தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Classical Tamil Conference: சென்னையில் 2025 ஜூனில் 2-ம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Classical Tamil Conference: சென்னையில் 2025 ஜூனில் 2-ம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Karthikeyan S HT Tamil
Mar 16, 2024 01:06 PM IST

CM MK Stalin: இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 16) வெளியிட்ட அறிக்கையில், "இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது.

தமிழ் மொழி; தொன்மை – தனித்தன்மை – பொதுமைப் பண்பு - பண்பாடு – உயர்ந்த சிந்தனை – இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும்.

தமிழை, உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார். வளம்பெற்ற நம் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்து தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.

கழக அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளாக தமிழக அரசு தனிப்பெரும் நிலையில் தகுதிவாய்ந்த தமிழறிஞர்களுக்குப் பல்வேறு விருதுகளை வழங்குவதோடு, நாடறிந்த தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவதும், பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, நாகரிக வாழ்வு முறைமைகளை நுண்மையோடு பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்து, அதன் தொடர்ச்சியாக பொருநை அருங்காட்சியகத்தையும் அமைத்து வருவது தமிழ்ப் பண்பாட்டின் மணிமகுடங்களாகும்.

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் அனைத்தும் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில், அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் பல்வேறு துறை சார்ந்த பாடநூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பெரும் பணியினைச் செய்து வருவதும், செயற்கை நுண்ணறிவைப் போற்றும் வகையில் கணித் தமிழ் மாநாடு 24 நடத்தியதும், தாய்த்தமிழை உயிர்ப்போடும் வனப்போடும் வளர்த்தெடுக்கும் கழக அரசின் முயற்சிகளாகும்.

மேலும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் அயலகத் தமிழர் தினமாக ஜனவரி-12-ஆம் நாளினை தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாக 2024-ஆம் ஆண்டு அயலகத் தமிழர் மாநாட்டினை வெற்றியோடு நடத்தியதும், பார்போற்றும் வகையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தியதும்; தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்குவதும், திருக்கோயில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவதுமான ஆகச்சிறந்த பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறோம்.

“இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்பார் பாவேந்தர். நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும்." என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்