Anbumani: ’கூலிப்படையை ஒழிக்க உத்தரப்பிரதேசத்தை தமிழ்நாடு பின்பற்ற வேண்டும்’ அன்புமணி ராமதாஸ் பேட்டி
”இந்த கூலிப்படையில் உள்ளவர்கள் வெறும் 16, 17 வயதில் உள்ளார்கள். இன்னும் மீசை கூட முளைக்கவில்லை, இவர்களுக்கு கஞ்சா, சாராயம், 10 ஆயிரம் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள்”
செங்கல்பட்டு மாவட்டத்தில் 50 நாட்களில், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் 3 பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 20 நபர்களுக்கு மேல் கொடூரமான முறையில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 50 நாட்களில் பாமகவை சேர்ந்த 3 முக்கிய நிர்வாகிகள் திட்டமிட்டு கொடூரமான முறையில் கூலிப்படையை ஏவி வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளார்கள். இதற்கு காவல்துறையிடம் பலமுறை வலியுறுத்தியும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை.
முதலமைச்சரின் கீழ் இயக்கும் காவல்துறை கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். இந்த கூலிப்படை கலாச்சாரம் கடந்த 10 ஆண்டுகளாக ஊடுருவி தற்போது உச்சம் அடைந்துள்ளது.
காவல்துறைக்கு யார் கொலையாளிகள், குற்றவாளிகள் என்று தெரியும். தமிழக காவல்துறை என்றால் ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகராக இருக்கும் என்று பெயர் உள்ளது. ஆனால் சமீப காலமாக செங்கல்பட்டு மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது.
கூலிப்படை கலாச்சாரத்திற்கு முக்கிய காரணம் கஞ்சா, மதுதான். இதனை முதலமைச்சர் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி கட்டுப்படுத்த வேண்டும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடக்கும் கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிப்பது போன்று தமிழ்நாட்டிலும் ஒழிக்க வேண்டும். இதில் தயவு தாட்சண்யம் பார்க்க கூடாது.
இந்த கூலிப்படையில் உள்ளவர்கள் வெறும் 16, 17 வயதில் உள்ளார்கள். இன்னும் மீசை கூட முளைக்கவில்லை, இவர்களுக்கு கஞ்சா, சாராயம், 10 ஆயிரம் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள்.
நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசுகிறார்கள், துப்பாகி கலாச்சாரம் பரவுகிறது. கடலூரில் எம்.எல்.ஏ இருக்கும் மேடையில் நாட்டு வெடிகுண்டு வீசப்படுகிறது. நேற்று சென்னையில் எங்கள் மாவட்ட செயலாளர் வண்ணை சத்தியாவின் மகனை ஒரு கும்பல் தாக்கியதுடன் அவர் வீட்டில் குண்டு வீசி உள்ளார்கள்.
முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாராஷ்டிரா, கர்நாடகாவில் திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிரான சட்டம் உள்ளது. அதை போன்ற சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும்.
உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்காவிடில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆங்காங்கே போராட்டம் நடத்துவோம்.
மகாபலிபுரம் அருகே உள்ள நெமியில் அந்த காலத்தில் ஆளவந்தார் அறக்கட்டளை நிறுவிய ஆயிரம் காணி ஆளவந்தாரின் நிலங்களை தமிழக அறநிலையத்துறை சார்ந்த அதிகாரிகள் தனியாரிடம் குத்தகைக்கு விட திட்டமிட்டுள்ளார்கள். இது அமைச்சருக்கு தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது. இந்த 1330 ஏக்கர் இடமும் வன்னியர்கள் சொத்து.
இந்த நிலத்தை அறநிலையத்துறையை சேர்ந்தவர்கள் பங்குபோட்டு பிரித்து குத்தகைக்கு கொடுக்க முயல்வதை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும். இதை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது. இது யாருக்கும் கொடுக்க கூடாது. ஒரு செண்ட் நிலம் கூட யாருக்கும் கொடுக்க கூடாது. அதை மீறி யாருக்காவது கொடுத்தால் பாமக, வன்னியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த தயங்கமாட்டோம்.
கேள்வி:- குற்றவாளிகளை பிடிக்கும் காவல்துறைக்கே பிரச்னைகள் உள்ளதே?
காவல்துறைக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை தர வேண்டும். கோவையில் டிஐஜி விஜயக்குமார் தற்கொலைக்கு என்ன காரணம் என்று முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். வேலை பளு காரணமாக காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் கலாச்சாரம் அதிகமாகி கொண்டுள்ளது.
கேள்வி:- தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள பாமகவுக்கு அழைப்பு வந்துள்ளதா?
எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் கலந்து கொள்வது குறித்து எங்கள் கட்சி முடிவு செய்யும்.
கேள்வி:- தமிழகத்தில் நடைபெறும் கொலைகள் குடும்பத் தகராறால் நடந்துள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் சொல்லி உள்ளாரே?
அவர் இப்போதுதான் டிஜிபியாக வந்துள்ளார். எப்படி அவர் எல்லா கொலைகளும் குடும்பத் தகராறு காரணமாக நடந்துள்ளது என்று சொல்ல முடியும். குடும்பத் தகராறோ, சொத்து தகராறோ, அல்லது அரசியல் பிரச்னையோ எதுவாக இருந்தாலும் திட்டமிட்டு கூலிப்படையை வைத்து கொலை செய்பவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்கள். கூலிப்படைகளுக்கு பயத்தை சங்கர் ஜிவால் அவர்கள் கொடுப்பார்களா என்பது என் கேள்வி
கேள்வி:- தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக உள்ளதா?
டெல்லியில் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம். தமிழகத்தில் கூட்டணி குறித்து கட்சி முடிவு செய்யும்.