LokSabha Election 2024: ’கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் தரக்கூடாது’ சிவகங்கை திமுகவினர் போர்க்கொடி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Loksabha Election 2024: ’கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் தரக்கூடாது’ சிவகங்கை திமுகவினர் போர்க்கொடி!

LokSabha Election 2024: ’கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் தரக்கூடாது’ சிவகங்கை திமுகவினர் போர்க்கொடி!

Kathiravan V HT Tamil
Jan 29, 2024 12:32 PM IST

”சிவகங்கை மக்களவை தொகுதி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கே விட்டுக் கொடுக்கப்படுவதாக நிர்வாகிகள் வேதனை”

கார்த்தி சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதியை தரக்கூடாது என மாவட்ட திமுகவினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
கார்த்தி சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதியை தரக்கூடாது என மாவட்ட திமுகவினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் தேதிக்கான அறிவிப்பை வரும் மார்ச் இரண்டாவது வாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த நிலையில் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை அமைக்க குழு அமைத்து, பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளது. 

திமுகவை பொறுத்தவரை திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

நேற்றைய தினம் முதல்கட்டமாக காங்கிரஸ் கட்சி உடனான தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குரிஷித், முகுல் வாஸ்னிக், கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மண்டலக்குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு மற்றும் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இன்றைய தினம் காலையில் சிவகங்கை, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனையில், சிவகங்கை மக்களவை தொகுதி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கே விட்டுக் கொடுத்துள்ளதாகவும், இந்த முறை திமுகவே நேரடியாக சிவகங்கையில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  

மேலும் சிவகங்கை எம்.பியாக  உள்ள கார்த்தி சிதம்பரம், தன்னிச்சையாக செயல்படுவதாகவும், திமுகவுக்கு எதிரான கருத்துகளை கூறுவதாகவும் கூறியதுடன், கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் தரக்கூடாது என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.