Savukku Shankar: ’சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ்! விடியல் அரசா? யோகி ஆதித்யநாத் அரசா?’ திமுகவை விளாசும் சீமான்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar: ’சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ்! விடியல் அரசா? யோகி ஆதித்யநாத் அரசா?’ திமுகவை விளாசும் சீமான்!

Savukku Shankar: ’சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ்! விடியல் அரசா? யோகி ஆதித்யநாத் அரசா?’ திமுகவை விளாசும் சீமான்!

Kathiravan V HT Tamil
Aug 13, 2024 06:24 PM IST

விடியல் அரசெனக் கூறிக்கொண்டு உபி யோகி ஆதித்தியநாத் ஆட்சியை பின்பற்றி , மக்களின் துன்பத் துயரங்களையும், அவலங்களையும், இன்னல்களையும் பேசுவோரின் குரல்வளையை நெரிக்கும் சகிப்புத்தன்மையற்ற திமுக அரசின் அடாவடித்தனங்களுக்கும், அட்டூழியப்போக்குகளுக்கும் மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை

Savukku Shankar: ’சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ்! விடியல் அரசா! யோகி ஆதித்யநாத் அரசா!’ திமுகவை விளாசும் சீமான்!
Savukku Shankar: ’சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ்! விடியல் அரசா! யோகி ஆதித்யநாத் அரசா!’ திமுகவை விளாசும் சீமான்!

அரச பயங்கரவாதம்!

சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அறிவித்தது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஊடகவியலாளரும், அரசியல் திறனாய்வாளருமான தம்பி சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தை ஏவியிருக்கும் திமுக அரசின் செயல் ஏற்கவே முடியாத அரசப்பயங்கரவாதம். 

சனநாயக விரோத நடவடிக்கை 

பெண் காவலர்கள் குறித்துப் பேசியது உட்படப் பல்வேறு வழக்குகளில் தம்பி சவுக்கு சங்கர் பிணை பெற்றுள்ள நிலையில், குண்டர் சட்டமும் ரத்தாகியதால் ஒரு சில நாட்களில் விடுதலையாகலாம் எனும் வாய்ப்பிருந்தபோது, இப்போது மீண்டும் குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியிருப்பது மோசமான சனநாயக விரோத நடவடிக்கையாகும்.

கடும் கண்டனத்திற்கு உரியது

கஞ்சா வைத்திருந்தாரெனப் புனையப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் பிணை பெற்றுவிட்டப் பிறகும், அதனை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் குண்டர் சட்டத்தை செலுத்துவது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு. சவுக்கு சங்கர் தவறாக பேசியதற்கு அவர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு இந்தியத் தண்டனைச் சட்டமே போதுமானது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும், அதனை மீறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை  

மக்களுக்கெதிரான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு, பொது அமைதியைக் கெடுக்கும் சமூக விரோதிகள், வளக்கொள்ளையர்கள், வன்முறையாளர்கள், பாலியல் குற்றவாளிகள் போன்றோரைக் கைதுசெய்து ஓராண்டு முடக்குவதன் மூலம் குற்றங்களைத் தடுக்க பயன்படுத்தப்படும் குண்டர் எனும் தடுப்புக்காவல் சட்டத்தை, அவதூறு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது பயன்படுத்துவது வெளிப்படையான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும். 

பாசிசத்தின் உச்சம் 

அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மேல் பொய்யாக வழக்குகளைப் புனைவதும், சிறைக்குள் வைத்துத் தாக்குவதும், பல முறை குண்டர் சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதுமான திமுக அரசின் தொடர் போக்குகள் யாவும் பாசிசத்தின் உச்சமாகும்.

ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை (NIA) போன்ற அதிகார அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரையும், போராட்டக்காரர்களையும் முடக்குகிறதென்றால், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு உளவுத்துறையையும், காவல் துறையையும் பயன்படுத்தி ஊடகவியலாளர்களையும், சனநாயகச்சக்திகளையும் அச்சுறுத்த முற்படுகிறது. “சமூக வலைத்தளங்களை மக்களின் குறைகளை அறிந்துகொள்ள உதவும் கருவியாக அரசு பார்க்க வேண்டுமே ஒழிய, குறைகளைச் சொல்லும் நபர்களை அடக்கி ஒடுக்க முயற்சிக்கக்கூடாது” என சென்னை உயர்மன்றத்தின் மாண்பமை நீதிபதிகள் கூறியப் பிறகும், அடக்குமுறையை ஏவி, சவுக்கு சங்கரைப் பழிவாங்கத் துடிக்கும் திமுக அரசின் கொடுங்கோல் போக்கை வன்மையாக எதிர்க்கிறேன்.

முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை 

ஆகவே, விடியல் அரசெனக் கூறிக்கொண்டு உபி யோகி ஆதித்தியநாத் ஆட்சியை பின்பற்றி , மக்களின் துன்பத் துயரங்களையும், அவலங்களையும், இன்னல்களையும் பேசுவோரின் குரல்வளையை நெரிக்கும் சகிப்புத்தன்மையற்ற திமுக அரசின் அடாவடித்தனங்களுக்கும், அட்டூழியப்போக்குகளுக்கும் மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லையெனக் கூறி எச்சரிக்கிறேன் என கூறி உள்ளர். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.