Tamil Nadu Assembly: சுற்றித் திரியும் மாடுகளுக்கு ஆப்பு ரெடி! வருகிறது புதிய சட்டம்! அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
Tamil Nadu Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இன்றைய தினம், நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை, மீன்வளம், பால் வளத்துறைகளின் மீதான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெறுகின்றது.
சாலைகளில் விடப்படும் கால்நடைகளை ஏலம் விடுவதற்கான சட்டம் கொண்டவர உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு கூறி உள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இன்றைய தினம், நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை, மீன்வளம், பால் வளத்துறைகளின் மீதான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெறுகின்றது. அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு பதில் அளித்து, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்து பேசினார். அப்போது, கொரானா காலத்தில் சரியாக கையாளதால் தெருநாய்கள் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. நிறைய பணக்காரர்கள் நாய்களை வளர்கின்றனர். பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்று எவ்வளவோ சொல்லியும், தவறுகள் நடந்துவிடுகின்றது. நாய்களை பிடித்து கருத்தடை செய்து, மக்களிடம் இருந்து பாதுகாக்கும் பணியை அரசு எடுப்போம்.
மாடு உள்ளிட்ட கால்நடைகளை பொறுத்தவரை ஆதரவு இல்லாமல் சாலையில் விடப்படும் மாடுகளை முதல் முறை பிடித்தால் 5 ஆயிரம், 2வது முறை பிடித்தால் 10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும். மூன்றாவது முறையாக மாடு பிடிபட்டால், ஏலம் விடுவதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபடும். அதற்கான சட்டம் இயற்றும் நடவடிக்கைகளில் எங்கள் துறை ஈடுபட்டு உள்ளது என அமைச்சர் கூறினார்.
அதிமுக வெளிநடப்பு
முன்னதாக இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய உடன் இன்றும் கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் ‘கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்’ குறித்து விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் செய்தியாளர் சந்திப்பு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், இன்றைய தினம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் சட்டமன்றத்தில் பேச அனுமதி கேட்டோம். ஆனால் சட்டப்பேரவை தலைவர் அனுமதி மறுத்துவிட்டார்.
பலமுறை நாங்கள் குரல் கொடுத்தோம். இது மக்களின் உயிர் பிரச்னை, தினந்தோறும் மக்கள் இறந்து கொண்டு இருக்கின்றனர். இதுவரை எத்தனை பேர் மது அருந்தி உள்ளனர். எத்தனை பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள், இதுவரை எத்தனை பேர் இறந்து உள்ளனர். இப்போது சிகிச்சையில் உள்ளவர்கள் நிலை என்ன என்பது குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால், பேச அனுமதி கேட்டோம். ஆனால் இன்றும் சட்டப்பேரவை தலைவர் அனுமதி மறுத்துவிட்டார் என கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9