மருத்துவ மாணவர்களுக்கு புதிய சலுகை..3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..தங்கம் விலை உயர்வு - இன்றைய டாப் 10 நியூஸ் இதோ..!
Tamil top 10 News: மருத்துவ மாணவர்களுக்கு புதிய சலுகை, 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், தங்கம் விலை உயர்வு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளை டாப் 10 தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், வானிலை முன்னெறிவிப்பு உள்பட இன்றைய முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
மருத்துவ மாணவர்களுக்கு புதிய சலுகை
மருத்துவ பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைத்தது தமிழ்நாடு அரசு. மேற்படிப்பு பயிலும் மாணவர்கள் 2 ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்ற வேண்டும் என்ற விதியை தளர்த்த வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை வைத்தன.
பழனி கோயிலில் திருமாவளவன் சாமி தரிசனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்திற்கு சென்று தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவசமாதியில் வணங்கினார். புலிப்பாணி ஆசிரமத்தில் பழனி போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள், திருமாவளவனை வரவேற்று பிரசாதங்கள் வழங்கினார்.
அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
சென்னை அண்ணா சாலையில் ரூ.621 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். தேனாம்பேட்டையில் இருந்து எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனெடாப் சாலை, நந்தனம் சந்திப்பு, சிஐடி சாலை சந்திப்புகளை கடந்து சைதாப்பேட்டை வரை 3.2 கி.மீ தொலைவிற்கு 4 வழி உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திமுக நகரச் செயலாளர் கொலை வழக்கு
கடந்த 2016ல் விழுப்புரம் திமுக நகரச் செயலாளராக இருந்த செல்வராஜை கொலை செய்த வழக்கு உள்பட 15 கொலை வழக்குகளில் தொடர்புடைய புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்த ஜெயசீலன் என்பவரை கைது செய்தனர் தனிப்படை போலீசார். தலைமறைவாக இருந்தபடியே தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மதுரையில் தரையிறங்கிய தூத்துக்குடி விமானம்
சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்ட விமானம், அவசரமாக மதுரையில் தரையிறங்கியது. சம்பந்தப்பட்ட விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 77 பேர் பயணித்துள்ளனர். 77 பயணிகளும் மதுரை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் தூத்துக்குடி புறப்பட்டனர்.
தம்பதி சிறையில் அடைப்பு
ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் ஆனந்தன், சத்யாவதி தம்பதி சிறையில் அடைப்பு. ஆனந்தன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவியையும் கைது செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீசார்.
"குற்றவாளிக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும்"... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !
பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது, இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும். கிராமப்புறப் பகுதியில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட செல்வி ரமணி அவர்களின் உயிரிழப்பு பள்ளிக் கல்வித் துறைக்கும், சக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். செல்வி ரமணி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, செல்வி ரமணி அவர்களின் குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ 10, +2 பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.4ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 18 ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறுகிறது.
தங்கம் விலை உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,145 க்கு விற்பனையாகிறது.
3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
ராமநாதபுரம், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
டாபிக்ஸ்