தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Adityahrudayam: ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்தால் கிடைக்கும் நன்மைகள்!

Adityahrudayam: ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்தால் கிடைக்கும் நன்மைகள்!

Manigandan K T HT Tamil
Feb 19, 2024 11:55 AM IST

பிரம்மாவின் ஆணையின்படி, விஸ்வ கர்மா,வெளிச்சம் மங்கிய ஆதவனுக்கு ,ஒளியை அள்ளித்தந்த அற்புத நாளே ரதசப்தமி.

சூர்ய பகவான்
சூர்ய பகவான் (pixabay)

எனவே அன்றைய தினம் ஆதவனை துதிக்க அளவற்ற நன்மை உண்டு என முன்னோர வழி காட்டியுள்ளார்.

தை மாசம் அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதிக்கு "ரத சப்தமி" என்று பெயர் . பிரம்மாவின் ஆணையின்படி, விஸ்வ கர்மா,வெளிச்சம் மங்கிய ஆதவனுக்கு ,ஒளியை அள்ளித்தந்த அற்புத நாளே ரதசப்தமி.

ரத சப்தமி அன்று, சூரியனை வழிபடுவது மிகவும் சிறந்தது. சூரிய உதயத்தின் போது ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்தால், கண் கோளாறு, இருதய நோய், மறையும். அரசு சம்பந்தமான செயல்களில், வெற்றி கிடைக்கும் என்பார்கள். "அதிகாலையில் சூரியனை பார்க்காதவரின் வாழ்நாள் ஒவ்வொன்றும் வீணே" என்பார் காஞ்சி மகா பெரியவர்.

வால்மிகி ராமாயணத்தில், அகத்திய முனிவரால் ஸ்ரீ ராமருக்கு, இந்த ஸ்தோத்திரம் கூறப்பட்டதாம். வீடு பேரினை அளிக்க வல்லது இது, காயத்ரி மந்திரத்தின் வடிவமாகும். அந்தி வேளை இதை,ஸ்தோத்திரம் செய்ய ,அதிக பலனுண்டு. நிலையான வாழ்வு,முக்தி போன்றவை கிடைக்கும்.

சிவபெருமானால் போதிக்கப்பட்ட "சூர்யா அஷ்டகம்" சூரியனை "விஸ்வகர்த்தா" என்று கூறுகிறது. சூரியனுக்கு எதிரில் நின்று, தினமும், சூரிய உதிக்கின்ற நேரத்தில் பாராயணம் செய்ய, கிரஹங்களினால் உண்டாகும் பிரச்சனைகள் அகலும்.ஞாயிறு அன்று செய்வது மேலும் நன்று.

ரத சப்தமியில் விரதம் இருக்க நினைப்பவர்கள் காலை எழுந்து எருக்கம் இலையை தலையில் வைத்து அதற்கான ஸ்லோகத்தை சொல்லி நீராடுவார்கள், மஞ்சள் சேர்த்து நீராடு வழக்கமும் உண்டு. இன்று இடத்தை சுத்தப்படுத்தி, செம்மண் பூசி சந்தனம்,குங்குமம்,மலர்கள்,அட்சதை வைத்து வழிபடுவர். சக்கரைப் பொங்கல்,வடை வைத்து, நைவேத்தியம் செய்வர். இதனால் தோஷங்கள் விலகுவதாக ஐதீகம்.

சூரியனுக்கு உரிய கிழமை ஞாயிறு,சூரியனுக்கு "ஞாயிறு" என பெயரும் உண்டு. "ஞா"என்றால் நடுவில் தொங்குகிற, "யிரு" என்றால் இறுக பற்றி கொண்டுள்ள, நடுவிலுள்ள சூரியன் மற்ற கிரகங்களை இறுகபற்றி கொண்டு உள்ளது என்று பொருள். சூரியனுக்கு "அர்க்கன்" என்னும் பெயரும் உண்டு. சூரியனார் கோவில் தலவிருட்சமாக எருக்கு உள்ளது.

சூரிய நமஸ்காரத்தின் போது, கிழக்கு நோக்கி நின்று ஜபிக்கும் ஸ்லோகங்களின் சக்தியால், ஆன்ம பலம் பெருகும் என்பார்கள் பெரியவர்கள்.

சூரியன் ஒவ்வொரு நாளும் நம்கண்களுக்கு நேராகத் தெரியும் பரப்பிரம்மா என்று "சூரியோபநிஷத்" கூறுகிறது. சூர்ய சக்தியை கூறும் "அருண" மந்திரம் சொல்ல எதிர்ப்பாற்றல் கிடைத்து, ஆரோக்கியம் சீர்படுகின்றது. காலச் சக்கரத்தின் ஆதாரமே ஆதவன்தான். இவரை நல் பக்தியோடு 108 தடவை தினமும் ஜபிக்க பேரருள் கிடைக்கும் என்பர்.

மஹாபாரதத்தில் மிகவும் முக்கியமானவர் பீஷ்மர். இவரின் இயற்பெயர் தேவ விரதன். கற்றறிந்ததினால் இவரை "பிதாமகர்" என்று அழைத்தனர். திரௌபதி துகிலுரிப்பில் ,மௌனம் சாதித்ததால் பாவகர்மா சேர்ந்தது. நினைத்தும் சாவு வராத நிலையில் உடலை எரிக்க,சூர்ய சக்தி அதிகமாக கொண்டுள்ள எருக்க இலைகளை உடல் மீது வியாசர் பரப்பிய பின் பீஷ்மரின் ஆத்மா பிரிந்தது என்பதை புராணம் கூறும்.

தேவவிருதன், தன் வாழ்நாளில், திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்து, அதை கடைபிடித்து நைஷ்டிக பிரம்மச்சாரியத்தை கடைப்பிடித்து, அந்த தியாகத்திற்காக "விரும்பும் நேரத்தில்" இறக்கும் வரத்தையும் பெற்றார். போரில், திரௌபதிக்கு செய்த அநீதியால், அம்புகள் துளைத்துக் கிடக்கும் போது, வியாசர் அங்கு வந்து, எருக்கம் இலையால் உடலை மூடியதும், பீஷ்மரின் கர்மா விலகியது.

இறக்கும் தருவாயில், அவர் விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லி மகிழ்ந்தார். மரியாதை நிமித்தம் ஆசி பெற பலரும் வந்து இவரை பார்க்கும்போது, இவர் விருப்பத்திற்கு ஏற்ப, "நாங்களே உங்களுக்கு தர்ப்பணம் செய்வோம்" என்று சொன்னார்கள். மாசி மாதம், சுக்ல பக்ஷ்ம் அஷ்டமியில் பீஷ்மர் மோட்சமடைந்தார். இது ரத சப்தமிக்கு அடுத்த நாள். இதனை "பீஷ்மாஷ்டமி" என்கின்றனர்.

புண்ணிய தலங்களில், புண்ணிய நதிக்கரைகளில் அல்லது வீடுகளில் கூட இவருக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். இதனால், பாவங்கள் தோஷங்கள் விலகி, பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார்,சென்னை.

தொடர்புக்கு: manivks47@gmail.com

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

WhatsApp channel

டாபிக்ஸ்