EPS Vs Ponmudi: ’முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என உளறுவதா?’ ஈபிஎஸ்க்கு பொன்முடி பதிலடி
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 56,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 55,173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மரக்காணம் தாலுகா, எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராய பாதிப்பால் 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 13 பேர் இயற்கை எய்தி உள்ளனர்.
மீதம் 52 பேர் புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் 7 பேரும், முண்டியம்பாக்கத்தில் 50 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் சிகிச்சைக்கு முதல்வர் நேரடியாக வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லி, நிவாரண தொகையும் வழங்கப்பட்டு உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக பார்த்துள்ளோம், திருவண்ணாமலை, சேலம், ஸ்டேன்லி ஆகிய மருத்துவமனைகளில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறப்பு மருத்துவக்குழு ஒன்று இங்கேயே இருந்து கண்காணிக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், இதை அரசியலாக்க வேண்டும் என்று செயல்படவில்லை, ஆனால் அரசியலாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றெல்லாம் உளறிக்கொண்டிருக்கிறார். அவரது காலத்திலேயே இதெல்லாம் நடந்துள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். எங்கள் ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்களே இல்லை என்ற சொன்னார். 10.9.2001ஆம் ஆண்டில் அம்மையார் ஆட்சியிலேயே கள்ளச்சாராய மரணத்தால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு 25,000 ரூபாய் கொடுத்துள்ளார்கள். ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது 6.10.2021ஆம் ஆண்டிலும் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது.
ஈபிஎஸ் முதல்வராக இருந்த 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை திண்டுக்கல்லில் 8 பேரும், காஞ்சிபுரத்தில் 7 பேரும், கடலூரில் 4 பேரும் இறந்தார்கள்.
அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 56,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 55,173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் விற்ற 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களை எடப்பாடி பழனிசாமி பார்க்கக்கூட இல்லை.
தமிழ்நாடு முதலமைச்சரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்ல ஈபிஎஸ்க்கு அருகதை உள்ளதா?. இதனை அரசியலாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் 1668 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், குட்காவை தடுத்து நிறுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் எந்த கட்சியினராக இருந்தாலும் நிச்சயமாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.