தமிழ் செய்திகள்  /  Elections  /  Lok Sabha Election 2024: Selvaperunthagai Was Appointed As The President Of The Tamil Nadu Congress Party And The Reason

Lok Sabha Election 2024: ‘கரூர் பஞ்சாயத்து.. மேலிட உரசல்.. அழகிரி OUT.. செல்வப்பெருந்தகை IN..’ மாற்றத்தின் பின்னணி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Feb 20, 2024 09:59 AM IST

நீக்கப்பட்ட கே.எஸ்.அழகிரி, நியமிக்கப்பட்ட செல்வப்பெருந்தகை, பின்னணியில் நடந்த சம்பவங்கள்!

தமிழக காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள தலைமை மாற்றத்திற்கான காரணங்கள்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள தலைமை மாற்றத்திற்கான காரணங்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

பிள்ளையார் சுழி போட்ட கரூர் மோதல்!

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் என்பதெல்லாம் காலந்தொட்டே இருக்கின்ற விசயங்கள் தான். அதனால் அதை ஒரு பெரிய விசயமாக பேசமுடியாது. அதே நேரத்தில் காங்கிரஸ்காரர்கள் கூட்டம், ஆலோசனை என்று ஏதாவது ஒரு இடத்தில் ஒருங்கிணைந்தால், அந்த இடத்தில் களேபரம் தான். அப்படி தான், ஆன்லைன் மூலமாக நடந்த ஒரு ஆலோசனை கூட்டத்தில் கரூர் எம்.பி., ஜோதிமணி- கே.எஸ்.அழகிரி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒருபடி மேலே போய், ஜோதிமணியை அழகிரி கடிந்து கொண்டார் என்கிறார்கள். இந்த புகார், நேரடியாக டில்லி தலைமைக்குச் சென்றியிருக்கிறது. இது தான் கே.எஸ்.அழகிரி மீதான முதல் புகார்.

மேலிட பார்வையாளருடன் உரசல்!

திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு நியமிக்கப்பட்ட முக்கிய மேலிட பார்வையாளர் ஒருவருடன், கே.எஸ்.அழகிரிக்கு சிறிய உரசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் அழகிரி கறார் காட்டியதும், சிலருக்கு சீட்டு தவிர்க்கவேண்டும், கொடுக்க வேண்டும் என்கிற நிபந்தனைகளும், அந்த உரசலுக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த உரசலும், தலைமைக்கு நேரடியாக சென்றிருக்கிறது. 

உள்குத்து.. பெருங்குத்து!

ஒவ்வொரு கட்சியிலும், தங்களுக்கு சீட் வேண்டும் என்று விருப்பத்தை தெரிவிப்பது தான் வழக்கம். மாறாக, காங்கிரஸ் கட்சியில் இந்த முறை, ‘இவருக்கு சீட் கொடுக்க கூடாது’ என்று போர் கொடி தூக்கினார். அதிலும், காங்கிரஸ் பிரபலம் சிதம்பரத்தின் மகனுக்கே சீட் கொடுக்க கூடாது என, காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம் போட்டதெல்லாம், உட்கட்சி மோதலின் உச்சம். மாநில கட்சி தலைமையை மீறி இது நடக்கிறதா? அல்லது மாநில தலைமையின் ஆசியுடன் நடக்கிறதா? என்கிற சந்தேகம் இயல்பாகவே வரும். அப்படி தான், இந்த விவகாரமும் டில்லி தலைமையை கொஞ்சம் யோசிக்க வைத்தது.

இது தான் த்ரிலிங்கான டைம்!

மேலே சொன்ன காரணங்கள் எல்லாமே, காங்கிரஸ் கட்சியில் புதிதல்ல. அப்படி இருக்க, தேர்தல் நேரத்தில் மாநில தலைமையை மாற்றும் அவசியம் ஏன் வந்தது? அதுவும், தொடர்ந்து வெற்றியை தன் கட்சிக்கு பெற்றுத்தந்த கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அதன் பின்னணியில் இரு முக்கிய விசயங்கள் இருக்கின்றன. 

  1. கூட்டணி பேச்சுவார்த்தையில் கறார்

திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி கறாராக இருந்ததாக கூறப்படுகிறது. திமுக ஒற்றை இலக்க எண்ணிக்கையை முன்வைத்த போது, அதை அழகிரி அடியோடு மறுத்துள்ளார். அத்தோடு இரட்டை இலக்கத்தை பெறுவதில் தீவிரமாக இருந்தார். மேலும், திமுக தரப்பில், சில காங்கிரஸ் பிரபலங்களுக்கு சீட் வழங்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதே போல, சில பிரபலங்கள் முன்பு போட்டியிட்ட தொகுதியை தன் வசமாக்கும் விருப்பத்தையும் தெரிவித்துள்ளது. இதற்கு கே.எஸ்.அழகிரி உடன்படவில்லை. இது திமுக தரப்பிற்கு கொஞ்சம் நெருக்கடியை தந்துள்ளது. 

2. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி

திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவிய நிலையில், திமுக குடும்பத்தின் தொலைக்காட்சி ஒன்றி்ல், கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தார். அதில் தங்கள் கட்சிக்கு 15 சீட்டுகள் வேண்டும் என்று உறுதியாக தெரிவித்தார். பொதுவெளியில் தன் விருப்பத்தை அழகிரி தெரிவித்தது, திமுக தலைமைக்கு பயங்கர கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, திமுக பேச்சுவாரத்தைக்கு இடையே, அதிமுக தரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இது திமுக தலைமையின் காதுகளுக்குச் செல்ல, பயங்கர டென்ஷன் ஆகியுள்ளனர். தங்கள் அதிருப்தியை டில்லி தலைமைக்கு அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.  

அழகிரி அவுட்.. செல்வப்பெருந்தகை இன்!

ஏற்கனவே பல பஞ்சாயத்துக்கள் வந்திருந்த நிலையில், பிரதான கூட்டணி கட்சியான திமுகவும் அதிருப்தி தெரிவித்ததால், கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக உடனே மாநில தலைமையை மாற்ற முடிவு செய்தது காங்கிரஸ் தலைமை. இந்த முடிவுக்கு வந்ததுமே, காங்கிரஸ் கட்சியிலிருந்து அடுத்த தலைமைக்கான பெரிய லிஸ்ட் போயுள்ளது. அனைத்தையும் பரிசீலித்த காங்கிரஸ் தலைமை, இப்போதைக்கு திமுகவுடன் நெருக்கமான ஒருவர் தான் வேண்டும் என முடிவு செய்தது. அந்த வகையில் சட்டமன்றத்தில் திமுகவின் குரலாகவே மாறிக் கொண்டிருந்த செல்வப்பெருந்தகையை தேர்வு செய்தது காங்கிரஸ் தலைமை. இதன் மூலம், திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் சுமூகமாக இருக்கும் என்று நம்புகிறது காங்கிரஸ் தலைமை. இன்னொரு புறம், திமுக தரப்பிலும் செல்வப்பெருந்தகையை தான் பரிந்துரைத்தாக ஒரு தகவலும் கூறப்படுகிறது. 

எது எப்படியோ, செல்வப்பெருந்தகை எண்ட்ரி திமுக தரப்பிற்கு மகிழ்ச்சி தான். அதே நேரத்தில் மாநில தலைவர் பொறுப்பை எதிர்பார்த்திருந்த பல காங்கிரஸ்காரர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அது எப்படி வெளிப்படுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

WhatsApp channel

டாபிக்ஸ்