தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணம் வழங்குக-ஓபிஎஸ்

ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணம் வழங்குக-ஓபிஎஸ்

Divya Sekar HT Tamil
Jan 17, 2023 10:25 AM IST

Jallikattu Death : பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணம் அளிக்க ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டுகள் உலக பிரசித்தி பெற்றவையாகும். இதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் தினமான நேற்று முன்தினம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைப்பெற்றது. இந்தப் போட்டியை தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000 காளைகள், 335 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் பாலமேட்டில் நேற்று 9 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக விளங்கிய அரவிந்த் மாடு முட்டி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை வழங்கப்பட்டது. அரவிந்த்ராஜ் வயிற்றில் மாடு குத்தியதில் குடல் சரிந்து பலத்த காயமடைந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், நவல்பட்டு பகுதி சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த புதுக்கோட்டை மாவட்டம் கண்ணகோன்பட்டியை சேர்ந்த அரவிந்த் என்பவரும் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணம் அளிக்க ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டம், பாலமேட்டில் நடைபெற்ற தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு அதிக காளைகளை பிடித்த ஜல்லிக்கட்டு வீரர் திரு. ஆர். அரவிந்தராஜ் மற்றும் திருச்சி மாவட்டம், நவல்பட்டு பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டை காணவந்த திரு. மா. அரவிந்த் ஆகியோர் எதிர்பாராதவிதமாக படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

அரவிந்த்ராஜ் மற்றும் அரவிந்த் ஆகியோரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று(ஜன 17) மதுரை மாவட்டம், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணியளவில் தொடங்குகியது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியைசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்