Tamil Top 10 News: அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முதல் காளான் வளர்ப்புக்கு மானியம் வரை - டாப் 10 நியூஸ்..!
Tamil Top 10 News: அமெரிக்கா சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வானிலை அப்டேட், காளான் வளர்ப்புக்கு மானியம் உள்ளிட்ட காலை டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
Morning Tamil Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விமான நிலையத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, நடிகர் நெப்போலியன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
ஐசிசி தலைவர் ஜெய்ஷாவை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்
ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய்ஷாவை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சாதனையாளரை அனைவரும் கைத்தட்டி வரவேற்போம். ஜெய்ஷா ஒரு சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், விக்கெட் கீப்பர்; இந்திய கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த ஆல் ரவுண்டர். ஒரு மனதாக ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்." என்று தெரிவித்துள்ளார்.
அமலாக்க துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை மீண்டும் தனது வாதங்களை முன்வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்
10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் விநியோகிக்கப் படுகிறது. தமிழகத்தில் மார்ச் 26 - ஏப்ரல் 8 வரை, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் 91.55% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், இன்று காலை 10 மணி முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெறலாம். தனித்தேர்வர்கள், பொதுத்தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!
1. சென்னை
2. காஞ்சிபுரம்
3. செங்கல்பட்டு
4. திருவள்ளூர்
5. கன்னியாகுமரி
6. திருநெல்வேலி
7. தேனி
8. தென்காசி
9. நீலகிரி
10. கோவை
11. திருப்பூர்
ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கோலாகலமாக தொடங்குகிறது வேளாங்கண்ணி பெருவிழா!
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்.8 வரை நடைபெற உள்ள விழாவில், பிற மாநிலங்கள், நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு மாதாவின் ஆசியை பெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று தொடங்குவதால், உள்ளூர் விடுமுறை அறிவித்து நாகை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக் தொழிற்சங்கம் குற்றச்சாட்டு
தமிழகம் முழுவதும் குறைவான மது விற்பனை நடந்த டாஸ்மாக் கடைகளில் கடந்த சில நாட்களாக அதிகாரிகள் ஆய்வு செய்து, ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தொழிற் சங்கத்தினர் குற்றச்சாட்டுகின்றனர்.
போக்குவரத்தில் மாற்றம்
சென்னை பெசண்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய பெருவிழா காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளது சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை.
பி.எட் வினாத்தாள் லீக்
இரண்டாம் ஆண்டு பி.எட் படிப்புக்கான 4வது செமஸ்டர் வினாத்தாள் லீக்கான விவகாரம். வெளியான வினாத்தாளை திரும்ப பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. நடத்தும் creating an inclusive school என்ற பாடத்துக்கான வினாத்தாள் லீக்கானது. இன்று காலை 10 மணிக்கு தேர்வு துவங்கும் முன்பாக இணையதளம் வாயிலாக புதிய வினாத்தாள் அனுப்பப்படும் எனவும் உயர் கல்வித் துறை அறிவிப்பு. கடந்த 27ம் தேதி தொடங்கிய பி.எட் படிப்புக்கான தேர்வுகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது
காளான் வளர்ப்புக்கும் இனி மானியம்
தமிழகத்தில் உண்ணக் கூடிய காளான் வளர்ப்பு, வேளாண் சாகுபடியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. காளான் முக்கிய உணவுப் பொருளாக மாறி வருவதால், அதன் தேவையும் அதிகரித்துள்ளது. இதையொட்டி, மொட்டுக் காளான், பால் காளான் வகைகளை வளர்ப்பது, வேளாண் சாகுபடி கீழ் கொண்டு வரப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் விவசாயத்திற்கு கிடைக்கும் அரசின் அனைத்துவித மானிய உதவிகளும் காளான் வளர்ப்பவர்களுக்கும் கிடைக்க உள்ளது.
டாபிக்ஸ்