஏற்படாது.

நீசம் பெற்ற சனி உடன் கேது சேர்க்கை

நீசம் பெற்ற சனி பகவான் உடன் கேது இருந்தால் உழைப்பதில் ஆர்வம் இருக்காது. ஜாதகர் சோம்பேறித்தனமாக இருப்பார்.  கீழ்நிலை ஊழியர்களால் தொல்லை, சக ஊழியர்களால் பிரச்னை உண்டாகும். பற்று இல்லாத நிலையில் ஜாதகர் இருப்பார். 

குறிப்பு: இந்த இணைவுகள் இல்லாமல் வேறு சுப கோள்களின் பார்வைகள் இல்லாத போது பலன்களை எடுத்துக் கொள்ள வேண்டும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel