HBD Nallakannu: 7 ஆண்டுகள் சிறை.. மக்களுக்கான தொடர் போராட்டங்கள்..98 வயதிலும் இடதுசாரி.. நல்லகண்ணு ஐயாவின் பிறந்தநாள்!
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவின் பிறந்தநாள் தின சிறப்புக் கட்டுரை குறித்துக் காண்போம்.
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு இன்று(டிசம்பர் 26) தனது 98ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முக்கிய மனிதராக நல்லகண்ணு போற்றப்படுகிறார். அவர் மக்களுக்கு செய்த களப்பணிகள் குறித்து காண்போம்.
யார் இந்த நல்லகண்ணு?: நல்லகண்ணு டிசம்பர் 26, 1925ஆம் ஆண்டு பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தின் (தற்போதைய தூத்துக்குடி மாவட்டம்), ஸ்ரீவைகுண்டம் நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். இளம்வயது முதலே பொது மற்றும் சேவைப்பணிகளில் ஆர்வம் கொண்ட நல்லகண்ணு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து நாட்டின் விடுதலைக்காக சிறை சென்றவர்.
நல்லகண்ணு ரஞ்சிதம் அம்மாளை இளவயதில் திருமணம் முடித்தார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ரஞ்சிதம் அம்மாள், ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளித்தலைமை ஆசிரியையாக இருந்து ஓய்வுபெற்றார்.
கம்யூனிஸ்ட் கட்சியில் நல்லகண்ணு: 15 வயது இருக்கும் போதே, நல்லகண்ணு இடதுசாரி இயக்கச் செயல்பாடுகளில் தீவிர ஆர்மாக இருந்தவர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பஞ்சம் நிலவிய காலகட்டங்களில் இரண்டாயிரம் நெல் மூட்டையை ஒருவர் பதுக்கிவைத்துள்ளார் என்பதை அறிந்து ஜனசக்தி என்னும், இந்திய கம்ய்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையில் எழுதி, அதை கலெக்டர் கவனத்திற்குக் கொண்டு சென்று அரசு இயந்திரத்தை நடவடிக்கை எடுக்க வைத்தார். தந்தையிடம் சொல்லாமல் எளிய மக்களுக்கான போராட்டங்களில் பங்கெடுத்தார். இதனால் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையைப் பெற்ற நல்லகண்ணு, சுதந்திரம் பெறும்தருவாயில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரிட்டிஷ் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 7ஆண்டுகளில் சிறையில் இருந்து ரிலீஸ் ஆனார். பின் 18ஆவது ஆனவுடன் அதிகாரப்பூர்வமாக தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகாரப்பூர்மாக இணைத்துக் கொண்டார். ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி சுற்றுவட்டார பட்டியல் இன மக்களின் வாழ்வினை மேம்படுத்த கணிசமான போராட்டங்களை முன்னெடுத்தார். சாதியற்ற சமூகத்தை உருவாக்கத் தொடர்ந்து குரல் கொடுத்தார், நல்லகண்ணு.
முக்கியப் போராட்டங்கள்: இந்தியாவிலுள்ள ஒரு இடதுசாரி அரசியல் அமைப்பான விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத்தலைவராக 25ஆண்டுகள் இருந்து விவசாயிகளுக்கான போராட்டங்களில் ஈடுபட்டார், நல்லகண்ணு. பின், 1992ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டுவரை ஏறத்தாழ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளராக களமாடி, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர்.
குறிப்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பல்வேறு வழக்குகளை தொடுத்தவர். அதில் 2010 டிசம்பர் 2ல் ஆற்றில் மணல் எடுக்க 5 ஆண்டுகளுக்குத் தடையையும், 2018ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ள தடை உத்தரவையும் பெற்றார். உண்ணாவிரதம் மேற்கொண்டு ஒரு முறை 20 நாட்கள் வரை சாப்பிடாமல் இருந்தார்.
அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படக்கூடியவர்: 1999ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் களம்கண்ட நல்லகண்ணு 43.21 விழுக்காடு வாக்குகளைப் பெற்று சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார். இருப்பினும் கோவையில் பிற கட்சியினரால் மதிக்கப்பட்டவர். தமிழக அரசின் அம்பேத்கர் விருதையும் தகைசால் தமிழர் விருதையும் பெற்றவர். 2019ஆம் ஆண்டில் இவர் சென்னையில் வசித்த வீட்டினை அரசு அதிகாரிகள் காலிசெய்யச் சொல்ல அது அரசியலில் பெரிய சலசலப்பினை ஏற்படுத்தியது. பின், பல்வேறு கட்சியினரின் கண்டனங்கள் காரணமாக வேறு ஒரு வீடு நல்லகண்ணு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தகைய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணுவை பிறந்தநாளில் வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்