தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Karnataka High Court Bans Handover Of Jayalalithaa's Jewelery To Tamil Nadu Government

Jayalalitha: ’ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தடை!’ ஜெ.தீபா வழக்கில் அதிரடி தீர்ப்பு!

Kathiravan V HT Tamil
Mar 05, 2024 01:58 PM IST

”நாளை தமிழ்நாடு அரசிடம் இந்த பொருட்களை ஒப்படைக்க இருந்த நிலையில், கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் மனு”

ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கும் உத்தரவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதிப்பு
ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கும் உத்தரவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 1996ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. 

அப்போது அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 11,344 புடவைகள், 750 காலணிகள், 91 கை கடிகாரங்கள், 28 கிலோ மதிப்பிலான 4தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 

பின்னர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால் , பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் கர்நாடக மாநில கருவூலத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. 

இந்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி எனவும், அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வெளி வந்த போது ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டன.

மேலும் இவர்களுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்றும், அதனை ஈடுகட்ட கைப்பற்றப்பட்ட நகைகளை ஏலம் விட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.  

இந்த நிலையில் ஜெயலலிதாவின் நகை மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலம் விடக்கோரி ராமமூர்த்தி என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் பொருட்களை கர்நாடக அரசு ஏலம் விடுதற்கு பதில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. இதற்கான பொருட்களை பெற தமிழக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும், பொருட்கள் பெற்று செல்வதை பதிவு செய்ய வீடியோ, போட்டோ கிராப்பர்கள் அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை நீதிபதிகள் விதித்து இருந்தனர். 

இந்த நிலையில் நாளை தமிழ்நாடு அரசிடம் இந்த பொருட்களை ஒப்படைக்க இருந்த நிலையில், கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அதில் இந்த சொத்து எங்களுக்கானது என கோரினர். 

இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய அரசுத்தரப்பு அவகாசம் கோரி உள்ள நிலையில், கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்துள்ள கர்நாடக உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 

IPL_Entry_Point