Tamil Nadu Assembly: 10.5% வன்னியர் இட ஒதுக்கீடு! திமுக-பாமக இடையே காரசார விவாதம்! முதல்வர் பதில்! வெளிநடப்பு!
Tamil Nadu Assembly: பின் தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். மாநில அரசு செய்ய முடியாது, மத்திய அரசை கேளுங்கள் என்று சொல்வது என்ன நியாயம். விவாதத்தில், பேச சபாநாயகர் அனுமதி மறுக்கிறார் என பாமக குற்றச்சாட்டு
’நீங்கள் இருக்கும் கூட்டணி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால்தான் 10.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும்’ என பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணிக்கு முதலமைசர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.
10.5% இடஒதுக்கீடு தொடர்பாக விவாதம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சமூகத்திற்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பேசினார்.
இதற்கு அமைச்சர்கள், அரசியல் ரீதியான கருத்து என அமைச்சர்கள் ரகுபதி, எஸ்.எஸ்.சிவங்கர் ஆகியோர் பதில் அளித்த நிலையிலும் விவாதம் தொடர்ததால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
அப்போது “இப்போது நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்குப்பிறகுதான் இதை அமல்படுத்த முடியும். ஏற்கெனவே, பீகார் மாநிலத்திலே இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. கோ.க. மணி அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டுமென இங்கே பேசி, அதற்கு நம்முடைய அமைச்சர் பெருமக்கள் உரிய விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டுமென்று சொன்னால், சாதிவாரியான கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒன்றிய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரலாம் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அதற்கு திரு. கோ.க. மணி அவர்கள் ஆதரவு தரவேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.
பாமக வெளிநடப்பு! சபாநாயகர் மீது குற்றச்சாட்டு
முதல்வரின் பதிலை தொடர்ந்து ஜி.கே.மணி பேச முயன்ற நிலையில், சபாநாயகர் அனுமதி மறுத்ததால் பாமக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, ஜி.கே.மணி, பேரவைத் தலைவர் அமைச்சர்களுக்கு வாய்ப்பை தந்துவிட்டு, என்னை பேச வாய்ப்பு மறுக்கின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு இரண்டும் தனித்தனி பிரச்னை. உள் ஒதுக்கீடு தர மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துவது தனிப்பிரச்னை, உள் ஒதுக்கீடு தருவது தனிப்பிரச்னை ஆகும்.
இஸ்லாமியர்கள், அருந்ததியர்களுக்கு ஏற்கெனவே உள் ஒதுக்கீடு தரப்பட்டு உள்ளது. இந்தியாவில் எல்லா மாநிலங்களில் உள் ஒதுக்கீடு தர மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் பேரவையில் அமைச்சர்கள் திசைத்திருப்புகின்றனர். கூட்டணிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும் சம்பந்தமே இல்லை. பள்ளத்தில் உள்ளவர்களை கைத்தூக்கிவிடுவது போல், பின் தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். மாநில அரசு செய்ய முடியாது, மத்திய அரசை கேளுங்கள் என்று சொல்வது என்ன நியாயம். விவாதத்தில், பேச சபாநாயகர் அனுமதி மறுக்கிறார் என கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
Google News: https://bit.ly/3onGqm9