தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chandran: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ஜாதகத்தில் சந்திரன் நின்ற வீட்டில் ஏற்படும் பலன்கள்!

Chandran: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ஜாதகத்தில் சந்திரன் நின்ற வீட்டில் ஏற்படும் பலன்கள்!

Kathiravan V HT Tamil
Apr 27, 2024 04:08 PM IST

“மகிழ்ச்சிக்குகாரகன் ஆன சந்திரன், மனதை கட்டுப்படுத்தும் கிரகம் ஆவார். 12 ராசிகளில் சந்திரன் எந்த வீட்டில் உள்ளாரோ அந்த ராசியைத்தான் ஜென்ம ராசியாக கணிக்கின்றனர்”

ஜாதகத்தில் சந்திரன் உள்ள இடத்தின் பலன்கள்
ஜாதகத்தில் சந்திரன் உள்ள இடத்தின் பலன்கள்

அம்மாவுக்கு காரகன் ஆன சந்திரன், ஒரு ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் தாயார் அரவணைப்பு நன்றாக இருக்கும். சந்திரனுக்கு அதி தேவதையாக அம்பாள் உள்ளார். எனவே பராசக்தியின் அம்சமாக சந்திர பகவான் உள்ளார். 

ஒருவரது ஜாதகத்தில் 1, 3, 6, 7, 10, 11 ஆகிய இடங்களில் சந்திர பகவான் இருந்தால் அதிக நன்மைகளை தருவார். மீதி உள்ள இடங்களில் சந்திரன் இருந்தால் நன்மைகளையும், தீமைகளையும் சேர்ந்து வழங்குவார். 

மகிழ்ச்சிக்குகாரகன் ஆன சந்திரன், மனதை கட்டுப்படுத்தும் கிரகம் ஆவார். 12 ராசிகளில் சந்திரன் எந்த வீட்டில் உள்ளாரோ அந்த ராசியைத்தான் ஜென்ம ராசியாக கணிக்கின்றனர். 

சந்திரன் ராகு உடன் இணைந்தால் போகம் சார்ந்த ஆர்வமும், எதிர்மறை எண்ணங்களும் ஏற்படும். சந்திரன் கேது உடன் சேர்ந்தால் விரக்தி ஏற்படும், சந்திரன் சுக்கிரனோடு சேர்ந்தால் குதுகலமும், குருவோடு சேர்ந்தால் புத்திசாதூர்யமும், செவ்வாய் உடன் சேர்ந்தால் வீரமும் கூடும். 

சந்திரன் பகவான் சூரியனோடு சேர்ந்தால் அமாவாசை யோகத்தை ஏற்படுத்தும். ஆனால் சனியோடு சேர்ந்தால் புணர்பு தோஷத்தை ஏற்படுத்தும். 

முதல் வீடு

சந்திரன் லக்னம் எனப்படும் முதல் வீட்டில் இருந்தால் முகம் அழகாக இருக்கும்.  லக்னத்தில் சந்திரன் இருப்பது ஜனஜென்ம யோகம் ஏற்படும். இவர்களுக்கு நல்ல கீர்த்தியும், நல்ல மனதும் அமையும். புத்திசாலிகளான இவர்கள் வாழ்கை துணைக்கு இனியவர்களாக விளங்குவர். இவர்கள் எந்த ஊருக்கு சென்றாலும் வரவேற்பு கிடைக்கும். சந்திரன் லக்னத்தில் இருந்தால் ஜலதோஷம் போன்ற நீர் சம்பந்தமான வியாதி சிக்கல்கள் வர வாய்ப்புக்கள் உள்ளது. சந்திரன் லக்னத்தில் இருப்பது மகிழ்ச்சிக்கு காரணமாக உள்ளது. 

2ஆம் வீடு

சந்திரன் 2ஆம் வீட்டில் இருந்தால், குடும்பத்தை நன்கு பாதுகாக்கும் நிலைக்கு ஜாதகர் இருப்பார். குடும்பத்தில் செல்வ வசதி இருக்கும். சிரித்து பேசும் தன்மை இவர்களுக்கு உண்டு. இவர்கள் கண்கள் பிறரை ஈர்க்கும்படி இருக்கும். காரியத்தில் கண்ணாக இருக்கும் இவர்களுக்கு, ஆண்களாக இருந்தால் பெண்களிடமும், பெண்களாக இருந்தால் ஆண்களிடமும் நேசம் அதிகமாக இருக்கும். 

3ஆம் வீடு

சந்திரன் மூன்றாம் வீட்டில் இருந்தால் அஞ்சா நெஞ்சராக இருப்பார்கள். பயண பிரியர்களான இவர்களுக்கு, உஷ்ணம் தொடர்பான வியாதிகள் வர வாய்ப்புக்கள் உள்ளது. சகோதர வழியில் இவர்களுக்கு மகிழ்ச்சியும், ஆதரவும் கிடைக்கும்.

4ஆம் வீடு 

நான்காம் வீட்டில் சந்திரன் இருந்தால் பெரிய வீடு அமையும். விருந்தோம்பலில் ஆர்வம் செலுத்துவார்கள்.  வருவாய் போதுமானதாக இருக்கும். சொந்த ஊரிலேயே செட்டில் ஆகும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கும். கல்வி, வாகனம், சொத்துக்கள் இவர்களுக்கு நிரம்ப கிடைக்கும். 

5ஆம் வீடு

ஐந்தாம் வீட்டில் சந்திரன் இருந்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தற்பெருமை இருக்கும் இவர்கள் இனிக்க இனிக்க பேசும் தன்மை கொண்டவர்கள். எழுத்து துறையில் இவர்கள் முன்னேற்றம் அடைவார்கள், நல்ல வாழ்கைத்துணை இவர்களுக்கு அமையும். 

6ஆம் வீடு

ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால் அனைத்திலும், வெற்றி கிடைக்கும், ஆனாலும் ஞாபக மறதி இருக்கும். வழக்கு, கடன், வியாதியில் ஏதேனும் ஒரு பிரச்னை தொடரும். இவர்கள் யாருக்காவது பணம் கொடுத்தால், கொடுத்த பணம் திரும்பி வராது. 

7ஆம் வீடு

ஏழாம் வீட்டில் சந்திரன் இருந்தால் விருப்பமான அழகான வாழ்கைத்துணை அமையும். பௌர்ணமி காலங்களில் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. இவர்களது வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

8ஆம் வீடு

எட்டாம் வீட்டில் சந்திரன் இருந்தால், அஷ்டம தோஷம் என்று சொல்வார்கள். இவர்கள் கண்டங்களை சந்திக்க வாய்ப்புக்கள் உண்டு. ஜலதோஷ தொந்தரவு இவர்களுக்கு உண்டு. மறைமுக எதிர்கள் இவர்களுக்கு இருப்பார்கள். சொத்துக்களை இழக்க வாய்ப்புக்கள் உண்டு. 

9ஆம் வீடு

ஒன்பதாம் இடத்தில் சந்திரன் இருப்பது தந்தைக்கு நீண்ட ஆயுளை தரும். கல்வியில் எப்போதும் நாட்டம் இருக்கும். சிறுவியாதிகள் தோன்றி மறையும். நல்ல குணநலன்கள் இருக்கும். நல்ல குருமார்கள் வாய்க்கப்பெறுவார்கள். 

10ஆம் வீடு

பத்தாம் இடத்தில் சந்திரன் இருந்தால், நகைச்சுவை பண்பு இருக்கும். சகலகலா வல்லவர்களான இவர்களுக்கு உணவுத்தொழிலில் ஆர்வம் இருக்கும். பெண்கள் மூலமாக வருவாய் ஈட்டும் சூழல் இவர்களுக்கு அமையும்.  ஏதோ ஒரு வகையில் இவர்களுக்கு வருவாய் வந்து கொண்டே இருக்கும். 

11ஆம் வீடு

பதினோராம் இடத்தில் சந்திரன் இருந்தால் புத்திசாலிதனம், தீர்க்க ஆயுள் கிடைக்கும். இவர்களுக்கு கீழ் பலர் வேலை செய்யக்கூடிய தன்மை உண்டாகும். கலைத்துறை மற்றும் போட்டி பந்தையங்களில் ஆர்வம் இருக்கும். நினைத்ததை முடிக்கும் வைராக்யம் இருக்கும். 

12ஆம் வீடு

பனிரெண்டாம் இடத்தில் சந்திரன் இருந்தால், சந்தோஷம் மீது நினைப்பு இருக்கும். அயன சயன போக பாக்கியங்கள் மீது அதிக நினைப்பு இருக்கும். இதனால் சிலருக்கு நோய் மற்றும் சமூகத்தில் பெயர் கடும் சுழல் ஏற்படும். ஒரு சிலருக்கு தண்ணீரில் கண்டம் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.

சந்திர பலம் குறைவாக இருப்பவர்கள் அபிராமி அந்தாதி பாடுவது, திருப்பதி பாலாஜியை வழிபடுவதன் மூலம் வாழ்வில் சிறப்புகளை பெறலாம். 

WhatsApp channel