RB Udhaya Kumar vs Sekar Babu: “அமைச்சர் சேகர்பாபு விஷத்தை கக்கியிருக்கிறார்”.. எச்சரிக்கை விடுத்த ஆர்.பி.உதயகுமார்!
R. B. Udhayakumar vs Sekarbabu: அம்மா உணவக ஆய்வு குறித்து அமைச்சர் சேகர்பாபு கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
முதல்வரின் நடவடிக்கையால், அதிமுக காணாமல் போய்விடுமோ என்ற பயம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வந்துவிட்டது என்று திமுகவின் புதிய ஊது குழலில் ஒன்றான அமைச்சர் சேகர்பாபு விஷத்தைக் கக்கி இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று வேளையும் குறைந்த விலையில் ஏழை, எளியவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரும் வயிறார சாப்பிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், ஜெயலலிதா 2013-ஆம் ஆண்டு அம்மா உணவகங்களைத் துவக்கி சுவைமிக்க இட்லி, பொங்கல், கலவை சாதங்கள், சப்பாத்தி போன்ற உணவு வகைகளை மலிவு விலையில் வழங்கினார்.
ஏழை, எளிய, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் ஏகோபித்த ஆதரவு காரணமாக சென்னை மாநகர் மற்றும் அரசு பொது மருத்துவமனைகள், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் சில பேரூராட்சிகள் என தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் துவக்கப்பட்டன.
ஜெயலலிதாவை தொடர்ந்து, அதிமுக அரசிலும் அம்மா உணவகங்கள் தரமான, சுவையான உணவை மக்களுக்கு அளித்து வரப்பட்டன. குறிப்பாக, கரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் அனைத்துத் தொழில்களும் முடங்கியபோது, தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களுக்கு வருகை தரும் அனைவருக்கும் விலையில்லாமல் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது. இதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
எங்களது ஆட்சிக் காலத்தில் அம்மா உணவகங்களுக்குத் தேவையான அரிசி மற்றும் கோதுமை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாகவும்; சமையலுக்குத் தேவையான காய்கறிகள் கூட்டுறவு பண்டக சாலைகளில் இருந்தும் வழங்கப்பட்டு வந்தது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டன.
`அம்மா’ என்ற சொல்லைக் கேட்டாலே காதில் ஈயம் காய்ச்சி ஊற்றியதுபோல் பதறும் இந்த திமுக அரசின் ஆட்சியாளர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை அடித்து நொறுக்கியும், பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்தும் படிப்படியாக அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்தினர்.
அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் 90 சதவீதம் குறைக்கப்பட்டது; பழுதடைந்த உபகரணங்கள் சீர்செய்யப்படவில்லை; சென்னையில் சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சிக்கு இடம் தேவை என்று பல அம்மா உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன.
அம்மா உணவக வாடிக்கையாளர்கள் 2021-க்கு முன்பு இருந்த அம்மா உணவகங்களையும், அதன் தற்போதைய நிலையையும் கண்ணீருடன் ஒப்பிடுகின்றனர். அம்மாவின் பெயரால் உருவான அம்மா உணவகங்களைத் தொடர்ந்து திறம்பட நடத்தி ஏழை, எளியவர்களின் பசிப் பிணியைப் போக்க வேண்டும் என்றும், அம்மா உணவகங்களை மூடக்கூடாது என்றும், எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பேசியதைத் தொடர்ந்தும், எங்களது முன்னாள் அமைச்சர்கள் திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் மூடப்படுவதையும், செயல்படாமல் இருந்ததையும் அவரவர் பகுதிவாழ் மக்களிடம் எடுத்துரைத்ததைத் தொடர்ந்து, திமுக அரசு அம்மா உணவகங்களை மூடும் முயற்சியைக் கைவிட்டது.
உண்மை நிலை இவ்வாறு இருக்க, எதிர்வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை கருத்திற்கொண்டு, நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் 19.7.2024 அன்று தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, தனது எக்ஸ் வலைதளத்தில் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் என எதிர்க்கட்சிகள் புரளிகளைக் கிளப்பியதாக முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.
திமுக அரசின் முதல்வரின் அம்மா உணவகம் பற்றிய எக்ஸ் வலைதள செய்தியைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி கடந்த மூன்றாண்டுகளில் முதலமைச்சரோ, அமைச்சர்களோ, மேயரோ, எவரேனும் நேரில் சென்று அம்மா உணவகங்களை ஆய்வு செய்தனரா என்று கேள்வி எழுப்பி இருந்தார். எடப்பாடி பழனிசாமி அறிக்கையிலே இருந்த உண்மை, இந்த அரசின் முதலமைச்சரையும், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளையும் உறுத்தியவுடன், ஒருவர் மாற்றி ஒருவர் அறிக்கை விடுகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மந்திரி சேகர்பாபு, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது என்று, கடந்த மூன்றாண்டுகளாக மாற்றி மாற்றி ஒரே குரலில் பேசிய பொய்யை நம்பி, பருவ மழையின் போது பெய்த சிறு மழைக்கே சென்னையில் பல இடங்களில் தேங்கிய தண்ணீராலும், 5 நாட்கள் மின்சாரம் இல்லாமலும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பருவ மழைக் காலங்களில், இப்படி பொய் கூறி சென்னை மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியவர்தான் இந்த சேகர்பாபு.
அதேபோல், திமுக அரசின் நான்கு நிதிநிலை அறிக்கைகளிலும், வட சென்னை வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக கூறிய சேகர்பாபு, இன்றுவரை எத்தனை கோடி ரூபாய்க்கு வடசென்னையில் வளர்ச்சிப் பணிகளை செய்து முடித்துள்ளார் என்று கூற முடியுமா? ஆட்சிப் பொறுப்பேற்று 38 மாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், மொத்தம் 208 பணிகள் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டதில் ஒரு பணிகூட முடிக்கப்படவில்லை என்று அவரே தனது பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த திமுக அரசு செய்த ஒரே சாதனை, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், சுமார் 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை தமிழக மக்கள் தலையில் சுமத்தியதுதான். இந்த 3.50 லட்சம் கோடி கடனில் எவ்வளவு மூலதனச் செலவு செய்திருக்கிறார்கள் என்று நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரும், சேகர்பாபுவும் தமிழக மக்களிடம் விளக்கத் தயாரா?
தமிழக மக்கள் தலையில் மூன்று முறை மின் கட்டண உயர்வு, பலமுறை பால் விலை உயர்வு, சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் கட்டண உயர்வு, இது போதாது என்று குப்பைக்கு வரி, பத்திரப் பதிவுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு, உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்வு என்று பொருளாதார ரீதியாக தமிழக மக்களைத் தாக்கிய இந்த அரசு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, வழிப்பறி என்று அனைத்து விதங்களிலும் தமிழக மக்களுக்கு, சிரமத்திற்கு மேல் சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியின் ஆணித்தரமான குற்றச்சாட்டுக்களுக்கு முறையாக பதில் சொல்ல வக்கற்ற முதல்வர் ஸ்டாலின், அதிமுகவில் இருந்து ‘அற்ற குளத்து அருநீர்ப் பறவைகளாக’ ஆதாயம் தேடி திமுக-வில் அண்டிப் பிழைக்க வந்தவர்களை விட்டு குரைக்க வைப்பது வாடிக்கையாகிவிட்டது.
தமிழக அரசியலில் ஜெயலலிதாவால் வளர்த்து ஆளாக்கப்பட்டு, அவருக்கே துரோகம் செய்துவிட்டு 2006-2011 காலக் கட்ட மைனாரிட்டி திமுக ஆட்சியின் காலில் சரணடைந்து, இன்றைக்கு பதவி இருக்கிறது என்ற மமதையில் மந்திரி சேகர்பாபு வானத்துக்கும், பூமிக்கும் தாவி குதிக்கிறார்.
முதல்வரின் நடவடிக்கையால், அதிமுக காணாமல் போய்விடுமோ என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்துவிட்டது என்று திமுகவின் புதிய ஊது குழலில் ஒன்றான சேகர்பாபு விஷத்தைக் கக்கி இருக்கிறார். இப்படி இருப்பதால் தான், இந்த நபரை ஸ்நேக் பாபு என்று மக்கள் அழைக்கிறார்கள் போலும். இவரைவிடப் பெரிய மகானுபவர்கள் எல்லாம் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து, எம்ஜிஆரால் தீய சக்தி என்று வர்ணிக்கப்பட்ட கூட்டத்தோடு சேர்ந்த பின்பும் இந்த இயக்கத்தை ஆட்டவோ, அசைக்கவோ முடியவில்லை.
“அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா” என்ற எம்ஜிஆரின் வைர வரிகளை சிரமேற்கொண்டு, அரசியலில் வீரநடை போடுபவர் எடப்பாடி பழனிசாமி. சில்வண்டுகளை விட்டு ரீங்காரமிடுவதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து வீண்வம்பு வளர்த்தால், அவர்கள் பாணியிலேயே எசப்பாட்டு பாட எங்களுக்கும் தெரியும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
இச்சூழ்நிலையை மடை மாற்ற ஒரு சேகர்பாபு அல்ல, எத்தனை சேகர்பாபுக்கள் வந்தாலும் தமிழக மக்களின் மனதை மாற்ற முடியாது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களின் கோபம் எதிரொலிக்கும். ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் இந்த திமுக அரசு, நாங்கள் செயல்படுத்திய திட்டங்களைத்தான் இன்றும் செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இந்த அம்மா உணவகம் ஒன்றே `ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைக் கூறி, இனியாவது உங்கள் மூளையில் உதித்த நல்ல வளர்ச்சித் திட்டங்களை தமிழக மக்களுக்குத் தாருங்கள், வேலை வாய்ப்பை உருவாக்குங்கள் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9