Kodanadu Case : கொடநாடு வழக்கு.. கனகராஜ்க்கு 7 முறை வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு.. விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி!
Kodanadu Case: கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் இறப்பதற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து 7 முறை அழைப்பு வந்ததை இன்டர்போல் காவல்துறை உதவியுடன் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டதுடன் அங்கு காவலாளியாக இருந்த ஓம்பகதூர் என்பவரும் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின் மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார், சந்தோஷ்சாமி ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு
கொடநாடு வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர்.
கடந்த மார்ச் மாதம் கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி எஸ்பி தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவில் சிறப்பு புலனாய்வு குழு, தடவியல் நிபுணர்கள் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
வெளிநாட்டில் இருந்து 7 முறை அழைப்பு
இந்நிலையில் கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் இறப்பதற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து 7 முறை அழைப்பு வந்ததை இன்டர்போல் காவல்துறை உதவியுடன் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் CBCID தரப்பில் ADSP முருகவேல் தலைமையிலான போலீசாரும், குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் ஜித்தின் ஜாய்,வாளையார் மனோஜ்,உதயகுமார், ஆகிய 3 பேரும் ஆஜராகினர்.
விசாரணை துவங்கியதும் அரசு வழக்கறிஞர்கள் சார்பில் கொட நாடு வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
மனு தாக்கல் செய்ய கால அவகாசம்
குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் பத்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜித்தின் ஜாய் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்தார். இதற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.
தொடர்ந்து சிபிசிஐடி தரப்பில் விசாரணை நிபுணர் குழு கொடநாடு பங்களாவில் ஆய்வு செய்த அறிக்கையின் நகலை குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞருக்கு வழங்குவது குறித்து அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜு இறப்பு குறித்தும், வாகன விபத்து குறித்தும் அறிகையில் உள்ளதாகவும், கொலை, கொள்ளை நடந்த சில தினங்களில் கனகராஜ்க்கு 7 முறை வெளிநாட்டிலிருந்து தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது.
அது குறித்தான தகவல்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளதால் இது போன்ற புலன் விசாரணை நடைபெறும் நேரத்தில் எதிரிகளுக்கு நிபுணர் குழு நகலை வழங்கினால் புலன் விசாரணை பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி அப்துல் காதர் உத்தவிட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்