Muthusamy: எம்ஜிஆருக்கு நெருக்கம்! ஜெயலலிதாவுக்கு அணுக்கம்!ஈபிஎஸ்க்கு உறவு! ஸ்டாலினின் நம்பிக்கை! யார் இந்த முத்துசாமி!
“எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகியோரின் அமைச்சரவைகளில் இடம்பெற்ற வெகுசில அமைச்சர்களில் முக்கியமானவராக உள்ளார் ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏவாக உள்ள முத்துசாமி”
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வசமிருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவுக்கும், முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இலாகாகள் திரும்பபெறப்பட்டாலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொங்கு மண்டலத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அமைச்சரவை அனுபவம் வாய்ந்த ஈரோடு முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை தரப்பட்டது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
யார் இந்த முத்துசாமி
எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகியோரின் அமைச்சரவைகளில் இடம்பெற்ற வெகுசில அமைச்சர்களில் முக்கியமானவராக உள்ளார் ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏவாக உள்ள முத்துசாமி.
தனது அமைதி மற்றும் நிதானமான அணுகுமுறையால் எந்த கடினமான வேலைகளையும் கணக்கச்சித்தமாக முடிப்பவர் என்ற பெயர் இவருக்கு எப்போதும் உண்டு.
எம்ஜிஆர் ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சர்
அதிமுக முதன் முதலில் தேர்தலை சந்தித்த 1977 தொடங்கி 1980 மற்றும் 1984 ஆகிய காலகட்டங்களிள் ஈரோடு தொகுதியில் வென்ற முத்துசாமி எம்ஜிஆரின் அமைச்சரவையில் 8 ஆண்டுகள் போக்குவரத்து துறை அமைச்சர் பொறுப்பையும் வகித்துள்ளார்.
1991ஆம் ஆண்டு பவானி தொகுதியில் வென்று ஜெயலலிதா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த முத்துசாமி கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்தார்.
2010 முதல் திமுகவில்….
2011ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கிலும் 2016ஆம் ஆண்டு ஈரோடு மேற்கு தொகுதியிலும் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த முத்துசாமி 2021ஆம் ஆண்டு தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் வென்று ஸ்டாலின் அமைச்சரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சரானார்.
கொங்கு மண்டலத்தின் சீனியர்
தற்போது திமுகவில் கொங்கு மண்டலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கொங்கு வேளாளர் சமூகத்தின் அமைச்சர்களான செந்தில் பாலாஜி, மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோருக்கு சீனியராக அமைச்சர் முத்துசாமி விளங்குகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாவட்ட செயலாளராக இருந்து திமுக வெற்றி பெற முக்கிய பங்காற்றியவர் முத்துசாமி.
ஈபிஎஸ்க்கு நெருக்கமானவர்
மேலும் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் உறவினரான முத்துசாமி, கொலை வழக்கு ஒன்றில் சிக்கிய எடப்பாடி பழனிசாமியை பிரச்னை இல்லாமல் எதிர்தரப்பை சமாதானம் செய்து சிறை செல்லாமல் பார்த்துக் கொண்டதில் அன்றைய போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த முத்துசாமி முக்கிய பங்கு வகித்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.