Tamilisai: 'நாங்க ஜெயிச்சா மறைமுகம்; திமுக எதிர்க்கட்சியா இருந்தா ஒரு நிலைப்பாடு, இப்போ ஒரு நிலைப்பாடு’- கிழித்த தமிழிசை
Tamilisai: பாஜகவில் மீண்டும் இணைந்த தமிழிசை, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வசைபாடினார்.
Tamilisai: தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பொறுப்புகளில் இருந்து விலகிய தமிழிசை செளந்தர்ராஜன், பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து மீண்டும் பாஜகவின் உறுப்பினர் ஆனார்.
அதன்பின், பாஜக நிர்வாகிகள் முன்னிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ''கடுமையான கட்சி பணி செய்ததால் தான் மீண்டும், போட்டியிட வாய்ப்பு தரவுள்ளனர். இதில் எந்த மேஜிக்கும் இல்லை. இது ஆளுநராக இருந்த தமிழிசைக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் தான் கட்சியில் சீட் கொடுக்கப்படுகின்றது. இதை ஒரு வாய்ப்பாகத் தான் கருதுகிறேன். ஆளுநராக இருக்கும்போது திமுகவை விமர்சிக்க முடியவில்லையே என நினைத்தது உண்டு. அவ்வாறு என்னிடம் திமுகவை விமர்சிக்க எண்ணற்ற காரணங்கள் உண்டு. அதைச் சொன்னால் நீங்களும் தாங்கமாட்டார்கள். அவர்களும் தாங்கமாட்டார்கள்(சிரித்துக்கொண்டே). நிறைய இருக்கிறது. நாங்கள் எல்லாம் களத்தில் குதித்து இருப்பது அந்த களங்கத்தை துடைக்கவே களத்தில் குதித்திருக்கிறோம். மரியாதைக்குரிய கிஷன் ரெட்டி இங்கு இருக்கிறார். முதலமைச்சர்கள் ஆளுநர்களை மதிப்பது இல்லை. நேர்மையான ஆளுநரான எனக்கு எந்த ஒரு புரோட்டாகாலும் கொடுக்காமல் ஒரு முதலமைச்சர் இருந்தார். எந்தவித கொடியேற்றத்தையும் கொடுக்காமல் ஒரு முதலமைச்சர் இருந்தார். ஆளுநர் உரையினையே கொடுக்கவிடாமல், ஒரு முதலமைச்சர் நடந்துகொண்டார். அப்போது எல்லாம் முதலமைச்சரை கேள்விகேட்க மாட்டார்கள். இன்னொன்று கேட்கிறேன், அவர்களுக்கு எல்லாம் ஆளுநர் பதவி தேவையே இல்லை என்றால், 18 ஆண்டுகளுக்கும் மேலாக, கூட்டணியில் மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். ஏன் ஆளுநர்கள் அவசியமில்லை என்று இப்போது சொல்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் ஆளுநரை குற்றம்சாட்டுகிறார்கள்.
ஆளுநரால் பலன் இல்லை என்றால், எதிர்க்கட்சியாக இருக்கும்போது அடிக்கடி ஏன் ராஜ்பவன் கதவினைத் தட்டினீர்கள்? அதனால் எதிர்க்கட்சியினராக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு. ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு வைத்திருப்பதை மக்கள் புரிந்து இருக்கிறார்கள். இன்றைக்குக் கூட தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளார்கள், அதிகாரமிக்க 361ஆவது பக்கம் நீக்கம் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படியென்றால், இத்தனைநாட்களாக என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள். மத்தியில், மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும்போது அதனை நீக்கப்பரிந்துரை கொடுத்தீர்களா?
தமிழ்நாடு அரசு என்னவேணும் என்றாலும் சொல்லலாம். இங்கு இருக்கும் ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இருக்கும் பிரச்னை பற்றி பேசவில்லை. ஆனால், தமிழ்நாடு அரசு, ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுத்திருக்கலாம்.
நாங்கள் அதிமுக போன்ற கட்சி இல்லாமலேயே நாங்கள் தேர்தலை சந்திக்கமுடியும் என எங்களை நாங்கள் வலுப்படுத்தியிருக்கிறோம் என்று தான் அர்த்தம்.
நாங்க நல்ல இடத்துக்கு வந்திருக்கோம். அதைத்தான் சொல்கிறோம். பாஜக கட்சியில் பல கட்சியினர் கூட்டணி சேர்ந்துள்ளனர். எல்லா கட்சிகளுக்கும் பலம் இருக்கிறது என்பதைத்தான் நாங்கள் உணர்கிறோம்.
தமிழ்நாட்டில் திமுக தேர்தல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலமாகத்தானே ஓட்டுப்போட்டு ஜெயித்தார்கள். அவர்கள் ஜெயித்தால் நேரடி வெற்றி. நாங்கள் ஜெயித்தால் மறைமுக வெற்றியா, சிதம்பரம் அந்த கூட்டணியில் தானே இருக்கிறார். அதுகுறித்துப்பேசச் சொல்லுங்கள்.
என்னைப் பொறுத்தவரை, நான் இங்கே தமிழ்நாட்டில் போட்டிபோட்டு, மக்களவை உறுப்பினர் ஆகி, நாடாளுமன்றத்தில் பேசவே, அதாவது ஸ்பீக்கர் ஆக இருக்கவே போட்டியிடுகிறேன். நீங்கள் நினைக்கும் ஸ்பீக்கராக போட்டியிடவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராகிப் பேசவே நான் ஆசை. 400ல் நான் ஒருவள். அதில் நான் தெளிவாக இருக்கிறேன்’’என்றார்.
டாபிக்ஸ்