Double NEET Exam: ’இரட்டை அடுக்கு நீட்! இன்னும் மோசம் ஆக்கும்!’ மத்திய பாஜக அரசை விளாசும் அன்புமணி ராமதாஸ்!
Double NEET Exam: ஒரு பிழைக்கு மாற்றாக இன்னொரு பிழை என்பதன் அடிப்படையில், ஓரடுக்கு நீட் தேர்வுக்கு பதிலாக இரட்டை அடுக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்வது சரியல்ல. எனவே, இந்தத் திட்டத்தை கைவிட்டு நீட் தேர்வை ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும்.

இரட்டை அடுக்கு நீட் தேர்வு ஊரக மாணவர்களுக்கு இன்னும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
பெரும் பிழையை செய்வதற்கு ஒப்பானதாகும்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடப்பாண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், முறைகேடுகளைத் தடுப்பதற்காக இரட்டை அடுக்கு நீட் தேர்வை இரு அமைப்புகளின் மூலம் நடத்த மத்திய அரசு திட்டம் வகுத்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இரட்டை அடுக்கு நீட் தேர்வை நடத்தும் முடிவு ஒரு பிழையை மறைப்பதற்காக இன்னொரு பெரும் பிழையை செய்வதற்கு ஒப்பானதாகும்.
மத்திய அரசு ஆய்வு
எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5&ஆம் நாள் நடைபெற்றது. அதில் வினாத்தாள் கசிவு தொடங்கி, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது வரை ஏராளமான முறைகேடுகள் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் புதிய நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற பெரும்பான்மையான மாணவர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்றம், வெகுவிரைவில் தீர்ப்பளிக்கவுள்ளது. இத்தகைய சூழலில் தான் இரட்டை அடுக்கு நீட் தேர்வை, இரு தேர்வு அமைப்புகள் மூலம் நடத்துவது பற்றி மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
