HT Special: பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் பத்மநாபபுரம் அரண்மனை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ht Special: பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் பத்மநாபபுரம் அரண்மனை!

HT Special: பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் பத்மநாபபுரம் அரண்மனை!

Karthikeyan S HT Tamil
Apr 30, 2023 03:11 PM IST

Padmanabhapuram Palace: பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் 414 ஆண்டுகள் பழமையான பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய சுவராஸ்ய தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

பத்மநாபபுரம் அரண்மனை
பத்மநாபபுரம் அரண்மனை

ஊர் முழுவதும் கோட்டையால் சூழப்பட்டிருக்கும். கி.பி.1592 – 1609 ல் திருவாங்கூரை ஆண்ட இறவி வா்மா குலசேகரபெருமாள் என்ற மன்னரால் கி.பி. 1601-ஆம் ஆண்டு இந்த அரண்மனை கட்டப்பட்டது. திருவாங்கூா் மன்னா்களின் ராஜிய உறைவிடமாக திகழ்ந்த இந்த அரண்மனை, கேரளக் கட்டிடக் கலையின் நிகழ்கால சாட்சியாக இருக்கிறது.

இந்த அரண்மனையின் நூழைவாயிலைப் பூமுகம் (நுழைவு மண்டபம்) என்பர். மாளிகையின் எந்த திசையில் திரும்பினாலும் அழகிய தேக்கு மரவேலைப்பாடுகள் கண்ணைக் கவரும். தாய்க் கொட்டாரத்தில் தொங்கும் குதிரை விளக்கு எத்திசையும் திரும்பவல்லது. மேல்கூரை தேக்கில் 90 வகைப் பூக்கள்.

முதலாவது மாடியில் மந்திர சாலை (அவை மண்டபம்), முப்புறமும் தேக்குச் சுவர்கள். அரிய செதுக்கு வேலைப்பாடுகள் நிறைந்து காணப்படும். தண்காற்று வீசும் தொழில் நுட்பம். சீனப் பரிசாக 17-ஆம் நூற்றாண்டு நாற்காலிகள். இங்குதான் மன்னர் மந்திரிகளுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவை மண்டபம்
அவை மண்டபம்

மந்திர சாலையைக் கடந்து படிகளால் கீழே இறங்கினால் வருவது மணி மேடை (மணிக்கூண்டு) ஆகும். இந்த மணிக்கூடு ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த மணிக்கூட்டின் மணி யோசையை 3 கிமீ சுற்று வட்டாரத்திற்கு உள்ளே இருக்கும் அனைவராலும் கேட்க முடியும்.

மணி மாளிகையைத் தாண்டிச் இருப்பது ஊட்டுபுரை (அன்னதாக கூடம் ) என்பது உணவு உண்ணும் சாலை. அது மிகவும் பெரியது. இங்குள்ள மண்டபத்தில் ஒரே நேரத்தில் சுமார் 2000 பேர் வரை ஒன்றாக அமர்ந்து உணவருந்த முடியும். அடுத்த அறையில் ராட்சஸ அளவிலான 12 சீனத்து ஊறுகாய்ப் பரணிகள் காணப்படுகிறது. அடுத்து உண்டக்கல் மற்றும் திறந்தவெளி. 38 கிலோ எடையுள்ள ஓர் உருண்டைக்கல். அதை இரு கரங்களால் 101 தடவை தலைக்கு மேல் தூக்கி வலிமை நிரூபித்தால் மட்டுமே அந்த காலத்தில் ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

சீனத்து ஊறுகாய்ப் பரணிகள்
சீனத்து ஊறுகாய்ப் பரணிகள்

நவீன திருவாங்கூரை வடிவமைத்த மார்த்தாண்ட வா்மா, மரத்தாலான நவராத்திரி மண்டபத்தை கற்களால் மாற்றி அமைத்தார். 1744-ல் பெருமாள் கொட்டாரம் என்னும் 4 அடுக்கு உப்பரிகை மாளிகையையும் புதுப்பித்து வடிவமைத்தார். இம்மாளிகை 1940-ல் பல்வேறு பகுதிகளிலும் பாரம்பரிய உத்திகளின்படி புதுப்பிக்கப்பட்டது.

அரசியின் அந்தப்புரத்தில் தந்த வேலைப்பாடுகளுடன் கட்டில், பெல்ஜியம் கண்ணாடி, எழிலார்ந்த ஊஞ்சல். கண்ணன் லீலைகள் தீட்டிய கவர்ச்சித்திரங்கள் எனப் பல அழகுகள். மன்னரின் கட்டில் 54 மூலிகைத் துண்டுகளால் ஆனது. உப்பரிகை மாளிகையின் பூஜை அறை உள்ளது. அங்கு தொங்கும் வெண்கல தீபம் அணையாது. எரிந்து கொண்டே இருக்கும்.

இவை தவிர இந்த அரண்மனையின் முக்கிய பகுதிகள் - நடனசாலை, ஆயுத சாலை, மணிக்கூண்டு, நீராடும் சிறுபொய்கை, சுரங்கப்பாதை, கண்ணாடி தளம், நவராத்திரி மண்டபம், இந்திர விலாசம் மற்றும் சந்திர விலாசம் எனப் பல அழகிய கட்டுமானங்களை உடையது இந்த அரண்மனை. ஏறத்தாழ 414 வருடங்கள் பழைமையான இந்த பத்மநாபபுரம் அரண்மனையில் இன்றும் கூட மின் விளக்குகளைக் காண முடியாது. சூரியனின் ஒளியே போதுமான வெளிச்சத்தை வழங்குகிறது. அதனால் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையே அரண் மனை பொதுமக்களின் பார்வைக்காகக் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.