Savukku Shankar: சவுக்கு சங்கருக்கு அடுத்த சறுக்கல்! ஆட்கொணர்வு மனு வழக்கில் இருந்து நீதிபதிகள் விலகல்!
இதனால் புதிதாக வரும் நீதிபதி முதலில் இருந்து வழக்கின் கடந்து வந்த பாதையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் சிறையில் இருந்து சவுக்கு சங்கர் வெளியே வருவது மேலும் காலதாமதம் ஆகி உள்ளது.
சவுக்கு சங்கர் தொடர்பான ஆட்கொணர்வு வழக்கில் இருந்து விலகுவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சவுக்கு சங்கரின் தாயார் தொடர்ந்த மனு
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்குகளுக்கு எதிராக சவுக்கு சங்கரின் தாய் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. மேலும் பிற வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறி இருந்தது.
தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
இந்த நிலையில் சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எஸ்.எம்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்து உள்ளது. மேலும் இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாகவும் கூறி உள்ளது.
நீதிபதிகள் விலகல்
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் தரப்பு வாதங்களை முன் வைத்தனர். இந்த வழக்கை ஏற்கெனவே டிவிசன் பெஞ்ச் விசாரித்து, காவல்துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக மனுதாரர் கருத்துகளை தெரிவித்து உள்ளார்.
எனவே இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறோம். அவர் வேறு அமர்வுக்கு அனுப்பி வைப்பார். இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை என இரண்டு நீதிபதிகள் அமர்வு கூறியது.
சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கில் இருந்து நீதிபதிகள் விசாரிக்காமல் விலகுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே நீதிபதி சுவாமிநாதன் அடங்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வில் இது போன்று நடைபெற்றது. பின்னர் இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி ஜெய்ச்சந்திரன் விசாரித்து மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பினார்.
இதன் பின்னர்தான் நீதிபதிகள் எஸ்.எம்.ரமேஷ், சுந்தரம் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த நீதிபதிகளும் வழக்கு விசாரணையில் இருந்து விலகி உள்ளனர்.
வழக்கு விசாரணை தாமதம் ஆகும் நிலை
இதனால் புதிதாக வரும் நீதிபதி முதலில் இருந்து வழக்கின் கடந்து வந்த பாதையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் சிறையில் இருந்து சவுக்கு சங்கர் வெளியே வருவது மேலும் காலதாமதம் ஆகி உள்ளது.
சவுக்கு சங்கர் கைதின் பின்னணி
யூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர், ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் அதன் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு அளித்த பேட்டியில், “காவல்துறையில் பணியாற்றும் பெண்காவலர்கள்” குறித்து பேசிய கருத்து சர்ச்சை ஆனதால் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார்.
சிறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
இந்த கைது குறித்து பேசிய அவரது வழக்கறிஞர் கே.கோபாலகிருஷ்ணன், சிறை அதிகாரிகள் சவுக்கு சங்கரை காவலில் வைத்து சித்திரவதை செய்ததாக கூறினார். மே 4ம் தேதி இரவு துணியில் சுற்றப்பட்ட பிளாஸ்டிக் பைப்களால் சிறை அதிகாரிகள் சங்கரை தாக்கியதாக வழக்கறிஞர் குற்றம் சாட்டி இருந்தார். அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசாரும், திருச்சி சைபர் கிரைம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கஞ்சா வழக்குப்பதிவு
இது மட்டுமின்றி அவரது வீடு மற்றும் அலுவலங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சவுக்கு சங்கர் சங்கர் கஞ்சா பயன்படுத்தியதாக கூறி மேலும் ஒரு வழக்கை பதிவு செய்து இருந்தனர்.
மேலும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாக ரெட்பிக்ஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் காவல்துறையினர் கைது செய்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி சவுக்கு சங்கர் மீதும், பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
டாபிக்ஸ்