Mohan G: பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை... பகாசூரனை பட்டுன்னு தூக்கிய போலீசார்... புலம்பும் பாஜக
Mohan G: திருப்பதி லட்டு விவகாரம், பழநி பஞ்சாமிர்தம் குறித்து தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை பதிவிட்டு வந்த இயக்குநர் மோகன் ஜி-யை போலீசார் கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.
திருப்பதி லட்டில் விலங்குகளின் எச்சங்கள் கலந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இ்ந்த சம்பவத்தில் இந்து மக்களின் மனம் புண்படும்படி சிலர் நடந்துவிட்டதாகக் கூறி பல பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தை கையிலெடுத்த சிலர் மிகவும் எதிர்மறையான கருத்துகளைப் பரப்பி அரசியல் ஆதாயம் தேடி வந்தனர்.
பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை
இந்த நிலையில், தமிழக மக்களின் தெய்வமாக பார்க்கப்படும் முருகக் கடவுளின் கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் குறித்து இயக்குநர் மோகன் ஜி மிகவும் மோசமான கருத்து ஒன்றை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பழநி கோயிலைப் பற்றி கூறுகிறீர்களா என கேட்டதற்கு தான் கேள்விப்பட்டவற்றை கூறினேன் என பதிலளித்துள்ளார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில், பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்துள்ளது எனக் கூறி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதனால், ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து பதற்றத்தை ஏற்படுத்திய மோகன் ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வந்தனர்.
மோகன் ஜி கைது
மேலும், திருப்பதி லட்டு விவகாரத்தில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் கருத்து தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். இது அவரது தவறான அரசியல் பாதையை காட்டுகிறது என கூறிவந்தார். மேலும், விஜய் பெரியார் பிறந்தநாளன்று அவரை வணங்கியது உள்ளிட்ட பல விஷயங்களுக்கு தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளையே கூறி வந்தார்.
இந்த நிலையில் தான் சென்னை வண்ணாரப்பேட்டையில் இயக்குநர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
புலம்பும் பாஜக
இவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் காட்டமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து அவர்களது ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்போர் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது என்றார்.
மேலும், சினிமா இயக்குநர் நண்பர் திரௌபதி மோகன் ஜி சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
அமைச்சர் விளக்கம்
முன்னதாக திருப்பதி லட்டு விவகாரத்தில் வெளி நிறுவனங்களில் இருந்து லட்டு செய்ய வாங்கப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் என மிருக எச்சங்கள் இருந்ததாக தெலுங்கு தேசம் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. மேலும், திருப்பதி லட்டு செய்ய தமிழ்நாட்டிலிருக்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து தான் நெய் வாங்கப் படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால், தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு பிற நிறுவனங்களிடமிருந்து நெய் வாங்கக் கூடாது. அரசின் ஆவின் நெய்யையே பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களில் பயன்படுத்த இதுவரை ஆவின் நெய்யே பயன்படுத்தப்பட்டு வருகிறது என கூறியிருந்தார்.
இந்நிலையில், திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் படங்களை இயக்கிய மோகன் ஜி பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்துள்ளது என தகவல் பரப்பி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.