ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி! பாஜகவுக்கு டாட்டா காட்டும் மக்கள்! கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி! பாஜகவுக்கு டாட்டா காட்டும் மக்கள்! கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்!

ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி! பாஜகவுக்கு டாட்டா காட்டும் மக்கள்! கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்!

Kathiravan V HT Tamil
Oct 01, 2023 05:52 PM IST

”ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல்”

ராஜஸ்தான் தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள்
ராஜஸ்தான் தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள்

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இடையிடையே ஆட்சிக்கு எதிராக அதே கட்சியை சேர்ந்த இளம் தலைவரான சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியது சர்ச்சைகளை கிளப்பியது. மத்தியப்பிரதேசத்தில் எப்படி ஜோதிராத்திய சிந்தியா பாஜகவில் இணைந்து காங்கிரஸ் ஆட்சியை கலைக்க உதவியது போல் ராஜஸ்தானிலும் சச்சின் பைலட் பாஜகவில் இணைந்து காங்கிரஸ் ஆட்சியை கலைப்பார் என்ற ஊகங்கள் ஊடகங்களில் எழுந்தன. இருப்பினும் கட்சித் தலைமை கேட்டுக் கொண்டதற்கு இணங்க சமாதானம் அடைந்த சச்சின் பைலட் ஆட்சிக்கு இணக்கமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டிப்போட்டுக் கொண்டு பணிகளை தொடங்கி உள்ளது. அந்த வகையில் ‘ஸ்மால் பாக்ஸ் இந்தியா’ என்ற தனியார் கருத்துக் கணிப்பு நிறுவனம் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்காக 23 ஆயிரம் பேரிடம் கருத்துகளை கேட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

கடந்த தேர்தலில் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ் 100 இடங்களையும், பாஜக 73 இடங்களையும் பெற்று இருந்தன.

இந்த நிலையில் வரவிருக்கும் தேர்தலில் 104 தொகுதிகளை வென்று காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பாஜக 90 தொகுதிகளையும் மற்றவை 6 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குஜராத், டெல்லி மாநகராட்சி, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் ஸ்மால் பாக்ஸ் இந்தியா அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்புகள் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.