ADMK: 'திமுகவில் இன்பநிதிக்கு பாசறை அமைத்தவர் அதிமுகவுக்கு தாவல்!' மாஸ் காட்டிய எடப்பாடியார்!
”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்களுடன் இன்பநிதி படமும் இடம்பெற்றதுடன் போஸ்டரில் ‘எதிர்காலமே...’ என எழுதப்பட்டு இருந்தது”
இன்பநிதிக்கு பாசறை அமைத்ததால் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட திருமுருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி கால்பந்து வீரராக உள்ளார். இவர் திமுகவில் இதுவரை எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ’இன்பநிதி பாசறை’ என்ற பெயரிலான போஸ்டர் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி விமர்சனங்களை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்களுடன் இன்பநிதி படமும் இடம்பெற்றதுடன் போஸ்டரில் ‘எதிர்காலமே...’ என எழுதப்பட்டு இருந்தது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் செப்டம்பர் 24ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் ”மண்ணை பிலக்காமல் விதைகள் முலைப்பதில்ல போராட்ட களமின்றி வெற்றிகள் கிடைப்பதில்லை” என்ற பிழையான வாசகங்களும் அந்த போஸ்டரில் இடம்பெற்றிருந்தது.
இந்த போஸ்டரை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பாசறை மாநில செயலாளர் பொறுப்பில் உள்ள டாக்டர் முக.திருமுருகன் மற்றும் மாநில பாசறை ஒருங்கிணைப்பாளர் க.செ.மணிமாறன் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்த போஸ்டர் குறித்து சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், கட்ந்த செப்டம்பர் 3ஆம் தேதி அன்று இதற்கு காரணமானவர்களை சஸ்பெண்ட் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். அதில், புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் க.செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட திருமுருகன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.