தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ketu In Astrology: ‘மேஷம் முதல் மீனம் வரை!’ கேது உடன் சேர்ந்த கிரகங்கள் செய்யும் சேட்டைகள்!

Ketu in astrology: ‘மேஷம் முதல் மீனம் வரை!’ கேது உடன் சேர்ந்த கிரகங்கள் செய்யும் சேட்டைகள்!

Kathiravan V HT Tamil
Apr 23, 2024 04:34 PM IST

”ராகு என்பது எப்போதும் பிரம்மாண்டம் என்றால், கேது என்பது எப்போதும் சுருக்கம் ஆகும். உங்கள் கெட்ட குணத்தை சுருக்கி கொண்டு நல்ல குணத்தை விரிவுப்படுத்தினால் கேது எப்போதும் உங்களுக்கு நன்மை செய்வார்”

கேது பகவான் சேர்க்கை தரும் நன்மை தீமைகள்
கேது பகவான் சேர்க்கை தரும் நன்மை தீமைகள்

கேது பகவான் என்றாலே சட்ட கிரகம் என்பர்கள், கேதுவின் அனுக்கிரகம் இல்லை என்றால் சட்டம், நீதித்துறையில் சாதிக்க முடியாது. நமது உடலில் உள்ள நுண்ணிய நரம்புகள் கேதுவின் ஆதிக்கம் பெற்றவை, ஆன்மீகத்திற்கான சுதந்திரத்தை நமக்கு கொடுக்கும் கிரகமாக கேது உள்ளது. 

ஆன்மீகம், ஜோதிடம், மருத்துவம், சட்டம், நீதி ஆகிய துறைகள் கேதுவின் ஆதிக்கம் கொண்டது. கேது என்றாலே ஞான கிரகம் என்று பொருள், மறைமுகமாக உள்ள விஷயங்களை அம்பலப்படுத்துவது கேதுதான். 

கேது பகவானுக்கு சொந்த வீடு கிடையாது. கேது எந்த வீட்டில் உள்ளாரோ அந்த வீட்டை தனதாக்கி கொள்வார். கேது எந்த கிரகத்துடன் சேர்ந்து உள்ளாரோ அந்த கிரகத்தின் குணத்தை முழுமையாக எடுத்துக் கொள்வார். 

ராகு என்பது எப்போதும் பிரம்மாண்டம் என்றால், கேது என்பது எப்போதும் சுருக்கம் ஆகும். உங்கள் கெட்ட குணத்தை சுருக்கி கொண்டு நல்ல குணத்தை விரிவுப்படுத்தினால் கேது எப்போதும் உங்களுக்கு நன்மை செய்வார். 

ஒவ்வொரு கிரகத்துடனும் கேது சேர்ந்தால் எப்படி இருக்கும்?

ராகு உடன் கேதுவால் எப்போதும் சேர முடியாது. ராகு இருக்கும் வீட்டில் இருந்து 7ஆம் வீட்டில் கேது இருப்பார். கேது இருக்கும் வீட்டில் இருந்து ராகு 7ஆம் வீட்டில் இருப்பார் என்பது ஜோதிட விதியாகும். 

சூரியன் உடன் கேது!

தலைமை கிரகமான சூரியன் உடன் கேது சேரும் போது, அந்த நபர்கள் தலைமை பொறுப்பில் இருப்பார்கள். அவர்களுக்கு அரசியல், ஆன்மீகம், ஜோதிடம் சார்ந்த ஆர்வம் அதிகமாக இருக்கும். குல தெய்வ வழிபாட்டில் ஆர்வம் செலுத்தினால் தொடர் நன்மைகள் கிடைக்கும். 

சந்திரன் உடன் கேது!

சந்திரன் உடன் கேது சேர்ந்தால் மன அழுத்தம் ஏற்படும்.  இவர்களால் உடனடியாக முடிவெடுக்க முடியாது. இவர்களால் பணத்தை சேமிக்க முடியாது. மனித தலை இல்லாத தெய்வமான வாராகி, பிருத்தியங்கரா தெய்வங்களை வழிபாடு நடத்துவது நன்மைகளை தரும். 

செவ்வாய் உடன் கேது!

செவ்வாய் உடன் கேது சேர்ந்து இருந்தால் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற பேச்சு இருக்கும். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேச தெரியாது என்பதால் சில சிக்கல்களையும் இவர்கள் சந்திப்பார்கள். இவர்களுக்கு சில சமயங்களில் கர்வம் அதிகமாக இருக்கும். இவர்கள் பேச்சு மிக கடுமையாக இருக்கும். செவ்வாய்-கேது இணைவு பெண்கள் ஜாதகத்தில் இருந்தால் திருமண வாழ்கையில் பிரச்னைகள் இருக்கும். 

புதன் உடன் கேது!

புதன் உடன் கேது இருந்தால் ஞானிகளாக இருப்பார்கள். இவர்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தால் மிக சிறப்பாக செய்து முடிப்பார்கள். ஆனால் இவர்களின் ஆவணங்களில் கண்டிப்பாக தவறுகள் இருக்கும். நரம்பு மற்றும் தோல் பிரச்னைகள் இருக்கும். 

குரு உடன் கேது!

குரு கேது சேர்க்கை தவம், ஜபம், தியானம் மீது அதிக ஆர்வம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் மீளா கடனாளிகளாக இருப்பார்கள். 

சுக்கிரன் உடன் கேது!

சுக்கிரன் - கேது சேர்க்கை உள்ளவர்கள் எலட்ரிக்கல்ஸ் மற்றும் எலட்ரானிக்ஸ் துறையில் வெற்றிக் கொடி நாட்டுவார்கள். ஆனால் பணத்தை கொடுத்து ஏமாறும் தன்மை கொண்டவர்கள். பங்குச்சந்தையில் இருக்கும் போது கவனம் தேவை. 

சனி உடன் கேது! 

இவர்களுக்கு திருமண வாழ்கையில் எளிதில் பற்று இருக்காது. தாமதமாக திருமணம் செய்வது இவர்களுக்கு நன்மை ஏற்படுத்தி தரும். சனி என்ற தொழில்காரகன் உடன்  கேது சேர்ந்தால் தொழிலை பிரம்மாண்டபடுத்தும் போது  கவனம் தேவை. 

கேது தனியாக இருந்தால்!

தனித்த கேதுவாக இருந்தால் இருக்கும் இடத்தை கேது தனதாக்கி கொள்வார். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel