Loksabha Election 2024: ’கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் தரக் கூடாது!’ சிவகங்கை காங்கிரஸ் கமிட்டி போர்க்கொடி!
”ஏற்கெனவே கார்த்தி சிதம்பரத்திற்கு சிவங்கை தொகுதியை தரக்கூடாது என்றும், நேரடியாக திமுகவே சிவகங்கையில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் சிவகங்கை மாவட்ட திமுக நிர்வாகிகள் கட்சித் தலைமையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது இருந்தனர்”
கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் தரக்கூடாது என சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சிவகங்கை தொகுதி எம்.பியாக இருந்து வருகிறார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் அளித்த பேட்டியில், மோடிக்கு எதிரான தலைவர் யாரும் இல்லை என்றும், ராகுல் காந்தி கூட மோடிக்கு நிகரான தலைவர் இல்லை என்றும், ஆனாலும் முறையாக வியூகம் அமைத்தால் மோடியை வீழ்த்தலாம் என்றும் பேசி இருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்த நிலையில், சிவகங்கை சத்தியமூர்த்தி நகரில் நடந்த சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கே.ஆர்.ராமசாமி, சுந்தரம் மற்றும் 80க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கார்த்தி சிதம்பரத்திற்கு கட்சித் தலைமை சீட்டு தரக்கூடாது. ராகுல் காந்திக்கு எதிராக பேசிய கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கார்த்தி சிதம்பரத்திற்கு சிவங்கை தொகுதியை தரக்கூடாது என்றும், நேரடியாக திமுகவே சிவகங்கையில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் சிவகங்கை மாவட்ட திமுக நிர்வாகிகள் கட்சித் தலைமையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது இருந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதில் கடும் சிரமங்கள் இருந்து வருகிறது. இந்த நிலையில் உட்கட்சியிலும் யாருக்கு சீட் தர வேண்டும், யாருக்கு சீட் தரக்கூடாது என்ற பிரச்னை வெடித்துள்ளது.