தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tiruchendur: திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா கோலாகலம்!

Tiruchendur: திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா கோலாகலம்!

Karthikeyan S HT Tamil
Feb 27, 2023 12:20 PM IST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவையொட்டி அதிகளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா.
திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா.

இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோயிலில் நடக்கும் பல்வேறு முக்கிய விழாக்களில் மாசித் திருவிழாவும் பிரசித்தி பெற்றது.

இந்தாண்டு மாசித் திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் தினசரி காலை, மாலை நேரங்களில் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இரண்டாம் நாளான நேற்று காலை சுவாமி, குமரவிடங்க பெருமான் சிங்ககேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளினர். தொடர்ந்து இரவு சிங்ககேடய சப்பரத்திலும் அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எட்டு வீதியும் உலா வந்து அருள் பாலித்தனர். மாசித்திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பறவை காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுவதால் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

மூன்றாம் நாளான இன்று காலை சுவாமி பூங்கோவில் சப்பரத்திலும், அம்பாள் கேட சப்பரத்திலும் எழுந்தருளினர். மாலை மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப் பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் அன்ன வெள்ளி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். திருச்செந்தூர் மாசித் திருவிழாவில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

WhatsApp channel

டாபிக்ஸ்