தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மன்னார் வளைகுடாவில் 14 சதவீதம் புல்வெளி குறைந்தது! கடல் வளம் குன்றுவதால் காத்திருக்கும் ஆபத்து! நிபுணர்கள் எச்சரிக்கை!

மன்னார் வளைகுடாவில் 14 சதவீதம் புல்வெளி குறைந்தது! கடல் வளம் குன்றுவதால் காத்திருக்கும் ஆபத்து! நிபுணர்கள் எச்சரிக்கை!

Priyadarshini R HT Tamil
Apr 21, 2023 07:20 AM IST

Seagrass Meadows at Gulf of Mannar : மன்னார் வளைகுடா பகுதியில் கடல் புல்வெளி பரப்பு குறைந்ததற்கான காரணங்களை கண்டறிந்து சரிசெய்யாமல், கடல் புல்வெளிகளை வளர்த்தெடுப்பது சரியல்ல. அரசு கடல் பாதுகாப்பு மண்டலங்கள் அமைத்தும், அவை கடல்புற்களின் அழிவைத் தடுக்க போதுமானவையாக இல்லை.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மன்னார் வளைகுடாவில், தமிழக அரசு அதன் வனத்துறை மூலம் 96 லட்சம் ரூபாய் செலவழித்து, 4 லட்சம் டன் கார்பனை சேமிக்க 600 ஹெக்டேர் கடல் புல்வெளியை அதிகப்படுத்தவும், 300 ஹெக்டேர் பரப்பில் கடல்பாசி வளர்க்கவும் திட்டமிட்டுள்ளது. (இந்தப் பகுதியில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட காப்பாபைகஸ் அல்வாரெஸி கடற்பாசி அங்குள்ள பவளப்பாறைகளை கணிசமாக அழித்து, அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேளையில், 2 சதவீதம் ஊடுறுவும் காப்பாபைகஸ் அல்வாரெஸி கடற்பாசி மட்டுமே அகற்றப்பட்டுள்ளது என்றும், எஞ்சியுள்ள கடல்பாசியை அகற்ற தமிழக வனத்துறை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும், அது பேராபத்தாக முடியலாம் என அறிவுறுத்திய நிலையில், இன்னமும் அரசு அது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் தாமதிக்கிறது)

சதுப்பு நிலக்காடுகளை 1,050 ஹெக்டேரில் உருவாக்கி, அதன் மூலம் வெப்ப மண்டலக்காடுகளைக் காட்டிலும் கார்பனை உள்வாங்குவதில் 35 மடங்கு அதிக திறனுள்ள கடல் புல்வெளிகளை உருவாக்கி, நீல கார்பனை சேமித்து, புவிவெப்பமடைதலைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் பருவநிலை மாற்றக்குழு திட்டம் வகுத்து, அதனை செயல்படுத்த தூத்துக்குடியில் உள்ள சகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் அப்பணி ஒப்படைக்கப்பட உள்ளது. இத்தகைய பணியில் அந்நிறுவனத்திற்கு முன் அனுபவம் உள்ளது. 2011 முதல் 2020 வரை 10 ஆண்டுகளில் 14 ஏக்கர் பரப்பில் அந்நிறுவனம் செயற்கையாக கடல்புல்வெளி அமைத்து அதில் அனுபவம் பெற்றுள்ளது. ஒரு ஏக்கர் கடல் புல்வெளி அமைக்க ரூ.8 முதல் ரூ.10 லட்சம் செலவாகிறது. அதை கணக்கில் கொண்டால் ரூ.96 லட்சத்தில் சுமார் 10 ஏக்கர் கடல் புல்வெளி அமைக்க வாய்ப்புள்ளது.

ஆய்வுகள்(2016)படி, மன்னார் வளைகுடா பகுதியில் 152 சதுர கி.மீ. அளவு கடல் புல்வெளிப்பரப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. (இந்தியா முழுவதும் சுமார் 517 சதுர.கி.மீ. பரப்பில் கடல் புல்வெளி உள்ளது) மன்னார் வளைகுடா பகுதியில் 13 வகை கடல்புற்கள் இருப்பதாகவும், முக்கியமாக தல்லாசியா, சிரிங்கோடியம், சைமோடோசியா வகை புற்கள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1989-2015 இடைப்பட்ட காலத்தில் கடல் புற்களின் பரப்பு மன்னார் வளைகுடா பகுதியில் 14 சதவீதம் குறைந்துள்ளது என்றும், உலக அளவில் ஐ.நா. அறிக்கை 2020ன் படி, ஆண்டுக்கு 7 சதவீதம் பரப்பு கடல் புற்களின் அளவு குறைந்து வருவதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. ஒரு சதுர கி.மீ. பரப்பில் உள்ள கடல் புற்கள் 83,000 மெட்ரிக் டன் கார்பனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு சிரமமின்றி சேமிக்க முடியும். கடல் புல்வெளிகள் துடுப்பு மீன்கள், கடின ஓடுடைய மீன்கள், பிற மீன்களுக்கு உணவளித்து மீன்வளம்/கடல் வளத்தை காக்கின்றன.

கடல் புல்வெளிகள் குறைவதற்கான முக்கிய காரணங்களாக,

ஆய்வாளர்கள், பாலாஜி தேவராஜன், ராகவன் பாண்டிசாமி, அனந்தராமன் அடங்கிய குழு ஆன்லைனில் கடந்த 18ம் தேதி வெளியிட்ட ஆய்வு கட்டுரையில் சுட்டிக்காட்டுபவை -

தொழிற்சாலை வளர்ச்சி/அதன் மூலம் கடலில் கலக்கும்கழிவுகள்

கடலோரப் பகுதிகளில் பூச்சிக்கொல்லி அல்லது உர மருந்துகள் கடலில் கலப்பது (குறிப்பாக நைட்ரஜன்-நைட்ரஜன் பாசிகளின் வளர்ச்சியை அதிகப்படுத்தி கடல்புற்களுக்கு தேவையான சூரிய ஒளியை கிடைக்காமல் செய்து அழிவை ஏற்படுத்துகிறது)

நகர்மயமாதல் அதிகரிப்பும், அதையெட்டிய கழிவு பாதிப்புகளும்

அதிகரிக்கும் துறைமுக கட்டுமானங்கள்

அதிக படகுகள், வலைகளை கீழ்வரை கொண்டு சென்று இழுத்தல்

கட்டுப்பாடில்லா சுற்றுலாத்துறை வளர்ச்சி/அதன் மூலம் ஏற்படும் சூழல் சீர்கேடுகள்

அதிகரிக்கும் புவிவெப்பமடைதல் பிரச்சனை- அதனால் அதிகரிக்கும் கரியமிலவாயு தாக்கம்/கடலில் அமிலத் தன்மை அதிகரித்தல்,

நகர கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் செய்யப்படாமல், அப்படியே கடலில்கொட்டுவது, அதை அரசு கண்டுகொள்ளாமல் விடுவது

சுறா, பெரிய திருக்கை மீன்கள் குறைந்து, அதனால் கடலாமைகளுக்கு அச்சுறுத்தல் குறைந்து, கடலாமைகளால் புல்வெளிக்கு ஏற்படும் ஆபத்து

கப்பல் போக்குவரத்திற்காக தோண்டுதல்

வண்டல் மண் படிதலின் அளவு என பல்வேறு காரணங்கள் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் புல்வெளி பரப்பு குறைந்ததற்கான காரணங்களை கண்டறிந்து சரிசெய்யாமல், கடல் புல்வெளிகளை வளர்த்தெடுப்பது சரியல்ல. அரசு கடல் பாதுகாப்பு மண்டலங்கள் அமைத்தும், அவை கடல்புற்களின் அழிவைத் தடுக்க போதுமானவையாக இல்லை. எனவே, கடல் புல்வெளியின் அழிவிற்கான காணங்களை கண்டறிந்து, அவற்றை களையாமல், கடல் புல்வெளிகளைக் காக்க 96 லட்சம் தமிழக வனத்துறை செலவிட திட்டமிட்டுள்ளது எதிர்பார்த்த பலனை கொடுக்குமா என சுற்றுசூழல் ஆர்வலர் மருத்துவர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்